நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, February 29, 2016

மண்ணறை விஜயம் !

மண்ணறை விஜயம் !
.......................................
மெத்தென்றிருக்க அங்கே
மெத்தையில்லை கட்டிலுமில்லை
பளிங்குத்தரையும் இல்லை
பட்டு விரிப்புகளும் இல்லை
கட்டாந்தரையிலே கிடத்திவிடுவார்கள்!

தட்டுத்தடுமாறவேண்டும்
கும்மிருட்டு வெளிச்சமும் இல்லை!
குப்பென்று வியர்க்கும்
திறப்பதற்கு ஜன்னலுமில்லை
கதவுகளுமில்லை !
தாகமாக இருக்கும்
அருந்துவதற்கு பானங்களும் இல்லை
பாத்திரங்களுமில்லை!
உதவி தேவைப்படும்
உரத்துக்கூவினாலும்
ஒருவரும் வரவே மாட்டார்கள்!
கோடீஸ்வரன் ஒரு விநாடியிலே
பிச்சைக்காரனாகி விடுவான்!
உற்றார் உறவினர் இருந்தும்
ஓடியாட எத்தனையோபேர் இருந்திருந்தாலும்
ஒற்றையிலே உறங்குவான் !
கற்றை கற்றையாக காசை
எண்ணிக்கணக்கிட்டவனின்
கன்னத்தின்கீழே
எதற்குமே உதவாத
மண்ணாங்கட்டிகளை
மணக்கும் நீரில் தோய்த்து
வைபார்கள் !
பிணமென்ற சொல்லை
உனது பணத்தால்கூட மாற்ற முடியாது
ரணமென்றால் மருந்துகட்டி
ஆற்றிவிடலாம்
ஆனாலிதுவோ மருந்தேதுமில்லா
ம ரணம் ஆயிற்றே !
சத்தியமா சகோதரா எனக்கு மட்டுமல்ல
இது உனக்கும் ஒரு நாள்
நிச்சையம் நடக்கும்!
மு.இ.உமர் அலி
2016 Feb 29

Wednesday, February 24, 2016

கரியல் சைக்கல்!











கரியல் சைக்கல்!
................................
"ரெலீ'என்பது கம்பனிப் பேரு
இங்கிலாந்துதான் அது பிறந்த ஊரு
அதுதான் எங்கு வாப்பாட காறு
என்னை ஊரெல்லாம் ஏற்றியோடும் தேரு!


காலயில கல்முனைக்கு போகும்
அது திரும்பி வர பலமணி நேரமாகும்
பாதையில காற்றுப்போனா வீடுவந்து
சேர்வதற்கும் காலதாமதமாகும்!
சைக்களின் பின்னால இருக்கும்
ஒரு மரக் கரியல்
அதில தெரியும்
கலம்பக் கயிற்று வரியல் !
கரியலில் ஏறிக்குந்துவோம்
இருபக்கமும் கால்போட்டு அமருவோம்
சொரியலில் இருந்த அரிசியை
சாக்கிலே அள்ளிக்கட்டுவோம்
கடைகளுக்கு கொண்டு விற்ப்போம்!
கல்முனை சந்தைக்குப்போய்
வாப்பா வரும்போது
கரியலின் முதுகிலே ஒரு உரப்பை
அமர்ந்திருக்க
அதனுள்ளே சொரியலில்
பல சாமான்கள் இருக்கும்
இருபக்கமும்
அரைவாசி பழுத்த வாழைக்குலைகள்
தொங்கிவரும்
சில வேளை அவை நிலத்திலே
அரைத்துவரும்!
சந்தையில் இருந்து வாப்பா வரும்வரை
காத்திருக்கும் எங்களை தூரத்தே வரும் சைக்கிள்
கிரீஸ் போடாததால் ஏற்படும்
கிரீச்சிடும் ஒலி கவர்ந்திடும் !
நன்கு கனிந்த கொய்யா
நான் உள்ளே இருக்கின்றேன் என்பதை
பையை அவிழ்க்கமுன்னரே
நாறிச் சொல்லிடும்!
செருப்புப்போடாத சில்லுகள்
தெருப்பொருக்கிகளான
பளுத்துக்காய்ந்த நெருஞ்சிகளால்
பதம் பார்க்கப்படும்போது
புஸ்சென்று காற்றுப்போய்
பயணங்கள் பாதியிலே
நின்று விடும்!
ஏற்றங்கள் கால்களுக்கு சவாலாக
இறக்கங்கள் "பிரேக் "உடன் சண்டை பிடிக்கும்
மணியடிக்காத சந்திகள்
மோதலுடன் மட்டுமன்றி
சண்டைகளையும் பிறப்பிக்கும்!
சொகுசு வாகனமும் அதுதான்
எங்கள் கனரக வாகனமும் இதுதான்
புதுசு வாங்க ஏலா நிலைதான்
இதுவும் காலால் மீன் பிடிக்கும் வலைதான்
கரியல் சைக்கலில்
கன எடை ஏற்றினால்
கம்பிக்கட்டு விட்டுப்போகும்
பூட்டாத சைக்கிளை
பெருந்தெருவிலே விட்டால்
அது உன் கைவிட்டுப்போகும்!
அரிகாற்றுப் போனால்
பரிகாரமாய் கொஞ்சம்
பட்டுத்தேயிலையை டியூப்பிற்குள்
போட்டடித்தால் சரியாகிப்போகும்!
கணக்குப்பாடத்துக்கு
கொண்டு சென்றால் எல்லோரும்
அதுபோடும் சத்தத்ததையும்
அதன் அலங்கோலத்தையும் பார்த்து
ஏளனமாய் சிரிப்பார்கள் ,
அதனால் நான்
நடந்து செல்வது வழக்கமாகிவிட்டது!
வாப்பா காலஞ்சென்ற பின்னால்
கவனிப்பரற்றுக்கிடந்தது
அந்த ஈருருளி!
கனக்க உழைத்து
கரளாலே கருத்து
உருக்குலைந்த சைக்கிளை
ஒவ்வொரு நாளும் பார்க்கையில்
என் வாப்பாவின் உருவமும்
நான் கடந்து வந்த பாதையும் தெரியும்!
பாதுகாக்க நினைத்து
புழக்கடையில் பதுக்கிவைத்தேன்
பாவி யாரோ எடுத்துவிட்டான்
என் கனவுகளை கலைத்துவிட்டான்!
மு.இ.உமர் அலி
24. feb 2016