நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, December 23, 2013

“கொழுக்கட்டை”






“கொழுக்கட்டை”












கடிக்கும் போது
கடைவாயில் நீரூறும்
கடித்த இடத்தில் 
இடைக்கிடையே தேன் வடியும்!

தேங்காய் ,சர்க்கரை சேர்ந்திருக்கும்
பாங்காய் பாகும் ஏற்றிருக்கும்!

பயறும் பகுதியாய் சேர்ந்திருக்கும்
வயிறும் உப்பி பருத்திருக்கும்!

பிள்ளைத்தாய்ச்சி பெண்களுக்கு
பிள்ளை வாந்தி நின்றவுடன்
மாமி சுட்டு அனுப்பிடுவா !

கர்ப்பமான கொழுக்கொட்டை
வயிற்றில் குட்டியை சுமந்திருக்கும்
மருமகள் அதனை உண்ணனுமாம்
மாமியாரின் எதிர்பார்ப்பு!

பல்லு வைத்த கொழுக்கட்டை
பல்லு முழைக்கும் பிள்ளைக்கு
சொல்லுத்தெழிவாய் வருவதற்காம்
உள்ளே
நெல்லு வைத்துக் கொடுப்பாங்க
பிள்ளை அப்பனை ஏமாற்ற !

வண்டில் அவியும் சிலநேரம்
குண்டுச் சட்டியில் சுடுபடும் சிலநேரம்
பெண்டில் பிள்ளை எல்லாரும்
உண்டு களித்து இருப்பாங்க !

பேசாதிருக்கும் ஆட்களை
வாயில் என்ன கொழுக்கட்டையா?
சொல்லால் சொல்லி வையும்
பலகாரம்!

பொல்லால் அடித்து வீங்கியதை
கொழுக்கட்டைபோல வீங்கியதே
சொல்லால் சொல்லிக் காட்டிடுவார்
உவமானம் !


உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2013 12 23

Friday, December 20, 2013

பாழி இறைத்தல்
















பாழி இறைத்தல்

வயலெல்லாம் வாழவைத்த
வாய்க்கால்கள் வறண்டு போய்
வாய் திறந்து கிடக்கும்

வாய்க்கால் ஓரத்து
மருத மரங்கள் மட்டும்
அடியிலே கொஞ்சம் நீரை பிடித்து
சருகாலே மூடி வைக்கும்

அருகாலே போவோர்க்கு
சருகுச்சத்தம் சல சலக்கும்
பாளிக்குள்ளே பாம்பிருக்கும்
கோரப்பல் முதலையும் இருக்கும்

பயத்தாலே பலபேர்கள்
பக்கத்தாலும் போவதில்லை

கூட்டாளி கொஞ்சப்பேர்
கூட்டாகச்சேர்ந்து கொண்டு
வீட்டார்க்கு தெரியாமல்
கட்டடிக்கு செல்வோம் அன்று
கட்டடித்தும் இருப்போம் வகுப்புக்கு!

அத்தாங்கு சின்ன வாழி
குத்துக்கம்பு ,உரப்பைகள்
தூண்டிலும்தான்
ஆயுதமாய் கொண்டுசெல்வோம்

ஆளுக்கொரு வேலை
அலுக்காமல் செய்து
வாய்க்காலுக்கு
கிழக்காலே வரம்பு செய்து

ஓட்டை வாளியாலே
ஒருவன் நீரிறைக்க
மற்றவரில் பயம் குறைந்த ஒருவன்
அறுகு படர்ந்த மடுவோரம்
ஆராய்வான் கையவிட்டு !

அப்படியே பிடித்திடுவான் புல்லோரம்
அண்டியிருந்த செப்பலியை,
இப்படிப்போகும்போது முன்கையை
நண்டிடுக்க திடுக்கிட்டு
கத்திடுவான்!

அத்தாங்கால் அடிநீரை
அள்ளும் நேரம்
சிப்பாய்கள் போல
குட்டி மீசை காட்டி
முன்னலையில் நின்ற
கெளுத்தி மீன் எல்லாம்
அள்ளுப்பட
அகப்படக்கூடாதென்று
அரைவாசி மீன்
தப்பி ஓட
முகம் காட்டி மறையுமொரு பெரியமீனும்

மரவேரை சுற்றிநின்று
சில மீன்கள்
எட்டிப்பார்க்க மறுபடியும்
வருகிறாரா என்று வேவு செய்யும்
சில மீன்கள்

பயத்தாலே சுரிக்குள்ளே
தலையை மட்டும்
நுழைத்துவிடும் சிலமீன்கள்
பிடித்தாலும் அடித்திடுவேன்
வழைத்தாலும் முறித்திடுவேன்
வீரவசனம் பேசும் விரால்கள்

அடிப்பாழிக்குள்ளே
ஆற்று மீன்களின் அவசரக்கூட்டம்
அரக்க பரக்க
ஒருவர் மீது ஒருவர்
ஏறி எட்டிப்பார்க்க
பரபரப்பாய் நடை பெறும்!

அடுத்த கட்டம் என்ன வென்று
அலசி பேசுவார்கள்
விடுப்புப்பார்க்கும் சில சோம்பேறி
மீன்கள்!

முடிந்தவரை போராடு
முள்ளாலே குத்து
சுருப்பள்ளி வீசு
துள்ளிப்பாய்ந்து பாரு
முடியா விட்டால் மாய்ந்து விடு
இது தலைவரின் சேதி!

இத்தனைக்கும் இறைக்கின்ற
பொடியனுகள் பொறுப்பாரோ?
இடைநடுவில் புகுந்து கொண்டு
அத்தாங்ககால் போர்தொடுத்து
அநேகம் கைதிகளை அள்ளி வந்து
மணலிலே கொட்டி விட

சுங்கானை பிடிக்கவந்தான்
ஒருவன்
சுள்ளென்று ஒரு தாக்கல்
சுருக்கென்று ஏறும் வலி
துள்ளி குதித்துக்கொண்டே
குறுக்குமறுக்கும் ஓடிட்டான்!

கெழுத்தி அழுத்திப் பிடிக்கப்பட
எழுந்து கொள்ள முடியவில்லை
உழுவை ஒருமுயற்சியும்
செய்யவில்லை சுத்த சோம்பேறி
ராமன் ஆண்டாலும் ராவணன்
ஆண்டாலும் அதற்கொன்றுமில்லை

அதிகம் கதை பேசி
அங்குமிங்கும் நக்கரித்த
அவல் பனையான்கள்
அவசரமாய் பிடிபட்டு
உரப்பைகளுக்குள்
சிறை சென்றன!

முள்வீரன் செப்பலியும்
சொல்வீரன் பொட்டியானும்
கருக்கு வாழ் வீரன் ஆரல்
சுருக்கென பாயும் குறட்டை
உருவத்தில் சிறிதான ஐரல்
நீள்மீசை ஜாவா மொத்தமாக
உரப்பைக்குள்!

பிடிபடாமல் நழுவிடும் விலாங்கு
தப்பிக்கொண்டு திரியுமங்கு
தடி கொண்டு ஆழத்தே தாக்க
அப்படியே விராலெல்லாம்
துடித்து வரும் யாரென்று பார்க்க !

இறுதியிலே அடிச்சுருப்பும் இறைக்கப்பட
உருத்தெரியாமல்
உறை சுரியில் ஒழித்திருந்த
விராலரசன்
மரவேரில் ஏறி
மறைந்திருந்தா தளபதி
விலாங்குப்பிள்ளை
எல்லாரும் கைதாகி கைப்பைக்குள் !

வட்டைக் கடையடியே
கொட்டுக்கிணற்றில் தண்ணியள்ளி
பட்டிருந்த சுரி கழுவி
வீட்டுக்கு போகுமுன்னே

சமனாகப்பிரித்தெடுத்து
அவசரமாய் வீடு செல்ல
வாசலிலே காத்திருக்கும்
விசாரணைக் குழுவொன்று

பிரம்படிதான் தண்டனை
சுங்கான் சுழன்றடித்த கையில்தான்
பிரம்படிகள்,
அடித்தாலும் கவலையில்லை
மீன்களுக்கும் தண்டனையாம்
எடுத்து எறியப்போறவாம்!

அழுது அடம்பிடிக்க அயல்வீட்டு
அக்காதான் பாவம் ஒருமுறைதான் என்று
புழுகிப்பரிந்துரைக்க
ஒத்துக்கொண்டா மீனை ஏற்றுக்கொள்ள

அடுப்படியே மீனறுத்து
சினைஎல்லாம் சேத்தெடுத்து
வாழை இலைக்குள்ளே வைத்து சுட்டிடுவா,
அனைத்து மீனையுமே ஆக்காமல்
சுண்டவைப்பா உழுவையையும்!

பால்ஆணம் அன்றுண்ண
மிளகாணம் வைத்துண்ண
தோலுரித்த ஜாவா பொரிக்க
சுளுக்கெடுத்த சுங்கான் கருவாடாக்க!

நாம் பிடித்த மீன்
நல்ல சுவை,
நானாகப்புகழ்ந்துண்டேன்
உண்ணும் வேளை

நடுத் துண்டும் தலையும்  
எனக்கென்றே
எடுத்துவைப்பா உம்மா
குடுக்கமாட்டா யாருக்கும்
கேட்டாலும் சும்மா!

2013 Dec 20
இந்த புகைப்படம் அடியேன் 2010ஆம் ஆண்டு உடும்புக்குளம்,காட்டுப்பகுதியில்  மீன்பிடிக்கும்போது எடுத்தது!