நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, May 31, 2014

சீட்டுக்காசி



சீட்டுக்காசி!

நம்பிக்கை கொண்டவர்கள்
நல்லாத் தெரிந்தவர்கள்
நாணயமானவர்கள்
கறாராக பேசுபவர்கள்
உசாராகி
எல்லாரும் ஒன்று சேர்ந்து
சீட்டுக்கு சேர்வார்கள்!

ஏலுமெண்டா சேருங்க
ஏலாட்டி வராதீங்க
சரியான தேதியில
நேரந்தவறாம
காசி வந்து சேர்ந்திடணும்.
இது சீட்டுக்காறியின் சட்டம்!

வீட்டுக்கு வேடு வாசப்படி
சீட்டில போடு காசிப்படி
ஏட்டிக்கு போட்டி இங்கில்லை
சாட்டுப் பேச்சுக்கும் இடமில்லை.

சில்லறைக்கடைக்காரன்
பொம்பள பிள்ளைக்காரன்
உள்ளதையெல்லாம் பொறுக்கி
உண்டியலில் சேர்ப்பான்
ஒனண்ணாந்தேதிய சீட்டுக்கு
ஓடிப்போய் கொடுக்க ஒரு துண்டும் எடுக்க !

முட்டை வித்த வித்த காசி
முந்தானையில் முடிந்த காசி
சட்டியடுக்குக்க சில்லஞ்சில்லமா
சேர்த்த காசி
சந்துக்குள் செருகிவச்சி
சத்தமின்றி சேர்ந்தகாசி
பன்வித்த காசி
பாயிளைச்சி சந்தையில வித்தகாசி
அப்பம் வித்த காசி
செப்புக்கு சேர்ந்தகாசி
இடுப்புக்கடுக்க வயலுக்க
புல்லுப்பிடிங்கி இடையொடிய எடுத்த காசி
எல்லாமே நோட்டாக மாத்திக்கிட்டு
சீட்டுக்காரி வீட்ட சீக்கிரமா அவ போவா !

சீட்டன்று காலையில
இடதுகை சொறியுதென்பா
வலது கண் துடிக்குதென்பா
ஆண்டவனே நாயனே
அதிஸ்டத்த குடு என்பா

கண்ணத்தூங்குதுகா
மகளே கடைக்காரி சீட்டலவா
நமக்குத்தான் விழப்போகுது
நல்லகாலம் பிறக்கப்போகுது

மணமுடிக்கா மகளுக்கு
மனங்குளிர ஆறுதல் சொல்வா
ரோட்டுக்கும் வீட்டுக்கும்
அடிக்கடி பாலமும்போடுவா!

கஷ்டத்தில் கைகொடுக்கும்
சீட்டு விளுந்ததேன்றால் சபையிலே
கை நடுங்கும்!

அசருக்கு வாங்கு சொல்லி
ஆலிமு அமருமுன்னே
அவ போய் அமர்ந்திருப்பா
விரிச்ச பாயில
வரிசையா இருந்து
வருவோர் முகம்பார்த்து
வடிவாகச்சிரிச்சி
மச்சி மாமி என்று
முறைசொல்லிக் கூப்பிட்டு
கதைபேசி கலகலப்பாய்
மனதாலே தமிருப்பா!

வெற்றுக்கடதாசி
உருட்டி உருட்டி உருளைபோல
உருண்டிருக்கும்
ஒற்றைச்சீட்டுத்துண்டு
அதிஸ்டத்தை வைத்துக்கொண்டு
அதுக்குள்ளே ஒளிந்திருக்கும்!

எல்லாரும் வந்தாச்சா
என்று கேட்டு
எண்ணிக்கை சரிபார்த்து
எல்லோர்க்கும் முன்னாலே
துண்டுகளை கொட்டித்தெரிந்து
குழைத்துச் சுருட்டி
சட்டிக்குள் போட்டிடுவா
சட்டம் போடும் சீட்டுக்காரி!

பானைக்குடுக்கைக்குள்
பல கைகள் போய்வரும்
போன கைகள் தேடித்துளாவி
ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கும்!

திடீரென்று பிரிக்க மனமும் இடங்கொடாது
பார்க்காமல் இருக்கவும் முடியாது
நெஞ்சு படபடக்க மெதுவாகப்பிரிப்பா
அருகிலுப்பவரை அடிக்கடி பார்ப்பா
பரிசு இல்லையென்று தெரிந்தால் மனமும்
தாங்கிடாது
பரிசு கிடைத்தால் மனம் குதியாமலும் விடாது!

விழுந்தால் சிரிப்பு
விழாவிட்டால் பெருமூச்சு
ஒருமாதக்கனவு ஒருநொடிக்குள் போச்சே
மறுமாதம் வரைக்கும் காத்திருக்கலாச்சே!

நடப்பது நிகழ்தகவு
எல்லோர்மனதிலும் பெருங்கனவு
கடனை அடைக்கலாம்
கதவு நிலை செய்யலாம்

சீதனம் கொடுக்கலாம்
மிஞ்சினா ஆதனமும் வாங்கலாம்
கிணறு தோண்டலாம்
கல்லும் மணலும் பறிக்கலாம்

வீட்டுக்கு கோப்பிசம் அடிக்கலாம்
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம்
ஒழுகும் கூரைக்கு கிடுகுவாங்கி
மழைக்குமுன் வேயலாம்!

கிராமத்து சீட்டு
ஒரு பரம்பரைச்சொத்து
கட்டாயச்சேமிப்பு
இது சிக்கனத்தின் மதிப்பு!

மு.இ.உமர் அலி
2014 may 30
 — with S Shifani MohamedRijan MuhammadhThirugnanasampanthan Lalithakopan and28 others.
LikeLike ·  · Stop Notifications · Share · Edit