நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, August 31, 2014

சருகு!

மரம் நிலத்துக்கு
தவறாமல் நீர்வரி செலுத்துகிறது.
சருகு!

Saturday, August 30, 2014

ஆவியுயிர்ப்பு !

வறண்ட காற்றுக்கு ஈரப்பசி
மனமிரங்கி மரம் இலைவாய் திறந்து நீரீயும்.
ஆவியுயிர்ப்பு !

Friday, August 29, 2014

கார் மேகம்

நெற்றியில் ஒற்றைப்பொட்டு
வானதேவதை முன்பனியில் குளித்திருப்பாளோ?
கருமேகம் போட்ட சாம்பிராணிப்புகை
கலைந்தோடுகிறது!

ஆவியுயிர்ப்பு !

வறண்ட காற்றுக்கு ஈரப்பசி
மனமிரங்கி மரம் இலைவாய் திறந்து நீரீயும்.
ஆவியுயிர்ப்பு !

Sunday, August 24, 2014

ஒட்டறை



ஒட்டறை

பரந்த உலகின்
ஒவ்வோர் மூலையிலும்
சிலந்தி வலையின்
விரிந்த ராஜ்ஜியம் !

இது ஒற்றை வீரன் ஆட்சி
அரசன் எட்டுக்கால் கொண்டதொரு பூச்சி
ஒதுக்குப்புறத்து கோட்டை
அதிகரித்தால் வீட்டுக்குத்தரும்
பெரும் கேட்டை!

காறி உமிழ்ந்தது சிலந்தி
அதில் தடுமாறி வீழ்ந்தது பூச்சி
மாறி மாறி இதுதான் இங்கு நடக்குது
இதுவும் ஒருவகை கண்ணாமூச்சி !


பட்டதெல்லாம்  ஓட்டினாலும்
படைத்தது  மட்டும்  ஓட்டிடாது
தொட்டால் உடைந்துவிடும்
துப்பலின் தொங்குதோட்டம்

ஓட்டியதில் ஒன்றேனும்
தப்பவில்லை அப்படியே உக்கிடும்
மிச்சமில்லை
வெறும் சக்கையாக போய்விடும்
துடித்து மடிகின்ற பூச்சி
அதைக் கடித்து உண்கின்ற ஒரு காட்சி!

பொறிசெய்ய உலகிலே
எத்தனை காரணங்கள்
அவை ஒவ்வொன்றும்
பலவற்றின் உதாரணங்கள்.

கோடைப்புழுதியுடன்
கூட்டுச்சேர்ந்து குடிவாழும்
ஒட்டறை ஒவ்வொரு போகமும்
தூசிகளோடு உறவாடி
கூட்டாஞ்சோறு சமைக்கும் !

ஒதுங்கி , தொங்கி அழகிய கோலத்தை
அலங்கோலமமாக்கும் ஒட்டறை
இடம்பெயர்ந்தை கோட்டைகளில்
பதுங்கிவாளும் பனங்கொசுக்கள்

கொடுத்துத் தின்பதற்கு யாருமில்லை
எடுத்தச் செல்வார் என்ற பயமும் இல்லை
அடுத்தவீட்டுக்காரன் என்போரில்லை
பகுத்தறிவிற்கோ இதில் விளக்கம் கொள்ளை!

ஒளி பட்டுப் பளபளக்க
வழிகெட்டு வீழுகின்ற
வழிப்போக்கர் மற்றும் கண்மூடி
தறிகெட்டுப் போவாரின்
கதைசொல்லும்
ஒட்டறை ஒட்டியதை
பற்றிக்கொண்டு உடனடியாய்
உயிர்பறிக்கும்!

சிலந்தியின் உமிழ்நீர்
உடலுக்குக் காயமாம்
உன்வீட்டு மூலையில்
அதிகம் அது சேர்ந்திட்டால்
வீட்டுக்குச் சேதமாம்!

மனங்களுக்குள் சிலந்தியுண்டு
அவை பின்னும் வலையுமுண்டு
சனங்களுக்கு தெரிவதில்லை
கள்ள மனம் புரிவதில்லை!

தேன் இனிக்கப்பேசிடுவார்
பல் இழித்துச் சிரித்திடுவார்
மான் வேட்டை செய்வதற்கு
மடுவெட்டிக் காத்திரிப்பார்!

உள்ளச்சுவரை நீயும்
அடிக்கடி ஒட்டறை அடி
மற்றவரை மாட்டவைக்கும்
மனப்பொறியை விரட்டியடி!

பிரிவு

ஆதவன் பிரிந்த துன்பத்தில்
நிலா தானழுதது
நிலா அழுதது கண்டு
வானழுது புலம்பியதால்
நானிலமும் நனைந்தது !

Sunday, August 17, 2014

நூலறுந்து போனதென்ன







நூலறுந்து போனதென்ன






பிஞ்சு விரல்பிடித்து எம்மை

கொஞ்சுகின்ற வயசினிலே

தனியாக தவிக்கவிட்டு அம்மை

நீ இறையடிக்கு சென்றாயே ?


இனி எம்மை

சீவி முடிப்பது யார் மாலையிலே

ஓதிக்கொடுப்பதும் யார்

சீனி போட்டெனக்கு பிசைந்து

சாதமும் ஊட்டுவது யார் ?


அடம்பிடித்து அழுகையிலே

பயங்காட்டி அடிப்பாயே

தினம் குளிக்க மறுக்கையிலே

எனைத்தேய்த்துக் குளிப்பாயே!


இடைவெளிகள் நிரப்பச்சொன்னாய்

பாடப்புத்தகத்தில்

விடையில்லா வினாவாகி

இடைவெளியாய் போய்விட்டாய் !


தாயத்தின்னி என்னும் பட்டம்

தந்துவிட்டு சென்றிருக்காய்

காயப்பட்டு என்னுள்ளம்

என்ன பாடு படப்போகுதோ?


வழிகாட்டும் ஒளிவிளக்கே

நீ ஒளிந்து போனதென்ன

கும்மிருட்டில் தள்ளிவிட்டு

நடுக்காட்டில் மறைந்ததென்ன!


உயிரெடுப்போர் இரங்கலையே

எம் முகங்களையும் பார்கலையே

பயிர்வளரும் வேளையிலே

வேரறுத்துப்போனாரே!


என்மீது புன்னகைப்பார்

இனியாரோ

மண்மீது இனி நானும்

ஓர் அநாதைதானோ?


காரியங்கள் கழியும் வரை

கடும் சிரத்தை காட்டுவார்கள் எம் மேலே

மீறிய நாள் செல்லுகையில்

அவர் போவார் அவர் வழியே !



சிறுவயது தந்தைக்கு

உறுதுணையும் வேண்டுமல்லோ

வருகின்ற சித்திக்கு

எங்களை பிடிக்குமன்றோ

யாரறிவர்

மு.இ.உமர் அலி

2014 Aug 18

மிக இளம் வயதில் Aplastic Anemia எனும் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு 16 Aug 2014 அன்று காலமான எனது நண்பனின்சகோதரி யின் குழந்தைகளுக்காக ( Ashar Ali இன் சகோதரி )

அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவருக்கு உயர்ந்த சுவனத்தில் நல்ல ஒரு இடத்த வழங்குவானாக

காகம் சொன்ன சேதி




காகம் சொன்ன சேதி




கரைந்து சொன்ன
சேதி தெரியுமா
விரைந்து வா என்றது
இறைந்து கிடக்குது உணவு
உலகம் நிறைந்து கிடக்குது
விரயமாகுமுன்
விரைந்து வா என்றது !

கொத்தித் துரத்தவில்லை
பிரித்தும் பார்க்கவில்லை
தூரத்தில் இருக்கின்ற
கூட்டத்தை கூவி அழைக்குது !

விடிகின்ற கதையை
வடிவாகசொல்லுமே அது
துடிப்பான தொழிலாளி பல
படிப்பினை உனக்குண்டு !

தொழிற்சங்கம் அமைக்கல
வழிப்பறி செய்யல
விழிப்புக்கும் குறைவில்லை
மருந்துக்கும் நடிப்பில்ல!

நிற ஒதுக்கீட்டில்
ஒரு புறக்கணிப்பு
எனக்கு கறுப்பில்
திருப்தியில்லை !

புதிய பிரபஞ்சத்தில்
காகத்துக்கு நான்
வேறு நிறம் கொடுப்பேன்
வரியும் வாங்கிக்கொடுப்பேன்!
வதிய புது இடங்கொடுப்பேன்
மனிதர்களுக்கு
காகம் வகுப்பறைப்பாடம்
சொல்லிக்கொடுக்கும்
தொழிற்ச்சங்க வாதிகளுக்கு
தலைமை தாங்கும்!

சுற்றுச்சூழலுக்கான
தலைமை விருது
தரப்படுத்தலில்
காகத்தால் தட்டிச்செல்லப்படும்!

மு.இ.உமர் அலி
17Aug 2014

Tuesday, August 5, 2014

நிலா

நள்ளிரவு
நடுவானில் கும்மிருட்டு
திறந்த ஜன்னலை மூடச்சென்றேன்
நிலவு என்னை எட்டிப்பார்க்கிறது
நான் என்ன செய்கிறேன் என்று
நான் நிலவை உற்றுப்பார்க்கிறேன்
அது என்னைப்பார்க்கின்றதா என்று!

Saturday, August 2, 2014

வரட்சி

அறுகோடிய ரோட்டோரம்
வெறிச்சோடி கிடக்குது
வெருகாடிய ஆற்றோரம்
வரண்டுபோய் வெடிக்குது

Friday, August 1, 2014

முடியாது.

உன்னை நீ ஆளும்வரை
யாராலும் உன் எல்லைக்குள்
நுழைய முடியாது.

வேறு யாரும் உன்னை ஆளும்போது
உனக்கென்று ஒரு எல்லையை
வரையவே முடியாது !

இரவே

இரவே உனக்கு அவ்வளவு குளிரா
பகலையல்லவா
போர்வையாக்கி போர்த்துகொண்டு
படுத்து உறங்குகிறாய்!

பதறுகள்

நிறைந்த கதிரெலாம்
குனிந்து வளைந்திருக்க
விளையாத பதறெலாம்
தலை நிமிர்ந்திருக்கு !