நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, March 31, 2014

கல்லறை !









பாதியில் முடியாத
பயணம்
மீதியும் தொடருது
நாதியும் இல்லா
சாதியையும் இல்லா
துயரம்!

இருட்டுக்க போறேன்
குருட்டுக் கண்ணோட
திருடன் பயமில்ல
திருட்டுக்கொடுக்க கையில்
எதுவுமே இல்ல!

நான்பற்றி நடந்த
கைத்தடி கூட
என்னோடு இல்ல
சுருட்டிய கைக்குள்ள
ஒண்ணுமே இல்ல!

கூட்டாளி துணையில்லை
பாட்டாளி பணக்காரன்
பேதமும் இல்ல
எல்லாரும் போகணும் !

மின்சாரம் அங்கில்ல உன்
சம்சாரமும் தான் இல்ல
நற்செயல்கள் விளக்கேற்றும்
கொடும்பாவம் அடுப்பெரிக்கும்!

உள்ளுக்கு போனது
வெளியால வரல
வெளியால உள்ளது
உள்ளுக்கும் போகல!

குத்திய விழி
திக்கித்து நிக்குது
கத்திக்குளறி
ஒப்பாரி நடக்குது!

பிள்ளை அழுவான்
காரியம் மட்டும்
மனைவி அழுவாள்
கடைசி மட்டும்!

உறவுக்காரங்க
ஓரத்தில் நிக்காங்க
ஊருக்காரங்க
தூரத்தில் நிக்காங்க!

சந்தணக்குச்சி
புகைந்தழுகுது
உந்தன் தங்கச்சி
விம்மியழுகிறா
உன்ன நினைச்சி!

நந்தவனமா
நரகக்குழியா
நீபோகிற வீடு
நீ நன்றாயறிவாய் !

நந்தவனத்தில்
வாழ்வது என்றால்
நன்மைச்செடிகளை
அதிகமாய் நடு
பாவக்களைகளை
களைந்து நீ அடிக்கடி எடு!

கங்கு நெருப்பும்
காத்திக்கிருக்கு
தீங்கு செய்
மானிடன் உனக்கு!

மிருகத்தைககொன்று
மனிதனாய் வாழு
மனதினை வென்று
நல்வினை நாடு!

வழுக்களில் வீழ்ந்து
அழுந்தி விடாதே
புழுக்களின் உணவாய்
நீ மாறிவிடாதே!

Mohamed Ismail Umar Ali

Sunday, March 30, 2014

நாகரிக ஆடை
















விரலுக்கு தொப்பி
தலைக்கு மோதிரம்

குனிஞ்சால் கிழியுது
நெளிஞ்சால் பிடிக்குது!
நூலிலே தொங்குது
நுனியாலே தாங்குது!

வெயிலுக்கு கருப்பு
தேவலாம சுருக்கு!
ஒயிலுக்குள் நனைத்து
உசத்தினாப்போல
சிலுக்கோட,பளபளப்பு!

வெற்றுப் பைகள்
வேண்டாத கைகள்!
உற்றுப்பார்த்தால்
எல்லாமே சைபர்!

ஓட்டையில்லாமல் சில
பொத்தான் இருக்குது
சட்டையை மாட்டினா
மூச்சும்தான் முட்டுது!

தம்பியின் சட்டையை
தமக்கை போடுறாள்
தங்கையின் சட்டையை
அண்ணனும் போடுறான்!

அளவோட மூடினா
அறியாமை என்கிறான்!
நிலவுக்கு கூட
ஒப்பிட்டு பேசுறான்!

இடுப்பிலே இருக்காம
நழுவி விழுகுது
வீதியில் நடந்தால்
தரையையும் தழுவுது!

மூடி எல்லாம்
திறந்திரிக்கி
ஆடை எல்லாம்
குறைஞ்சிருச்சி!

துண்டுத்துணியில்
துகிலினைக்கொண்டு
நண்டுக்கு சட்டை
கட்டினால்போல
பெண்டுகள் எல்லாம்
ஓடித்திரியுது!

நாறிய மீனிலே
மொய்க்கிற ஈபோல்
ஊரில உள்ளவன்
கண்ணெல்லாம்
அவ மேல் !

அந்தக்காலத்து "சலாரு"
போல இந்தக்காலத்து
பெடியங்கள் அலையிறான் பாரு !

வாலெல்லாம் தொங்குது
கோலம் குறைஞ்சி
அவலமாய் தெரியுது!

ஆளுக்கு இல்லே ஆடை
ஆடைக்குத்தனே ஆளு!
நாளுக்கு நாள் மாற்றம்
பீடை பிடித்ததோர் கூட்டம்!

Saturday, March 29, 2014

கண்ணாடி!







கண்ணாடி!








நீ எனில் உனைப்பார்க்கிறாய்
பிறர் உனில்
உன்னைப் பார்கிறார் !

முகம் மட்டும் காட்டுவேன்
உன் அகம் கூட தோற்றுவேன் !

உருப்பெருக்கத் தெரியாது
ஓரவஞ்சனை கிடையாது
உள்ள(த்)தை உள்ளபடி
ஒப்புவிக்கும் உளவாளி!

நான் சிதைந்தால்
நீ சிதறித் தெரிந்திடுவாய்
நான் முகம்அழுதால்
நீ அழுக்காக தெரிந்திடுவாய் !

உன் முகத்தின் அழகைப்பார்க்க
என் முன் சிரி
உன் சோகத்தின் கோரம் காண
என் முன் அழு!

சடத்தின் நடத்தை
என் சட்டத்தில் அடங்கும்
உள்ளக்கடலின் எண்ண
அலைகளின் தளம்பலும்
என்னிலே புரியும்?

சிரிப்பவன்
உள்ளே அழுவது கூட
முகத்திலே தெரியும்?

அழுபவன்
அவனுள்ளே சிரித்து
மகிழ்வதும்
தன்னாலே புரியும்?

உளவியல் கல்வியில்
ஒப்பில்லா உபயோகம்
உன் முகமே
உன் உளம் காட்டும் கண்ணாடி!

                                   Umar ali Mohamed ismail

Thursday, March 27, 2014

நெருப்பு












நெருப்பே நீ
நீரின் காதலியோ ?

கடல் தவிர
யாவுமே உன் அடிமையோ?

செந்நாக்கு சீறி உன்
சினத்தினைக் காட்டுகிறாய்
முன்னிற்கும் எதையுமே நீ
பொசுக்கிக் கருக்குகிராய் !

பலவர்ண ஜாலம்
உன் உடல்
பலமான புண் தரும்
உனைத்தொடல்!

உஷ்ணம் உன் பிள்ளை
உருகிடும் சாம்பலே
உமிழ்நீர்!

உனக்கு வியர்ப்பதில்லை
உன்னருகிலுள்ளோர்கே
வியர்க்கும்!

நீ உறங்குவது
தணலாக
உன்போர்வையோ
நீறு !

பசிவந்தால்
யாவுமே புசிப்பாய்
அனைத்தையும்
அப்படியே சமிப்பாய்!

புனலுன்னை
புணரும்வரை
உன் ஆசை தீராது
புஸ்சென்று அடங்கிடுவாய்
புனுலுன்மேல் படர்கையிலே !

நெருப்புப் பெண்ணே
ஈரவிறகு
உன் நாக்கு
கோபக்கனல்பட்டு
எரிந்ததனால்
உமிழ்ந்த நெருப்பு
என் நெஞ்சை
புண்ணாக்கியதே!!

Wednesday, March 26, 2014

கவிஞர் கண்ணதாசன்





பளிங்கு கோப்பையில்
பழரசம் காட்டினாய்
நளினக் கவிதையால்
பரவசமூட்டினாய்!

தங்கத் தமிழை தட்டித்தட்டி
நீ நகை செய்தாய்
சிங்கப் பாணியில் தவறை
தமிழால் நீ தட்டிக்கேட்டாய்!

உலகை உன் ஆறாம் விரல்
உருவகித்தது
மனதின் துயர் ஆறும் பணியை
அது புரிந்தது!

வித்துக்கள் முளைத்து
உன் வரியில்
தத்துவ மரங்கள் கிளை பரப்பின!

பெண்ணை வரிகளால்
துகிலுரித்தாய்
கண்ணை கவிதையால்
திறந்து வைத்தாய் !

எதிரியை சொல்லீட்டிகள்
குத்தின
வாயம்புகள் வைதன!
புத்திகள் கூறியே
இயம்பியா வரிகள் ..

தமிழன்னைக்கு நீயொரு
முத்தினை வென்ற
புது நகைச்சொத்து !

Saturday, March 22, 2014

காத்திருப்பேன்

என் இதயம் துடிக்கும் வரை
என் மூச்சு நிற்கும் வரை 
என் குருதி ஓடும் வரை 
உனக்காக காத்திரிப்பேன் !

பூங்காற்று வீசும் வரை
தென்னங்கீற்று அசையும் வரை
மூங்கில்கள் இருக்கும் வரை 
வண்ணத்தி என் வாசலில் 
வண்ணச் சிறகடிக்கும் வரை 

நீ வீடு வந்து சேரும் வரை
நான் உனைச் சேரும்வரை 
தூங்கினாலும் விளித்திரிப்பேன் 
உண்டாலும் பசித்திருப்பேன் 
உனக்காக காத்திருப்பேன்

கவிதை வயலுக்காக  22 APRIL 2014 அன்று எழுதியது 

Monday, March 17, 2014

சுமை சுழலிடம்














தோழில் சுமை
இடையில் சுமை
நடையில் சுமை
மனதிலும் சுமை முழு
வாழ்விலும் சுமை!

இறக்கி வைக்க
இடமில்லை
எல்லா இடமும்
சுமைதானே !

குடலின் பசியை
கழுவிடவே
வியர்வைக்
கடலில் குளிக்கின்றாள்
வெய்யில் மழையில்
நனைகின்றாள்!

கையில் பச்சைக்
குழந்தைக்கு
பள்ளிப்பாடம் நடத்துகிறாள்

கையை ஏந்திக் கேட்காமல்
கையில் ஏந்தி விற்கின்றாள்
மெய்யில் மட்டும் திறனில்லை
மனமும் திறனால்
துணைகொண்டாள்!

சுமைகளால் இவள்
வளையவில்லை
சுமக்கும் சுமையே
வளைகிறது!

இரப்பது இழிவு
இருப்பதை கொண்டு
நீ வாழ் இனிது!

இடுக்கண் வேளை
நடுக்கம் வேண்டாம்
ஒடுங்கிப் போனால்
வீழ்த்திடும் ஆளை 
நடுங்கிப்போனால் 
நீ வெறுங்கோழை!

தினமும் நீ எழு காலை
மனமும் இறை
தொழுதிடும் வேளை!

முயன்றும் தோற்றார்
மிகவும் அற்பம்
முயலார் வென்றார்
அதிலும் சொற்பம்!

சுழலிடம் ஒன்றல்ல
ஓன்றுக்கு மேலுண்டு
வாழ்விடம் கற்றவை
நீ அறி கண்டு !

17 MARCH    2014 அன்று கவிதை வயலுக்கு எழுதியது.

Saturday, March 15, 2014

சோடிச் செருப்பு



















கடை கடையாய் ஏறி
கால்தேய்ஞ்சி போயி
கடைசியிலே வாங்கிவந்த
கால்ச்சட்டை நானல்லோ !

கால்நடையாய் நான் சென்று
கால்நடைபோல் மேயாத
இடமில்லை தானன்றோ !

முள் ஏறிமிதித்து
உள்வலியைத்தாங்கும் என்னை
முதுகேறி மிதித்து
உன் வழியால் போனாயே!

கொதிக்கின்ற பாதையிலே
உன்பாதம் புண்படாமல்
கொதிதாங்கி நடந்தேனே
உனைக்காத்து நின்றேனே!

இறப்பர் கேடயம் நான்
இறந்து இறந்து மடிந்தேன்
உன் வாழ்க்கைப் போரினிலே
நாளும் மீள மீளப் பிறந்தேன் !

மேல்சட்டை கால்சட்டை
பலவடிவில் இருந்தாலும்
கால்சட்டை நானுனக்கு
ஒரே அளவில் வேணுமடா!

நான் உனக்காக
எதிரில் வந்தவற்றில்
மதித்தவற்றை விட
மிதித்தவைகளே அதிகம் !

உழைப்பிலே உடனிருந்தேன்
ஓய்விலே தூரவைத்தாய்அன்று
மடையனுக்கு புரியவில்லை
மனிதன் உந்தன் மனநிலை!

பாவம் செய்ய
கூட்டிச்செல்வாய்
பள்ளி சென்றால்
வெளியில் வைப்பாய் !

அசிங்கம் அப்பிடாமல்
சிங்கம் உன்னை காத்துநின்றேன்
அசிங்கம் என்று சொல்லி
அங்கு மூலையிலே போட்டாயே!

பாரமற்ற என்முதுகு
பாரமுற்ற உன்னுடலை
பார்த்துத்தான் தூக்கியதா?
நேரமற்று போனாலும் ஒருநாளும்
எனை மறந்து நீ போனதில்லை
நினைவிருக்கா !

தீண்டாத பொருள் என்
துணையின்றி நீ
புனிதத்தை அடையும் வழி
தாண்டத்தான் முடிந்திடுமா?

உனக்காக உழைத்த நான்
இளைத்துப் போனேனே இதுவரை
எனக்காக எதையும் நான்
சேர்க்கவில்லை தேய்ந்ததைத்தவிர!

உன் பாரம் தந்த பரிசு
என் முகத்தில்
உன் பாதத்தின் பதிவு!

இதுகாறும் பெருமையுற்றேன்
உன்காலில் இருந்தவரை
இந்நாளில் வெறுக்கின்றேன்
உன் கை என்னை
தொட்டெறிந்ததனால்!

இருக்கும் வரை தேவைப்பட்டேன்
பட்டி அறுக்கும் வரை பாடுபட்டேன்
தோலறுந்த நிலையில்
எட்ட எறிந்தாயே உள்ளம்
சுட்டு நின்றாயே!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 Mar 15th

Wednesday, March 12, 2014

விலைவாசி


















சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா !

நாம் வாழும் உலகின் 
நிலையை நீயும் 
எண்ணிப்பாரடா!
எண்ணிப்பாரடா!

இலையும் உதிருது 
விலையும் எகிறுது 
நாளாந்தம் நடக்கும்
நிகழ்ச்சி!

நிலையம் தளருது 
தலையும் சுழலுது 
தினமும் நடக்குற 
காட்சி !

உலையும் கொதிக்குது 
உளமும் கொதிக்குது 
நானும் உங்கள் 
கட்சி!

சோறு புழுங்கும் அடுப்பில் 
அதனோடு சேர்ந்து 
நானும் புழு க்குகிறேன் 
மன இடுக்கில்! 

உழைத்துக் களைத்த 
ஏழைகளுக்கு அரசு கொடுக்குது 
அதிர்ச்சி 
செழித்து வளர்ந்த 
கோழைகளுக்கோ இதனாலே 
மகிழ்ச்சி!

இரவின் நடுவினில் 
பொருளின் விலையினில் 
உயர்ச்சி !
இதை தாண்டியும் வாழ 
நீ எடுக்கணும் கடும் 
முயற்சி!

அடிப்படை சாதனம் 
மாடிப்படி ஏற 
படிப்படியாக சாமான் விலை
அதில் குடியேற 

தட்டுத் தடுமாறி 
நானுமிங்கு வாழ தட்டிக்கழிக்கின்றேன் 
விட்டுக்கொடுக்கின்றேன் 
மனக்கிடங்கின் ஆசைகளை!

போட்டுக்கழித்த
ஆடைகளை கிளியல் 
பொத்திப் போடுகின்றேன்!

ஓட்டை உடைசல் 
பாத்திரத்தை 
பத்திரமாய் பாவிக்கிறேன்!

மருந்து மாயங்கள் 
விருந்து வெகுமதிகள் 
அருந்தும் பானங்கள் 
சுருக்கி வாழுகிறேன் !

பழஞ்சோறும் பழங்கறியும் 
சுவைக்கின்றேன் 
நடந்துபோகும் தூரத்தை 
நடந்தே அடைகின்றேன்!

மண்மலை வளரவில்லை 
விலை மலை வளர்கிறது 
மலைபார்த்து தினமும் 
குரைக்கின்ற நாயானேன்

கவிதை வாழி  75 அவது கவிதைக்கு  MARCH 12 அன்று எழுதியது.

Sunday, March 9, 2014

தூக்குமேடை!





உயிர் புரிந்த குற்றம்
உடல் ஏற்றும் சட்டம்!

உயிர் மேலே உயர்கிறது
உடல் கீழே வீழ்கிறது!

உதாரணத் தண்டனை
இது காரணத் தண்டனை!

தூக்குமேடை தூங்கிவிட்டால்
உலகில் பாவப்பூக்களே பூக்கும்
பிணங்களே மணக்கும்!

கொல்லும் தண்டனை
கொல்லும் உலகில் நிந்தனை !
சொலும் சேதிகள்
உலகில் எத்தனை?

பிறருரிமை கொன்றவனின்
வாழுரிமை இறக்கும்!

பிறருரிமை கொள்ளாது
பூவுலகை காக்கும்!

இது "அலுகோசு"செய்யும்
குற்றமற்ற கொலை!

கொடூரத்திற்கு
சட்டத்தின் விலை!

முறிந்த பேனா எழுதிய
தீர்ப்பு !

கருணை கண்கட்டி
காதடைத்து செய்யும் வதம்!

கவிதை வயலுக்கு  9 MARCH 2014 அன்று எழுதியது

Saturday, March 8, 2014

கனாக்காணும் வயது !















பதின்ம வயது

உணர்வுகள் கலவையாய்
கலந்து
உணர்வுகள் புதிதாய்ப்
பிறக்கும் வயது!

புரியாததெல்லாம்
புரிந்ததென்று
பெரிதாய்
பீத்திக்கொள்ளும் வயது!

பூத்திருக்கும் வயது
காத்திருக்கும் வயது
எதிர் பார்த்திருக்கும் வயது!

பிரியவே மாட்டோம் என்று
புரியாமல்
பெரிய பெரிய
சத்தியம் செய்யும் வயது!

வீட்டுக்குத் தெரியாமல்
திருட்டிலே
சித்துக்கள் புரியும் வயது!

துள்ளிக்குதிக்கும் வயது
அன்பை
அள்ளிப்பருகும் வயது!

நண்பர்கள்
கடவுளாகும் வயது
கவிதைகள் நண்பராகும்
வயது!

மீசையும் ஆசையும்
அரும்பும் வயது
இசையும் கலையும்
ரசிக்கும் வயது!

கனநேரம் நீ நிற்பாய்
கண்ணாடியின்
முன்னாடி
கண நேரம் சிந்திப்பாய்
சிந்தனையில்
தள்ளாடி !

ஒற்றைக்காலில் நின்று
கேட்டதை
பெற்றுக்கொள்ளும் வயது!

பாடப்புத்தகம் கசந்து
கவிதைப்புத்தகங்கள்
இனிக்கும் வயது!

சோதனை செய்யும் வயது
அதிகம்
சாதனைகள் செய்யும் வயது!

ஏமாற்றங்கள் தாங்காத வயது
எதிர்பார்ப்பதை எண்ணி
தூங்காத வயது!

சோதனைகள் தாங்காமல்
சாவதனை விரும்பும் வயது!

பூஞ்செடிகள் வளர்ப்பார்
நெஞ்சினிலே காதல்
வளர்ப்பார்!

பொல்லாத வயது
நிலத்தில்
நில்லாத வயது!

வரம்கொடு!





















ஒரே ஒரு
வரம் கொடு!

ஒரு தரம்
செவி கொடு

கரங்களால் நீ
கன்னத்தில் வரைந்த
முரட்டு ஓவியம்
வலிக்கவில்லை!

சின்னச்சின்ன ஆசைகள்
சிறகடிக்க முனைகையில்
சிறகொடித்து முறித்ததுதான்
வலியெடுத்து வருத்துது!

மன
உண்டியலை உடைத்து
உன்முன்னால்
கொட்டிக் காட்டுகிறேன்

கொஞ்சம் நில்

இத்தனை நாள்
சேர்த்துவைத்த
எண்ணச் சில்லறைகளை
எண்ணிக்காட்டுகின்றேன்
நின்று
எண்ணிவிட்டுச் செல்!

எனக்கொன்றும்
தரவேண்டாம்
நீ கொடுத்தவைதான் அவை
நீயே எடுத்துச்செல்!

உண்டியலுக்குள்
இனி இடமில்லை
ஓட்டையும் போட
முடியவில்லை!

வழி கூறிப்போ
என்
விழி நிறையுதிப்போ!

ஒரே ஒரு
வரம் கொடு!

ஒரு தரம்
செவி கொடு

மகளிர் தினத்திலே ,இந்த வரிகளை சமர்ப்பிக்கின்றேன்,உண்மையில் இது வாழ்த்துகின்ற நாளில்லை நாம் வருந்த வேண்டிய நாள்.எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
8TH MARCH 2014

Friday, March 7, 2014

கருக்கலைப்பு














காதலெனும் பேர்கொண்டு
காமம் அலையுமிங்கு
கவனமாக இருந்திடுங்கள்
கற்பினை காத்திடுங்கள்!

காதலுடன் காமம் ஆடும்
கண்ணாமூச்சியாட்டம்
கணநேர தடுமாற்றம்
கொண்டு வரும்
தொங்கோட்டம்!

சுகித்த கணங்களெல்லாம்
சுமையைத்தான் கொண்டுவரும்!
சில வேலை
உன்னையும்தான் எமலோகம்
கொண்டுபோகும்!

மனது படபடக்க
அடிவயிறு தான் கனக்க
எரியாமல் எரியும்
அச்சத்தீ உன்னுள்ளே!

குட்டிபோட்டபூனையாவாய்
குறுக்கும் மறுக்கும் நடப்பாய்
குட்டி உன்னுள் வளர்வது
அறிந்தால் சாகவும் எத்தனிப்பாய்!

வீட்டிற்கு தெரியவந்தால்
விட்டத்தில் தொங்கும்
அப்பாவின் சடலம்
தோட்டக்கிணற்றில் மிதக்கும்
அம்மாவின் உடலம்!

தங்கைகள் வாழ்க்கை
வளைந்து வினாக்குறியாகும்
தம்பிகள் தலை குனிய
காரணமுமாகும்!

சிற்றுயிர் கொண்டு நீ
பேருயிர் காக்கவேண்டும்
குற்றுயிர் நீ கொண்டு
அனுதினம் துடிக்கவேண்டும்!

பதற்றப்படுத்தியவன்
பதறித்திரிவான்
செய்வது அறியாது
ஏதேதோ பிதற்றுவான்!

ஒருநாளும் இல்லாமல்
துள்ளிக்குத்து அம்மாவிடம்
அகப்படுவாய்

அன்னாசிப்பிஞ்சை
அருவருக்க தின்னவேண்டும்
அஸ்பிரின் குளிசை போட்டு
அல்சரால் அலற வேண்டும்!

தலையில் அடித்துக்கொண்டு
நிலையின்றி தவிக்கவேண்டும்
கலைப்பதக்கு மாத்திரைகள்
வகை வகையாய் உண்ண வேண்டும்!

பொய்சொல்லி வீட்டை விட்டு
போய்க்கலைக்க வேண்டும்
நோய்த்தொற்றை நீ வாங்கி
இறக்க வேண்டும்!

கறல் பிடித்த ஆயுதம்
இருள் படிந்த ஓரிடம்
உயிர்கொலை செய்யணும்
இறை சாபம் அடையணும்!

ஆக
மகளே
நிலைத்திரு அன்பில்
தள்ளிவை காமம்
சொல்லிவை அவனை
காத்திரு மணமாலை
கனிந்திடும் வரும்வேளை!


                 -உமர் அலி முகம்மதிஸ்மாயில்


Thursday, March 6, 2014

ஈதல்





















ஈதல் குறைக்கும்
பசிச் சாதல்
ஈதல் குறையின்
இனி மோதல்!

ஈந்திடும் கொள்கை
மனம் ஏந்து
ஈந்திடும் உன் கை
மனமுவந்து!

ஏந்திடும் கரங்கள்
ஏழ்மையினால்
வாழ்ந்திடும் சனங்கள்
நீ ஈவதினால்!

எள்ளும் உதவும்
எழியோர்க்கு
தள்ளும் தேவை
வெளியேற்றும்!

கருமி என்பெயர்
வாங்காதே
விரும்பி நீ கொடு
பின் வாங்காதே!

இயற்கை உன்னிடம்
இரக்கிறது
பல கை உன்னிடம்
கேட்கிறது!

இறைவன் கருவி
ஆகிவிடு
இறைவன் அருளை
தேடி பெறு

பொருளை மட்டும்
ஈயாதே
இருளை உனக்குள்
இருத்தாதே!

சிரிப்பும் கொடையினில்
சேருமடா உன்
சிரிப்பால் பிறர் மனக்குறை
தீருமடா!

ஈயார் பாவி ஆனாரே
தீயார் அணியினில்
இணைவாரே!

தயார் நீ ஆகு மானிடனே
நன்மை புரி அணி
சேர்ந்திடவே!

விடுங்கை எனும்பெயர்
மாறட்டும்
கொடுங்கை எனும்பெயர்
சேரட்டும்!

கவிதை வயலுக்கு  6 MARCH 2014 அன்று எழுதியது 

தேடினேன்!






















தேடினேன்!

முன்னும் பின்னும்
தேடினேன்
வலமும் இடமும்
தேடினேன்!

மேலும் கீழும்
தேடினேன்
விண்ணிலும் மண்ணிலும்
தேடினேன்
இருளிலும் ஒளியிலும்
தேடினேன்
இரவும் பகலும்
தேடினேன்!

அங்கும் தேடினேன்
இங்கும் தேடினேன்
எங்கும் நீ கிடைக்கல!

ஆனால்
எனக்குள் மட்டும் தேடல
அப்போ நீ
எனக்குள் இருந்தது புரியல!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 march 6th

Wednesday, March 5, 2014

நிழல்!













நிழல்

உனது உருவத்தையே
பிரதிபலித்தாலும்
நிழல் 
உனக்கு சொந்தமில்லை !

நிழலுக்கு யாரும்
வெட்டினாலும்
வலிப்பதில்லை
குருதி வடிவதுமில்லை!

புலன்களில்லாத
போலி அது
பலன்களில்லாத
வாலுமது!

உன்செய்கையை
பிரதி பண்ணும்
நிழலுக்கு
என்றும்
உன் பெயரில்லை
அதை
நிழல் என்றுதான்
அழைப்பர்!

உனது காலடியிலே
விழுந்து கிடக்கும்
நிழல்
உன்னை விட்டுப்பிரிய
மனமின்றி
கட்டிக்கொண்டு
அழுவது
தெரியுமா உனக்கு?

உதறினாலும்
விடுகின்றதில்லையே
அதட்டினாலும்
அகன்று
செல்லுதில்லையே!

நீ பார்க்கும்
உனது நிழல்!
உனைப்பார்க்குமா?

இருட்டிலும்
உன்னை அது
தொடர்கின்றது
உன்னால்தான்
அதை பார்க்க
முடிவதில்லை!

ஒளியின் கீழே
சரியாய் நின்றால்
உனக்குள்
மறையும் நிழல்!

இறை அருளை
அள்ளிப்பருக
விலகும்
உன் மன இருள்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்!

சுன்னத்துக் கல்யாணம்!








சுன்னத்துக் கலியாணம்!











உம்மாவும் வாப்பாவும்
தங்களுக்குள் பேசிக்கொண்டார்
வெள்ளாமை வெட்டினா
சின்னவனுக்கு சுன்னத்தாம்!

வீட்டுக்கு கூரை
புதுக்கிடுகாலே
ரோட்டு வேலியும்
புதுப்பொலிவோடே!

நீத்துச்சுவரு
ஊத்தையை மறைச்சி
சுண்ணாம்பு வெள்ளை
சிரித்திடும் முறைச்சி!

கால்நடையாய் போய்
உம்மாவும் சொல்வா
ஆள் இடையில் கண்டால்
வாப்பாவும் சொல்வார்.!

அசருக்கு கல்யாணம்
பகலைக்கு விருந்து
"அயத்துப்போகாம "
எல்லாரும் வாங்க!

அல்லயல் காரர்கள்
அழையாமல் வருவாங்க
பிள்ளைகள் எல்லாம்
விளையாடி மகிழ்வாங்க!

வாழைக்குலைகள் புகையிலே
பழுக்கும்
வரும் ஆட்களுக்கு வெற்றிலை
படிக்கம்!

தென்னை மரத்திலே
கட்டிய பீக்கர் மறைவிலே இருக்கும்!
ஆனால் பாட்டின் சத்தம் நல்ல
தூரத்திற்கு கேட்கும்!

தூக்கிலே "சருபத்து"
தட்டத்தில் தீன் பண்டம்!
வாய்க்குள்ளே வெற்றிலை
சட்டையில் வடியும்
வெற்றிலைச்சாறு!

வேலைகள் பிரித்து
பொண்டுகள் செய்வார் வெண்
சேலைகள் பிரித்து
வெள்ளையும் கட்டுவார்!

பந்தற்காலிலே கையினைப்போட்டு
பையன்களெல்லாம் சுற்றி சுழல்வார்
சொந்தக்காரர்கள் சுற்றமும்
நேர காலமாய் வந்து சேர்வார்!

குருத்து மணல்
பரப்பிருக்கும்
வாசல்
பளபளன்னு மெருகேற்கும்!

குருத்தோலை கிழித்தெடுத்து
வருவோரை வரவேற்கும் தோரணம்
கருத்தோடு வரவேற்று
இருப்பாட்டி கதைபேசும் உறவினம்!

சாப்பிட்ட பின் குளிக்காதே
சத்தமிடும் வாப்பா அன்று மட்டும்
சம்பிரதாயத்துக்காய் சாப்பிட்ட பின்னர்
கிணற்றடியில் குளிக்கவைப்பார்!

புதுச்சட்டை பனியனோடு
சாரமும் மாப்பிள்ளைக்கு
உடுப்பாட்டி மகிழ்வார்கள்
கோலத்தைப் பார்த்து
பூரித்துப் போவார்கள்!

ஊரெல்லாம் சுற்றிய
மாப்பிள இறுதியில்
பள்ளி உண்டியலில் போடுவார்
காணிக்க!

அண்ணாவி தலைமையில்
பொல்லடி நடக்கும்
தந்தந தானா என்று
சொல்லடி கேட்கும் !

மல்லிகை மாலை
நல்ல டொபியாலே மாலை
தலையிலே தொப்பி
காலுக்குச்செருப்பு!

மச்சிமார் மதினிமார்
மருதோன்றி போடுவார்
அச்சின்ன சின்னத்து
மாப்பிளைக்கு!

பூவுடன் பொரி சேர்த்து
தலையிலே சொரிவார்
நாவுடன் உதடு சேர்த்து
குரவையும் இடுவார்!

"பகல்வெத்தி"எரியும்
பிள்ளை பயப்படுவதும் புரியும்
படிக்கம் அடிக்கலம்
அணைந்த பகல்வெத்திக்கு!

செப்புக்கு வைத்தவர்கள்
திரும்பச் செய்வார்கள் புதியவர்
பெயரை கொப்பியில் குறித்து
பத்திரமாய் பதிவார்கள்!

முன்னுரிமை தரவில்லையாம்
மூத்த மாமி மூலையிலே
தன்னுரிமை விடமாட்டேன்
சின்னம்மா பிடிவாதம்!

சின்னத்து மாப்பிள்ளைக்கு,
கல்யாணம் அவர்களுக்கு!

நேரம் நெருங்க நெருங்க
பிள்ளையின் முகம் வாடும்
எண்ணத்தில் பயம் ஓடும்
தூரமாய் ஓடி ஒளிஞ்சி
கொள்வான் சின்னத்து மாப்பிள்ளை!

விசயம்தெரியாத தம்பியும்
தங்கையும் காட்டிக்கொடுத்து
மாப்பிள்ளையிடம்
துரோகிப்பட்டம் பெறுவார்கள் !

அதிகாரி தளபதியாம்
ஒய்த்தா"அரசனாம்
மாமா வாயில் காவலன்
வாப்பாக்கு கிறுகிறுப்பாம்

காட்டாயப் பாட்டாபிசேகம்
களைகட்டி நடக்குது
பலநாள் பரபரப்பு
நொடிக்குள்ளே முத்தாய்ப்பு.

உரல் அரியாசனம்
மைக்கத்தியே சாமரம்
வீரக்கொள்ளி சாம்பலே
தூவுகின்ற பூவு!

உரலுக்கு மேலே வெள்ளைச்சீலை
அதுக்கு மேலே குருத்து மணல்!
அரக்கனைப்போல் கிடுக்குப்பிடி
அதுக்கிடையில் துண்டுவிழும்!

பெரிசா நோவு இல்லை
பெரிய குருதியில்லை
இரவாக நோவு வரும்
சிறிது சிறிதாக கூடிவிடும்!

விட்டத்தில் நூல்தொங்கும்
நூலிலே துணி தொங்கும்!
கிட்டத்தில் இருந்துகொண்டு
காலிலே கால்போட்டு கால்
ஒட்டாம பார்ப்பாக மாமாவும் மச்சானும்!

தூங்கினா புரளுவானாம்
மாப்பிள்ளை
தூங்காம விழித்திருந்து காப்பாங்க
சில ஆம்பிள்ளைங்க!

கூட்டாளிமாரெல்லாம்
கிட்டவரப்பயந்துகொண்டு
எட்டிப்பார்ப்பார்கள்
வாசல் படியில் நின்றுகொண்டு !

தண்ணிக்கு கட்டுப்பாடு
காலையில் சாப்பிடப் புட்டு
நல்லெண்ணெய் நாட்டுமுட்டை
வேளைக்கு ஊட்டுவார்கள்!

தண்ணிக்கு பதிலாக
பிளேன் சோடா
மத்தியானம் சோறோடு
வெள்ளைப்பூண்டு முளகாணம்!

தற்செயலாய் புண் பழுத்தால்
தானாக பழி விழும் அவன்மேலே
தண்ணீர் சுரம் என்று
பெயர் வரும் தன்னாலே!

பனங்கொசு படையெடுக்கும்
பட்டாளமாக
சினங்கொண்டு விசிறியால்
விசிறுவாங்க விரட்டியடித்து !

சீலை கழற்றும்போது
சீவனும் போய்வரும்
காலைப்பிடிப்பவருக்கு
காலால் உதை விழும்!

சீலை களற்றியபின்
காலை அகட்டிக்கிட்டு
சாரன் பட்டிடாம
தூக்கிக்கிட்டு நடப்பாரு
சின்னத்து மாப்பிள்ளை!

"அசறு"விழுந்தவுடன்
ஏழாம் நாளன்று
தலையிலே நீரூற்றி
தண்ணி வார்ப்பாங்க!

முதன்முதலாய் போனவுடன்
பள்ளி நண்பரெல்லாம்
சுற்றிநின்று அனுபவத்தை கேட்டு
ஆளுக்காள் பகிர்வாங்க

சிலநாளைக்கு
எல்லாரும் ரவுசருடன்
இவர்மட்டும் சாரனுடன்
மாப்பிள்ளை கோலத்தில்!

கிழக்கிலங்கையில் எமது பிரதேசத்தில் சாதாரணமான குடிமக்கள்  தமது ஆண்பிள்ளைகளுக்கு செய்யும் கத்னா என்றழைக்கப்படும் விருத்தசேதனம். எண்பதுகளிலும் அதற்கு முன்னரும் இப்படித்தான் நடைபெற்றது.இது  ஒரு பெருவிலாவாகவே எடுக்கப்பட்டது.சுன்னத்து/சின்னத்து என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும்.எதிர்கால சந்ததியினர் அறிந்து வைத்திருக்க இந்த ஆக்கம் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அல்லையல்-அக்கம்பக்கத்தார்
அசறு-மதியத்துக்கு பிந்திய நேரம்,புண்ணின் காய்ந்த தோல் .
அயத்துப்போகாம-மறந்திடாமல்
பகல்வெத்தி-மத்தாப்பு.
செப்பு-சீர்
 —

Tuesday, March 4, 2014

என்றும் காதல் !












புருவங்கள் சுருங்கினாலும்
வருடங்கள் உருண்டாலும்
பருவத்தில் வந்த காதல்
உருமாறிப் போவதுண்டோ?

பூங்கொத்து தேவையில்லை
புன்னகைப்பூ ஒன்று போதும்!

பூங்காற்று தேவையில்லை
உன் சுவாசம் ஒன்று போதும் !

மண்டு,மனை தேவையில்லை
ரெண்டு கண்ணின் பார்வை போதும்!

காசு பணம் தேவையில்லை
பேசுகின்ற விழிகள் போதும்!

காணி நிலம் தேவையில்லை
ஒன்றிணைந்த உள்ளம் போதும்!

ஒடுங்கிய கரங்களுக்குள்
அடங்கிப்போக தேவையில்லை
நடுங்கிய கரங்களின்
ஸ்பரிசம் போதும்!

துடித்திடும் விழிகள் தேவையில்லை
புரிந்திடும் உன் உள்ளம் போதும்!

தூங்குகின்ற உணர்வுகளை
தட்டியெழுப்ப தேவையில்லை
தாங்குகின்ற உள்ளம் போதும்!

நினைவுகளை மீட்டு
நனைந்திருப்போம் வா!
கதைகள் பேசி
மகிழ்ந்திருப்போம் வா!

முதல் சந்திப்பை மீண்டும்
மனதிலே மறுபதிப்புச் செய்வோம்
அச்சிடாத புத்தகமாய்
அசைபோடலாம் வா!

இன்னும் அந்த நாணம்
எனக்குத்தெரிகிறது

ஒதுங்க இடம் தேவையில்லை
ஒதுங்கித்தானே இருக்கின்றோம்!

குடைகளும் தேவையில்லை
போர்வையும் தேவையில்லை
ஒருவரை ஒருவர் அன்பால்
போர்த்துக்கொள்வோம்
ஆதரவுடன் ஆளுக்காள்
பார்த்துக்கொள்வோம்!

உனக்கு நானூட்ட
எனக்கு நீ ஊட்ட
குழந்தையாய்
மாறுவோம் கிழவராய்
ஆனாலும்!

நாம் செல்வோம்
சுற்றுலா
என்னுடனே நீ
வா நிலா!

Monday, March 3, 2014

அப்பாவின் அகால மரணம்




அப்பா அகாலமாக...........!

பலவீடு கட்டினாய் நீ
செங்கல் வெட்டி,
உனக்கு
குழிவீடு வெட்டுது
நான்கு
மண்வெட்டி !

யார் பேச்சையும்
கேட்காத நீ
பேச்சு மூச்சற்று
கிடக்கிறாய்
நீட்டி நிமிந்து
படுக்கிறாய்!

சுத்திச்சுழன்ற உன் விழி
குத்திட்டுப்பார்க்கிது
உயிர்போன வழி!

கொட்டும் பறையர்
கும்மாளம் போடுறார்
வீட்டில் அனைவரும்
கூடி நிற்கிறார்!

போலிக் கண்ணீரை
மாலையாய் கொட்டுறார்
கூலிக்கு சிலபேர்
மார்பிலடிகிறார்!

சொத்துப்பிரிக்கிறார்
மனக்கணக்காலே
செத்துப் பிழைக்கிறார்
மணிக்கணக்காக !

திட்டித்தீர்க்கிறார்
திறப்பினைத்தேடி
கொட்டித்தீர்க்கிறார்
குறைகளைக்கூறி!

மூலையில் சந்தணம்
கடமைக்குப் புகைகிறது
சேலையில் ஓருயிர்
கண்ணீரில் புதைகிறது!

எப்ப புதைப்பார்
எப்ப எரிப்பார்
என்ன சுணக்கம்
எனப்பல வினாக்கள்!

கொடுத்தவரெல்லாம்
எடுத்தவரானார்
கடன் கொடுத்தவர் மட்டும்
கேட்கவுமானார்!

விறைத்த கட்டைவிரல்
மையிலே குளிக்குது
குளித்தவிரல் கையினை
கடதாசி தொட்டுத் துடைக்குது!

நாலிரண்டு கால்
நடந்து போகுது
நாவரண்டு அவள்
அழுகையும் கேட்கிறது!

பிள்ளைக்கு பிரிந்தது
சொத்துதெல்லாம்
அன்னையைப் பிரிந்தது
அவள் சொத்தன்றோ?

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 march 3rd

Saturday, March 1, 2014

அந்த(க ) அழகி!















அந்த(க ) அழகி!

அந்தகாரத்தின்
சொந்தக்காரி நான்
நந்தவனத்தில் என்னால்
நடக்க மட்டுமே முடியும்!

ஒளி என்ற சொல்லின்
ஒலியைத்தான் கேட்டதுண்டு
விழி வழியாய் ஒருநாளும்
பார்த்ததில்லை!

நிறங்களின் நாமம்தான்
நானறிவேன்
நிறங்களை நான் கண்டதில்லை!

கருப்பின் எதிர்வண்ணம்
எனக்கோ புதிர் வர்ணம்!

என் கண்களைத்தவிர
ஏனைய உறுப்புக்கள்
எப்போதும்
பார்த்துக்கொண்டே இருக்கின்றன!

தொழிலிழந்த கண்களுக்கு
கருப்புக்கண்ணாடிச் சட்டை
பார்ப்பவர் புரிந்து கொள்ள
அது விளம்பர அட்டை!

வெள்ளைப் பிரம்பொன்று
வீதியைக்கடப்பதற்கு
எந்தப்பிரம்புமில்லை
விதியைக்கடப்பதற்கு!

இருளே எனது ராஜ்ஜியம்
விழியற்ற என்
வாழ்வோ ஒரு பூஜ்யம்!

சிருஸ்டித்த கர்த்தா
சிரசுவைக்க மறந்துவிட்டார்
சிரழிந்து கிடக்கிறேன்
சிறகொடிந்த பறவை நான்!

அகவிழி திறந்துதான்
அகிலத்தைப்பார்க்கிறேன்
அகப்புலக் காட்சியால்
அதன்வழி காண்கிறேன்!

முட்களை நான்
வேண்டுமென்று
மிதிப்பதில்லை
முன்னே வரும் உங்களை
நான் தெரிந்து கொண்டும்
முட்டவில்லை!

ஒளிவாங்கு
விழி செய் பாவங்கள்
செய்யாமல் தப்பிவிட்டேன்
ஏறி நரகம் போகாது
எனை நானும் காத்து விட்டேன்!

ஈக்கள் கூட
என்னை ஏளனிப்பது
எனக்குப் புரிகிறது!

நீங்கள் கூட
என்னை இரக்கமாய்
பார்ப்பதும் தெரிகிறது!

தினமும் வழிதேடித்
தடுமாறும் என்னை
தானாகத் தொட்டு
வழிகாட்ட வந்தாய்

அதுபோல் கலியாணம்
செய்தெனக்கு
தாலிகட்ட வருவாயா?
எந்தன்
இருவிழியாய் இருப்பாயா?

உன்கண்ணால் உலகத்தை
பாத்திடுவேன்
என் எண்ணம் உனக்காக
காத்திடுவேன்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 march 1st

தொற்றாத புற்று!














தொற்றாத புற்று!

தொடமுடியா இடத்தில்
தெரியாமல் தொடக்கி
கெடுபிடியா உடம்பில்
விரைந்து படரும்!

இரத்தத்தில் தோன்றி
வருத்தங்கள் காட்டும்
சத்தங்கள் இன்றி
நெருப்பினை மூட்டும்!

தீராத தலைவலி வாந்தியும்
வலிப்புடன் வரும்
கட்டி மூளையத்தொட்டால்!

விழுங்கிடக் கஷ்டம்
நீராகாரம் மட்டும்
வழுக்கிடும் ஒடுங்கிய
தொண்டைக் கட்டியினூடே!

பெருந்தீட்டு போகும்
தொடராய் ,நீ சோர்வாய் பலனாய்
கருப்பையில் கட்டி
நீ உணர்வாய்!

செரிமானம் குறையும்
பசிதாகம் பறந்து
ஒருபிடிச்சோற்றில்
முழு வயிறு நிறையும்
இரைப்பையில் கட்டி
இருந்திடும் போது!

எலும்பினில் கட்டி
உன்னை வைத்திடும் கட்டி
நடந்திட மாட்டாய்
நீ அடி வைத்து எட்டி!

தண்டுவடம் துவண்டு விடும்
வந்த இடம் வளைந்து விடும்!

தசையினில் தொட்டு
உன் அசைவினைக் கட்டும்!

நாக்கிலே வந்து சொல்
வாக்கினை கெடுக்கும்
ஆக்கிய சோற்றின்
சுவையினை மறைக்கும்!

சொக்கிலே வந்து உள்
தாடைக்கு பரவும்
மூக்கிலே முளைத்து
மூச்சையும் மறிக்கும்!

குரல் மாறிப்போகும்
உரல் போல ஆகும்
சுரம் ஓடித்தேயும்
குரல்வளையினில் படின்!

நுரையீரல் வந்து
இடைவிடா இருமலும்
விரைகின்ற மூச்சுடன்
குருதி சளியுடன் வரும்!

சிறுநீரில் இரத்தம்
அதன் பாதையில் கட்டி
சிறு நீர் சேர்ந்து அடிக்கடி
முடுக்குமே வந்து முட்டி!

மலச்சிக்கல் வந்து
உனைச்சிக்கலாக்கும்
மலம் நீராய் மாறி
உன் குடல்நோய் காட்டும்!

தோலிலே கட்டு
புண் மாறாததையிட்டு
தோலெல்லாம் திட்டு
தோலிலே சில பொட்டு!

ஈரலில் வந்தது
தீராமல் நின்றது
ஓரக் கண்ணின்
வெண்நிறம் மஞ்சளாய்
தோலையும் மாற்றிடும் !

பால் குடிமறந்த பிள்ளை
அவள் பால் கொடுப்பதுமில்லை
தடித்த திரவம் வடியும் சிவப்பாய்
பிள்ளை பால்குடிக்கும் இடத்தில்!

நிறை காட்டும் தராசு
உனைப்பார்த்து முறைக்கும்
உனக்கென்ன குறை
என்று வினா ஒன்று தொடுக்கும்!

களைப்பு உன்னிலே
களைகட்டும்
இளைப்பு உன்னிலே
கொடிகட்டும் !

உழைப்பு உனக்கினி
தூரமாகும்
சிரிப்பு தள்ளி நின்று
கை காட்டும்!

காய்ச்சல் அடிக்கடி
மாச்சலுக்கு நீ எடுபிடி
ஓய்ச்சல் ஒழிவின்றி
உழைத்திடும் இதயம்
இதனிலே இல்லை!

வயதெல்லை இல்லை
இது பெரும் தொல்லை
பால் எல்லை இல்லை
விதி வரை எல்லை!

நாட்பட்ட
குணங்குறி நீ அறி
பயம் அதை நீ எறி
நாடிடு மருந்து
தேடிடு விரைந்து!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 MARCH 2ND(BD NA)

நாம் எல்லோரும் நமக்கும்,ஏனையோருக்கும் புற்றுநோய் வராமல் இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்
வாந்தவர்களுக்காய் அவை குணப்பட மனம் உருகி பிரார்த்திப்போம்!
நாம் வாழும் சூழல், உண்ணும் உணவுகள்,கதிரியக்கம்,பழக்கவழக்கம் போன்ற விடயங்களில் எச்சரிக்கையாய் இருப்போம்!