நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, May 24, 2014

குடிகாரன் மனைவி


கையிலே குழந்தையுடன்
தெருவிலே திரிய விட்டாய்
மெய்யிலே எண்ணெய் ஊற்றி
உயிருடன் எரிய வைத்தாய்

நீ கடன்படாத இடமும் உண்டா
அறவே பண்படாத இதயம் உனதா
முரண்படாத நாளும் உண்டா
இனி எனக்கு நீ வேண்டாம் போடா!

விதியென்று சொல்ல மாட்டேன்
வினையை விதைத்தவள் நானே
கதியென்று இருந்த என்னை
கதறத்தான் விட்டாய் நீயே

கிளிச்சோடி போலிருப்போம் என்று
பொய்யெல்லாம் சொல்லி வைத்ததாய்
போர்க்கோழி போல வந்து
எந்தன் கையிலே காயம் வைத்தாய்!

வீட்டில் உடையாத
பொருளும் மீதமில்லை
உடம்பில் உதைபடாத
இடம் ஏதுமில்லை

எனை நீ அடிக்கும் வேளை
படிக்கின்ற பிள்ளை மனமும்
துடியாய் துடிக்குறதே
தடுக்கின்ற வலிமையின்றி
ஒடுங்கித்தான் நடுங்குதே தினமும்!

படிக்காத முரட்டு மனிதா
அடியாதே என்னை நீயும்
இடிதாங்கும் இதயம் எனினும்
இனிமேல் அடிதாங்க இயலா வனிதை!

குடியாதே என்று சொன்னால்
குதித்து எகிறுகின்றாய்
கண் தெரியாத குருடனாட்டம்
மிதித்து மீறுகின்றாய்!

குடித்துக் குதிப்பதென்றால் இனி
குடிலுக்குள் இடமும் இல்லை
வெடித்துச் சிதறி உன்னை
அழிக்க எனக்குப் பயமும் இல்லை!

குடி மறந்தால் மனைக்கு வா
வெறி முறிந்தால் வேலைக்குப்போ
அடிமேல் அடிபட்டு நகர்ந்த அம்மி நான்
இடியாலும் இனி மாறேன்
இது உண்மைதான் இருந்து பாரேன் !

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 may 24

0 கருத்துக்கள்:

Post a Comment