நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, February 28, 2014

பர பரக்க பறப்பு!



விரிந்த சிறகை 
திரும்ப மடிக்க 
மறந்த பறவை!

பிரிந்தவர்களையும் 
கூடப்போகின்றவர்களையும் 
கூட்டிக்கொண்டு போகும் 
கூட்டாளி!

பாரமற்ற பஞ்சுகள் 
கிழித்து 
பாரமான நெஞ்சுகள் 
சுமந்து செல்லும்!

அச்சத்தை ஆடைகட்டி
உச்சத்தில் 
ஏற்றிச் செல்லும்!

நெஞ்சுக்கூட்டுக்குள் 
ஒருமுறை தண்ணீர் வற்றும்!
உந்தன்கரம் பிடியை
இறுகப் பற்றும்!

நிமிடங்ககளின் பெறுமதி 
பலமுறை 
நிறுக்கப்படும்!

பிரபஞ்சக் கடலின் 
புரியாத ஆழம் 
நரிவாலை போல
நம் விமானப் பயணம்!

இரவிலே எதுவும் 
தெரியாது
பகலிலே எல்லையே
புரியாது!

கனத்த இதயங்கள்
கனவுகளுடன் மிதக்கும்!

கவிஞனுக்கு 
மனதில் பூப்பூக்கும்
கவிதை 
மழை பொழியும்!

விழியாலே நீ காணும் 
காட்சி
இது அழியாத இறைவனின்
அத்தாட்சி !

அங்கே அசதியால் கனத்த உடல்
அசந்து தூங்கும்!

முழங்கால் மூடாத 
கன்னிகள் எடுக்கும் 
சம்பளத்திற்காய்
உன்மேல் உதிர்ப்பார் செயற்கைப் 
புன்னகை!

பிரிந்து செல்கையில்
ஊர்ச் சாமான்களோடு
உறவுகளின் சுருக்கமுடியாத அன்பு
சிறிய பொட்டலங்களுக்குள்
சுருங்கிக் கொண்டு!

திரும்பிப் போகையில் 
களிப்பிலே குளிக்கின்ற மனது
இனி இனிப்புக்கள் வாங்கி 
களிப்புக் கொள்ளும் !

பொண்டாட்டிக்கு 
பெட்டிநிறைய பண்டங்கள்!
பிள்ளைக்கு 
அள்ளிக்கொஞ்சும் 
விழையாட்டுச் சாமான்கள்!

மகளுக்கு பொம்மை
மகனுக்கு கடிகாரம்

அம்மாக்கு ஆசைபட்டது 
அக்கா கேட்டுவைத்தது
அப்பாக்குச் சட்டை
தம்பிக்கும் இருக்கு 
நல்ல வேட்டை!

கர்ப்பிணித் தங்கைக்கு 
குங்குமப்பூ
இப்படிச் சில இத்யாதி!

உருளுகின்ற உலகத்தின் மேலே 
உலோகம் பறக்கிறது 
புரளுகின்ற மனங்களை 
தன்னகத்தே கொள்கின்றது!

ஊர்ந்திடா இவ்வூர்த்தி 
வானில் விரைந்திடும் புகையால்
பெயர் எழுதி ! 

உறுமலே மந்திரம் 
உன் உள்ளிருக்கு
உருக்கு  எந்திரம்!

மறுபடி எப்பொழுது
பறப்பது என்றெண்ணி
மனக்கண்ணில் 
மாதங்கள் கணிக்கின்றேன்

கனவுகளின் கால்களுக்கு
புதுச்சலங்கை கட்டுகிறேன்!

Wednesday, February 26, 2014

நாவடக்கு!



தீ சுட்டாப் பொரி
நா சுட்டாவடு!
நா கட்டிச் சிரி
நீ சுடாதே நாவாலே வடு!

உன் நாக்கு நீண்டு
உள் மனதின்
ஆழத்தை
ஊரார்க்கு காட்டும்
தானாகத் சென்று !

பூக்களைப்
பொசுக்கும் பொல்லாத
கனல் அதுவே !

நாக்கினைப் பல்லால்
காப்பின்
ஆக்களின் அதிகாமானோர்
உனக்கினி கூட்டாளி!

புரண்டு புரண்டு
போக்கினை புரட்டிச்செல்லும்
நீண்டு நீண்டு
உண்மையை திரித்திச் செல்லும்!

வாழவேண்டிய பல
விருட்சங்களை
விழவைக்கும்!

பூவுக்கு தேன்
இதழிலே இல்லை அதுபோல்
நாவுக்கு மருந்து
வாயினில் இல்லை!

உள்ளமே
உன் நாவு
அதை மென்மையால்
நீ தடவு
வரப்போகும் வார்த்தைகள்
தேன் தடவித்தான் வரும்!

உச்சரிக்க முன்
கத்தரிக்க வேண்டும்
எச்சரிக்க மறந்தால்
தத்தளிக்க கூடும்!

சுவை அறியும்

நாக்கு

அடங்காமல்

பகை புரியும்!


நாக்கட்டி நீ
அன்புக் கோட்டை கட்டு,
தீக்கட்டி தெறிக்காமல்
மனக் கோட்டையைக்
நீ கட்டு!

Tuesday, February 25, 2014

அந்தக்காலம்














தென்னம் மட்டைவெட்டி
அதில் வண்டில் மாடு கட்டி
அண்ணனும் தம்பியும்
வீதியில் இழுத்து திரிந்துக்கிட்டு

பனை நுங்கு வெட்டி
கெண்டித்தின்ற பின்பு
ரெண்டு நுங்கிணைத்து
வண்டி ஒன்று செய்து
இடுக்கு முடுக்கெல்லாம்
கொண்டு சென்றிடுவோம்!

பழைய வளையமும்
சிதைஞ்சிபோன
டயர்களும் எங்களது
வாகனங்களாய் இருந்தன !

முடியப்பட்ட
கயிற்று பேரூந்துகளில்
செருப்பணியா கால்களுடன்
தெருக்கோடிவரை
ஓடி மகிழ்ந்திடுவோம்!

சாரதியின் கைகளிலே
பிரம்பு வளையம்
கற்பனையால் கைகளில்
வளைந்து நடனமாடும் !

ஒருவர் முன்னிழுக்க
ஒருவர் பின்னாலிழுக்க
இடைப்பட்ட சின்னவர்கள்
முன்னவரைப் பின்பற்ற
கயிற்றுப் பேரூந்து
முச்சந்தி கடந்து செல்லும்!

பீப் பீப்
என்ற சாரதியின் சத்தம்
பாதையிலே போவோரை
ஓரம்போகச்சொல்லும்!

வாயால் உமிழ் நீரை
உமிழ்ந்து கொண்டு
காலால்
ஊரெல்லாம் சுற்றிவரும்
கயிற்றுப் பேரூந்து!

கயிறறுந்தால்
காற்றுப்போனதாய் அர்த்தம்
கயிறிழுத்தால்
இறக்கமிருப்பதாய் கருத்து !

திடீரென
திசைமாறும் வேளை
சிலர் குப்புற விழ
தரையைத் தாக்கிய
முழங்காலின் மூக்கில்
குருதி வடியும்!

சொல்லாமல்
வண்டி திடீரென நிற்க
நடுவிலே நிற்பவர்
ஆளுக்காள் முட்ட

பின்னந்தலையும்
நுனிமூக்கும் நச்சென
முத்தமிட்டுக்கொள்ளும் !

இதுபோல

அடிச்சான் பிடிச்சி
ஒளிந்தவனை
கண்டுபிடிச்சி

கள்ளன் போலீசென்றும்
கபடி ,எல்லைஎன்றும்
துள்ளி விளையாடி
மகிழ்ந்திருக்கும் நாட்களிலே!

துவக்குச் சுடுவதும்
குண்டு வெடிப்பதும்
அட்டாக்கு பண்ணிக்
கொண்டு அடி பிடி நடத்துவதும்
படிப்படியாய் வந்து சேர்ந்தது!

வீதியிலே கண்டது
செய்தியிலே கேட்டது
டீவியிலே பார்த்தது
வாழ்வினிலே இணைந்தது!

அடியோடு மறந்தோம்
அத்தனை விளையாட்டும்
படியேறிக் கடந்தோம்!

விளையாட்டு மட்டும்
மாறல எங்கள்
மன நிலையும்
மாறியது !

பசுமை பறந்து செல்ல
பொசுக்கும் பண்புகள்
தொற்றிக் கொண்டது
மனங்கள் எரிந்து
பற்றிக்கொண்டன

கொஞ்சல்கள் எல்லாம்
குழிதோண்டிப் புதைத்து
வஞ்சம் வந்து வசதியாய்
குடியேறிப்போச்சு!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 feb 25th

Monday, February 24, 2014

புலம்பல்!

புலம்பல்!

ஒன்றல்ல இரண்டல்ல
ஒருடசின் பிள்ளைகள்
ஆணும் பெண்ணும்
அடுக்கடுக்காய் பெற்றெடுத்தேன்!

ஆங்கிலப் பள்ளிகள்
இங்கிலீசுப் பாணியில்
நான்பெற்ற பிள்ளைகள்!

பிள்ளைகள் பெருமைகள்
பேசியதை புத்தகமாய்
எழுதிடலாம்
அத்தனை புகழ்ச்சிகள்
மனம் சொரிந்த மகிழ்சிகள்!

நிஜங்களை விற்று
நான் பொய்களைத்தான்
பெற்றிருக்கின்றேன்
என்பது இப்போதுதான் புரிகிறது!

உழைக்கும் காலத்தில்
துணையை தனியே
தவிக்க விட்டு
அங்கும் இங்கும் அலைந்தததற்கு
கிடைத்த தண்டனையோ?

களைத்துத் தவிக்கும் நேரம்
அவள் என்னை
தனியே விட்டு
நிரந்தரமாய் போய்விட்டாள்!

எத்தனவை தடவை
குழந்தை வயதிலே
என்னை மடிக்குள்
அழுக்குப்படுத்தியிருப்பார்கள்?

ஆனால் நான் இப்பொழுதெல்லாம்
கழிவுகளின் மேல்தான்
அமர்ந்திருக்கிறேன்
மலமே நான்பூசிடும் சந்தணம்
சலமே எனைத் தொடும் பன்னீர்
ஆனால்
அவை உங்களைப் போலில்லை
என் தோலில் ஒட்டி வறண்டு
பிரிந்து செல்ல மறுக்கின்றன!

நான் மரணித்தபின்
நீங்கள் கட்டிப்பிடித்து அழத்தான்
போகிறீர்,
ஏனெனில் ஊர் உங்களைத்
தூற்றும் அழாததற்காய்!

நாற்றமடிக்கும் என்னை
ஏறெடுத்தும் பார்காதது
குற்றமென்று தெரியாதா?

என் வாரிசுகள் வந்து
எட்டி நின்று பேசுகிறீர்
நெடி தாங்காமல்
கிட்ட வர மறுக்கின்றீர்!

உங்களுக்கு மட்டும்தான்
மணநுகர்ச்சி கலங்களோ?
எனக்கு மட்டும் என்ன
அவை மரத்தா
போய்விட்டன?

அட்டவணை வைத்தா
உங்கள்மீது அன்புவைத்தேன்?
நேரசூசிப்படி
கட்டுச்சோறு தின்னவா
பெற்றுவளர்த்தேன்?

என் சுவாசத்தைக் கூட
என்னால்
கட்டுப்படுத்திக்கொள்ள
முடியவில்லை
உங்களைப்போல அது கூட
சொல் கேட்கிதில்லை!

நல்லவேளை என் கண்கள்
இன்னும் பார்க்கின்றன!
மனக்கண் இளமையை
அசைபோட்டுப் பார்க்கிறது!

இந்த ஒற்றைத்தூணும்
ஒலி எழுப்பும் "பேனும்"
எனக்காக துணையிருக்கு!
'
நம்பிக்கை வறண்ட
இந்தக்கிழவனின் கண்கள்
மட்டும் வற்றுதில்லை!

அறிவித்தல் கேட்டு வாருங்கள்
எனது மையித்தை மட்டும்
உங்களுக்கு நேரமில்லை
என்பதால் சுணக்கி விடாதீர்கள்!

விரைந்து சென்று
புதைத்திடுங்கள்
சமாதியிலாவது எனக்கு சாந்தி
கிடைக்கட்டும்!

இறுதியாய்
ஒரே ஒரு ஆசை
ஆம்
எனக்காக இறைவனிடம்
பிரார்த்தியுங்கள்

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
24th feb 2014

Saturday, February 22, 2014

I LOVE MY WIFE





உனக்காக
உன் தாயுடனேயே
பொறாமை கொள்ளும்
பேராசைக்காரி!

உருகி உருகி
உனக்காக ஒளிவிடும்
என்றும் அழியாத
விடிவெள்ளி!

உன்மனதை
அள்ளிச்செல்லும்
உள்ளத்துக் கள்ளி!

கெஞ்சல்
சலங்கை கட்டி
அடம் என்னும்
ஆடைகட்டி
நடனமாடும்
நாட்டியக்காரி

சிலவேளை நான்
அவள் குழந்தை
எப்போதுமே அவள்
என் குழந்தை!

விழிகளால்
வழியனுப்பி
திரும்பும்வரை
துடிப்புகளோடு
தவித்து தவம் இருப்பாள்!

நுளம்புகூட
உன்னை கடிப்பதை
பொறுக்காது
நுளம்பு கொல்லத் துணிந்த
அழகிய கொலைகாரி!

ஏமாற்றத்தால்
கண்ணீர்ப்பூக்களை
சொரிகின்ற
ஏகாந்தக் கொடி!

குமுறல்களை
பெருமூச்சால் மட்டும்
வெளிக்காட்டும்
வெடிக்காத எரிமலை!

நீ மாலைசூடிய
அவளே ஒரு அழகிய
பூமாலை!

முகம் பார்த்து
அதில் உன்
அகம் காணும்
அதிசய உளவாளி

இளிப்போரை பார்த்து
கண்ணுருட்டி பயமுறுத்தும்
பத்ரகாளி!

அன்பு
அத்தனையும்
தனக்கே உரியது
என நினைக்கும்
நியாயமான பேராசைக்காரி!

உனைப்படித்து முடித்து
உள்ளத்தில் முடிந்து கொண்டு
உலகில்
நடமாடும் நூலகம்!

நீ இன்னும் படித்து
முடிக்காத
முடிவிலிப் புத்தகம்!

நீ சிரிப்பதை
உனக்குத்தெரியாமல் ரசிக்கும்
உனது
இன்னொரு தாய்!

அடிக்கடி நீ
குறைகாண
அதில் மனம் துடிப்பாள்!
உனக்குப் பிடிக்கவே
எல்லாம் புரிவாள்!

உனது கடிதல்களை
தாங்காமல்
விம்மி வெடிக்கும்
மெல்லிய இழை!

அடிக்கடி
உன் பிழைகளை
பிடிக்காவிடினும்
மனமுவந்து மன்னிக்கும்
மனிதப் புனிதை!

மசுக்குட்டான்!
















மயிர்க்கொட்டி

சித்திரைப் புழுக்கம்
வியர்த்து வடியும் நாட்கள்
பூவரசம் பட்டைகளில்
சித்திரம் ஓட்டினால்போல்
ஆரவாரமின்றி அசைகின்ற
புழுக்கூட்டம்!

கிட்ட நெருங்கி
உற்று நோக்கினால்
உண்மை தெரியும் புழு
நெளிவதும் புரியும்!

பட்டுப்போல உடம்பிலே
பட்டவுடன் எரித்து விடும்
கூரியங்கள் வீரியமாய்
நீட்டிக்கிட்டு நிற்குது
உன்னை பயமுறுத்திப் பார்க்குது!

சண்டைக்கு தயார்போல
சிலிர்த்து கொண்டு நிற்குமே
முண்டக் கண் கொண்டு
முறைத்துத்தான் பார்க்குமே!

இலைகளின்கீழ் ஒருகூட்டம்
ஒழிந்திருக்க மரக்
கிளைகளில் ஒருபாட்டம்
மறைந்திருக்கும்!

பார்த்திடும் போதே பயங்காட்டும்
அதைக் கண்டால் யாரும்
மரப் பக்கம் வராமலே ஒரே ஓட்டம்!

காற்றிலே அசைந்திடும் கிளை
புழு உமிழ்நீரால்
பின்னிடும் இழை !

இழையிலே இறங்கிடும் புழு
உன் முகத்தில் தாவிடும்
சில பொழுது!

அழகான அன்னைக்கு
அவலட்சணப் பிள்ளை
அருகாலே சென்றிட
யாருமே இல்லை!

முட்டையிலே மயிரிலே
ஆனால் அதன்
குட்டியிலே மயிருண்டு
ஆண்டவனின் அற்புதம் இது
ஏட்டிலுள்ள தத்துவம்!

முருங்கையும் ,மாதுளையும்
வாழிடமாச்சு முட்டை
பொரித்து வளரிடமாச்சு!

கூடு கட்டும் முன்னர்
கோடு போட்டு போயிடும்
கூட்டுக்குள்ளே போனபின்
கூரியங்கள் விழுந்திடும்!

நடமாட்டம் கூடினால் கொல்ல
நடவடிக்கை எடிப்பார் நல்ல தீ
பந்தங்கட்டி பொசுக்குவார்
கந்தை வெட்டி அகற்றுவார்!

நஞ்சடித்துக் கொன்றவர்
இன்று கூடடித்து வளர்கிறார்!

வண்ணத்தி அழிந்தது
வண்ண நிறங்களெல்லாம் மறைந்தது

மசுக்குட்டான் காணல
இனம் பொசுங்கிட்டோ தோணல!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
26th feb 2014

Friday, February 21, 2014

சத்திர சிகிச்சை!















சத்திரசிகிச்சை!

சத்திர சிகிச்சை திடீரென வந்தது
திட்டமிட்டுச் செய்வது
புத்திரப் பேற்றில் சத்தமின்றி
வெட்டி எடுக்கவும் செய்வது !

உயிர்காக்க செய்வார் உன்
பிணிபோக்கச்செய்வார்
உயிர்போக்கி மீண்டும் பத்திரமாய்
உணர்வினை மீட்பார்!

உறுப்புக்கள் மாற்ற மிகவும்
பொறுப்பாக செய்வார்
அழகைக் கூட்ட மிக
நுணுக்கமாய் புரிவார்!

ஒருவரல்ல இருவரல்ல
ஒருகுழு இணைந்து செய்வது
பலபேரின் நன்மைக்காய்
பல வழியில் முனைந்து நடப்பது!

வித்தை இது சிந்தை சிதறிடாமல்
கண்ணும் கருத்துமாய் புரிவது
நத்தை வேகமல்ல இது, பல குதிரை வலுக்களை
எண்ணத்தில் கொண்டு கரங்கள் செய்யும்
ஒத்திகை பார்க்காத உண்மை நாடகம்.

நித்தரை கெட்டிடும் முதல்நாள்
அச்சத்தால் அதுபோல்
நித்திரை எட்ட நிற்கும் மறுநாள்
வெட்டிய தசையின் வலி எச்சத்தால் !

பதற்றத்துடன் பரபரத்த பார்வை
பிதற்றலுடன் படபடக்கும் நெஞ்சு
முதற்றடவை என்பதால் உனக்கு
முற்றிலும் புதிது இது ,
அதற்காக தேவையிலலை நீ அஞ்ச !

உணர்வுகள் முழுக்க மறைந்துபோகும்
தொடர்புகள் எல்லாம் அறுந்து போகும்
இடுப்புக்கு கீழே விறைத்து விடும் அன்றி
குறிப்பிட்ட பகுதி மரத்துப்போகும்!

கத்தரிக்கோல் சித்திரம் வரையும்
உள்ளுறுப்பை கைகள் அளையும் மாத்திரம்
பார்த்திருப்போர் கண்கள் அவற்றை
மனக்கண்ணில் பதியும் பத்திரம் !

வெள்ளை உடுப்புக்கள்
வழிக்கப்பட்ட தோல் இப்படி
கொள்ளை ஆயத்தங்கள் உன்னால்
அளிக்கப்பட்ட சம்மதத்துடன் !

பட்டினியாய் சில நாழி
படுக்க வேண்டும் நீ தோழி
இத்தனையும் உன் நலனை
எடுத்தியம்பும் நல் வழி!

உற்றார் உறவினர்கள் புடைசூழ்ந்து
வழியனுப்ப அச்சத்தை ஆடையாக
உடுத்திக்கொண்டு தள்ளுவண்டியிலே
விழியோரம் நீர்ததும்ப உண்பயணம்!

ஒளிக்கோப்பை தெரியும்
உன் பெயரைதெரிந்து கொண்டே
விழிபார்த்து கேட்பார்கள் வேண்டுமென்றே
உன் நிலை அறிந்திடவே!

மல்லாந்த நிலையில் நீ படுக்க
உனைப்பார்த்த ஒளிக்கோப்பை
நல்ல பிரகாச வெளிச்சத்தை
உன்மேல் தொடராக உமிழும்!

தோலில் சில வண்ணத் திரவங்கள்
கைபடாமல் தோய்ந்துவிட
தோலை நேராக கிழிக்குமொரு
கூரான முனை நெளிவு சுழிவின்றி!

உனக்குப்பதிலாக ஒரு
இயந்திரம் சுவாசிக்கும்
உன் இதய ஓட்டத்தை
ஒரு திரை தொடர்ந்து வாசிக்கும்!

ஊசியும் நூலும்
ஒன்று சேர்ந்து
பிரிந்த உன் பகுதிகளை
விரியாமல் கூட்டித்தைக்கும்

சிலவேளை புதிதாய் குழாய்கள்
முளைத்திருக்கும் அங்கு
அழிந்துபோன சில உறுப்புக்கள்
வெட்டிக் கழிந்திருக்கும் !

நினைவுடன் போன நீ
அரை நினைவு மயக்கத்தில்
அரட்டல் புரட்டலுடன்
திரும்பி வந்தாய் ஆர்ப்பாட்டம்
ஏதுமின்றி ..............!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 21st feb


இரு மனம் ஒன்றிணைந்து 
ஓதிடும் வேதம் 
ஒருநாளும் இங்கில்லை 
சிறு பேதம்!

ஒரு கொடி மலராக 
ஒருக்காலும் பிரியாது 
மனதினை மனம் பிணைந்து 
மணம் பரப்பும்!

புரிதலை புரிகொண்டு 
திரித்திடும் கயிறு இது 
அன்பினை பருகி நிதம் 
வளர்ந்திடும் பயிறு இது!

விரிசல்கள் வந்தாலும் 
ஸ்பரிசத்தால் மறைந்துவிடும் 
கரிசல் காட்டிலுண்டு 
பாரீஸ் நகரிலுமுண்டு!

கள்ளி முள்ளிலும் 
மெத்தைச் சுகம் காணும் 
உள்ளம் கொள்ளை கொண்ட 
உத்தம உணர்வு!

அள்ள அள்ள ஊறும் 
அதிசயக் கிணறு 
உள்ளத்தில் தோன்றும் 
அளவிலா ஊற்று!

வாழ்க காதல் 
உண்மைக்காதல்!
ஊடலும் கூடலும் வாடிக்கை 
ஆடலும் பாடலும் கேளிக்கை !
தொடுதலும் புரிதலும் இங்குண்டு

Thursday, February 20, 2014

துளிர்விடத் துடிக்கிறேன்!





















துளிர்விடத்துடிக்கிறேன்!

அரும்புகின்ற மீசை போல்
எனக்குள் எத்தனையோ
அரும்புகின்ற ஆசைகள்
தினமும் பெருமூச்சால்
மளிக்கப்படுகின்றன !

உங்களுக்கு
அமாவாசை ஒருநாள்தான்
எனக்குள்
எந்நாளும் அமாவாசைதான் !

என்னையே நான்
வெறுக்கின்றேன்
எனை அறியாமல் என்னுடம்பில்
இருந்து தானாக
அவை கழிந்து செல்லும்போது!

நல்லவேளை
என் மண நுகர்சிக்கலங்கள்
நல்ல புலனுடன்
இருக்கின்றன!

இன்று எதுவும்
என் சொற்கேட்பதில்லை
அன்று நான்
அடங்காமல் திரிந்தது போல்!

சிலவை நான்
விரும்பாமலே நடக்கின்றன
இன்னும் சில
விரும்பினாலும்
கிடைப்பதில்லை!

நெடிகள் இன்று
எனக்கு பழகி விட்டன
புதிதாக
என்னுடன் பழகுபவர்கள்
மட்டும் முகம் சுளிக்கிறார்கள்
அதுவும் தற்செயலாக!

முறுக்கிக் கொண்டுபோனேன்
இரண்டு சக்கர வண்டியில்
இன்று சுருண்டு கொண்டு
இருக்கிறேன் மூன்று சக்கர
வண்டியில் !

என் கண்முன்னே
என் கால்கள்
சூம்பி விட்டன !

இருந்து இருந்து
மரத்துப்போய்
மரத்த இடம் கூட அலுத்து
அடிக்கடி புண்ணாகி
புது வடிவம் எடுக்கிறது!

என்விரல் பிடித்து
நடை பழக்கிய அன்னை
நிலை குலைந்து
சிலவேளை நடை மறந்து
தலை விரி கோலமாக!

இப்பொழுதெல்லாம்
நான் அப்பொழுது
கணக்கிலும் எடுக்காத
அநேகமான
சடப்பொருட்கழுடனேயே
நான் அடிக்கடி பேசுகிறேன்!

நண்பர்களையே
நினைத்துக்கொண்டிருந்த
என்னை அவர்கள்
நினைவு வரும்போது
வந்து பார்த்துவிட்டுத்தான்
செல்கிறார்கள்

முன்பெல்லாம் அன்பும் பாசமும்
இன்று பர்தாபம் மட்டும்!

என்வீட்டு முகடு
எனது உற்ற நண்பன்
முன்வீட்டுச் சுவரும்
முற்றமும்தான் எனது
"பௌதீக எல்லை"

கனாக்காணும் காலத்தில்
நான் ஒரு
வினாக்குறியின்
கோலத்தில் !

காதலித்த பெண்ணிடம்
காதலை சொல்லும் முன்பே
நான் இப்படி
பேதலித்துப்போனேன்!

விந்தை இல்லை
வியப்பில்லை
இது கூட கொடை என்றுதான்
கூறவேண்டும்
ஏனெனில் இன்னும் என்
இரு கரங்கள்
ஒன்றுக்கொன்று
நகம் வெ ட்டிக்கொண்டுதான்
இருக்கின்றன!

நேற்று இல்லாத
ஒரு விடயம் இன்று
என்னிடம் அதிகமாக இருக்கின்றது!
ஆம்
அதுதான் நம்பிக்கை!

விழுந்ததுடன்
வீழ்ந்த மனது மட்டும்
இப்போ
எழுந்து நடந்து திரிகிறது!

அடிக்கடி
கோலூன்றிப்
பாய்கிறது!

என்னை நான்
இந்த இருட்டுக்குள்
இருந்து இழுத்துவரப் போகிறேன்!

இடுப்புக்குக் கீழே
இயங்காவிடினும்
என் மனம்
துடுப்புக்கள் இன்றி
வெகு தூரம்
சென்றுதான் வருகிறது!

உடல் அசைவுக்குத்தான்
எனக்கு எல்லை
உளம் எல்லையில்லாத
பயணத்தில்தான் எப்போதும்
இருக்கின்றது
அந்த அசதியில்தான்
நான் உறங்கிப் போகிறேன்!

கரங்களின் உரம்
இப்போது
சற்று அதிகமாக இருக்கின்றது
திடம் கொண்ட
மனது போல !

அசைய மறுக்கின்ற
கால்களுக்கு சவாலிடும்
நான்
ஒரே இடத்தில்
இருந்து கொண்டு
புதிய தொழிலில்
இணையப்போறேன்

என்னால் எழுத முடியும்
உரக்க படிக்க முடியும்
இறுக்கிப்பிடிக்க முடியும்
நடக்காமல் இருந்துகொண்டு
அதே இடத்தில்
என்னால் உழைக்க முடியும்

முயற்சி செய்து
புரட்சி செய்யப்போகிறேன்
கை கொடுங்கள்
உண்மையாக கை கொடுங்கள்
வெறுமனே வாழ்த்தாது
வாய்ப்பு வழங்கி
வாழ்த்துங்கள்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 feb 20th

ஒரு விபத்தில் சிக்கி
இடுப்புக்குக் கீழ் அங்கவீனமுற்ற உயர்தரம்வரை கற்ற நானறிந்த ஒருவருக்காக இதனை அர்ப்பணம் செய்கின்றேன்!

Wednesday, February 19, 2014

ஆரங்கிளியே

ஆரங்கிளியே எந்தன் நெஞ்சு
சோரம் போகுதடி
ஓரக்கண்ணாலே நீ செஞ்ச
குறும்பால மனப்
பாரமும் கூடுதடி!

ஓரம் சாஞ்ச தலை உன்னதடி
கதவு நிலயோரம் நீ சாஞ்சபடி
நீளக் கண்ணசைச்சி
நீ பார்த்தபோது
மூச்சு வாங்குதடி உள்ளம்
உன்னினைவில் நிற்காமல்
அஞ்சலோட்டம் ஓடுதடி!

நீ திரும்பும் திசையெல்லாம்
என் விழி திரும்ப
உன் பாதம் பட்ட இடம்
என் கண் தொட்டுச்செல்லுதடி!

மாடியில் நீ நின்று
மஞ்சள் வெயில் காய
தெருக்கோடியில் நின்ற என்
மனசு அலைபாய

உண்மையாய் சிரித்தாயா
இல்லை பல்வலியால் இழித்தாயா?

மெய் பொய் தெரியாம
உன் வீட்டைச்சுற்றுகிறேன்
கழுத்துச் சுழுக்கும் மட்டும்
உன்பக்கம் நோக்குகின்றேன்!

பொய்க்கு கதைசொல்லி உன்
கடைக்கு வருகின்றேன்
கதவடியில் கண்டவுடன்
வாய்க்கு வந்த சொல்லை மென்று
விழுங்குகின்றேன்!

குனிஞ்சி நடக்கின்ற உன்னழகை
தெளிஞ்சி ஓடுகிற
ஓடத்தண்ணிபோல கண்ணால
அள்ளிப்பருகுகிறேன்!

திரும்பிப்பார்ப்பாயா என்று
மனசாலே ஏங்குகிறேன்
அரும்பும் ஆசைகளை தினம்
கவியாய் வடிக்கின்றேன்