நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, April 12, 2014

வேப்பம் பிசின்



















சீமெந்தும் கல்லும் கலந்து
சுவாசிக்காத நச்சு மரங்களாக
ஊர்க் காடுகளில் முளைப்பதற்கு
முன்னர்
இயற்கை மரங்களெல்லாம்
வெட்டி வீழ்த்தப்பட முன்னர்!

தளைகம்பு வேலியிலே
வேப்ப மரங்கள் நிமிர்ந்து நிற்கும்
நல்ல
பலசாலிபோலே நிழல் பரப்பும் !

காட்டுக்கு போறவங்க
வேலியருகிலே
வேப்பமர மறைவிலே
கடமையை முடிக்கையில்
கையிலே இருக்கும்
கல்லாலே என்தாயின்
முகத்தை சின்னதாய் சிதைப்பாங்க!

களவிலே சந்திக்கும் காதலரும்
கம்பு வெட்ட
கத்தியோடு வரும் சகோதரனும்
காயங்கள் செய்வாங்க என்தாயின்
காயமுறாக் காயத்தில் !

வாயில்லை என்தாயின்
வலி சொல்ல
காயத்தினூடாக வழிந்துவரும்
கண்ணீரே காயம்பட்ட
கதை சொல்லும்
கண்ணீரும் கட்டியாகும்!

ஆம் நான் கண்ணீரில்
கருவாகி பிறந்தபிள்ளை !

அழுகையில் பிறந்த பிள்ளை
நான்
அல்லும் பகலும்
வெயிலில் காய்வேன்
இரவின் குளிரில்
கொஞ்சம் இளகி
தலை சாய்வேன்!

இயற்கை என்னை
எதற்கோ தயார் செய்தது
அதற்காய் தினமும்
வதை செய்தது!

கண்ணாடி போலிருப்பேன்
நஞ்சல்ல நான்
முன்னாடி பலபேர்கள்
சுவைத்துப்பார்த்திருக்கார்!

கூரான பொருளுடன்
கூட்டமாய் வந்தார்கள்
நாலைந்தாம் வகுப்பிலே
படிக்கின்ற ஏழெட்டு
மாணவர்கள் !

குத்தினார்கள் குதறினார்கள்
ஒட்டியிருந்த பட்டைய
வெட்டி என்னையென்
அன்னையுடன் குடும்பத்தோடு
பிரித்தார்கள்!

அழுவதற்கு என்னுள் ஈரமில்லை
ஏனெனில் அது கோடை காலம்
எனக்காக என் அன்னை
நிச்சயமாய் மீண்டும் அழுவாள்
சத்தியமாய் நானறிவேன்!

கடத்திப்போனவர்கள்
குடத்தைப்போலவொரு
சிறு குடுவையில் போட்டு
நீரூற்றி
குடுதியால் மூடினார் !

பனி நீரில் நனைந்து பழகிய
எனக்கு நனை நீர் பழகிடுமா
மூழ்கியதும் மூச்சுத்திணரியது
உடலும் பொங்கிப்பூரித்தது !

இதுவரை இறுகிப்போயிருந்த நான்
இலகுவாகத்தொடங்கினேன்
வன்மை மென்மையாகிட்டு !

நீரும் நானும் கலப்புத்திருமணம்
செய்தோம்
பெயரையும் "பசை"என
மாற்றிக்கொண்டோம்!

நாங்கள்
கல்யாணத்துக்கு முன்னே
கருத்தடை செய்து கொண்டோம்
அதனால் பிள்ளைகள் இல்லை!

எங்களை தொட்டு
பட்டங்கள் ஒட்டும் பிள்ளைகளே
நாம் பெறாத செல்வங்கள்!

சித்திரத்தை வரைந்து
சுவரிலே ஓட்ட நாங்கள்
ஒத்தாசை புரிவோம்!

முத்திரையை கடிதக்
கூட்டுடன் ஒட்டி
அக்கரைக்கு கொண்டு
செல்வோம்!
அமெரிக்காவும் செல்வோம்
ஆபிரிக்காவும் செல்வோம் !

பட்டுக் கடதாசியை
விட்டத்தில் ஒட்டி
விழாக்களை நாங்கள்
விழாமல் தாங்கினோம்

கோபத்தில் கிழித்த காகிதமும்
இழுக்கையில் இரண்டாகப்பிரிந்த
காணி உறுதியும் எங்கள் சேவையால்
இன்னும் உயிர்வாழும் !

ஒட்டக்கூடிய அனைத்தையும்
ஓட்டிக்கொண்டே இருந்தோம்
பிரித்துப் பழக்கமில்லை
பிறவியே சேர்வைதானே ?

பொருளை வைத்துக்கொண்டு
ஈயாத பாவிகளை
பிசின் சென்று
எங்கள் பெயர்சொல்லி
அழைப்பதை
வன்மையாக கண்டிக்கிறோம்!

வேப்ப மரங்கள்
வீழ்ந்து நிலைகளாகவும்
கதவுகளாகவும்
நிரந்தரச் சிறைசெல்ல

எங்கள் இனம் அருகத்துவங்கிற்று
ஏழைக் கருப்பர்கள் எங்களை
கண்ணாடிபோட்டுவந்த
பணக்கார வெள்ளையர்கள்
நாகரீகத்தால் இடம்பெயர்க்க
இப்போ அடர்ந்த காட்டிலே
ஆங்காங்கே ஒழிந்திருக்கோம்
ஆயுள்கால அஞ்சாத வாசம்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்



குறிப்பு: காட்டுக்குப்போதல்- மலங்கழித்தல் இது ஒரு குழுஉக்குறி.



0 கருத்துக்கள்:

Post a Comment