நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, December 23, 2013

“கொழுக்கட்டை”






“கொழுக்கட்டை”












கடிக்கும் போது
கடைவாயில் நீரூறும்
கடித்த இடத்தில் 
இடைக்கிடையே தேன் வடியும்!

தேங்காய் ,சர்க்கரை சேர்ந்திருக்கும்
பாங்காய் பாகும் ஏற்றிருக்கும்!

பயறும் பகுதியாய் சேர்ந்திருக்கும்
வயிறும் உப்பி பருத்திருக்கும்!

பிள்ளைத்தாய்ச்சி பெண்களுக்கு
பிள்ளை வாந்தி நின்றவுடன்
மாமி சுட்டு அனுப்பிடுவா !

கர்ப்பமான கொழுக்கொட்டை
வயிற்றில் குட்டியை சுமந்திருக்கும்
மருமகள் அதனை உண்ணனுமாம்
மாமியாரின் எதிர்பார்ப்பு!

பல்லு வைத்த கொழுக்கட்டை
பல்லு முழைக்கும் பிள்ளைக்கு
சொல்லுத்தெழிவாய் வருவதற்காம்
உள்ளே
நெல்லு வைத்துக் கொடுப்பாங்க
பிள்ளை அப்பனை ஏமாற்ற !

வண்டில் அவியும் சிலநேரம்
குண்டுச் சட்டியில் சுடுபடும் சிலநேரம்
பெண்டில் பிள்ளை எல்லாரும்
உண்டு களித்து இருப்பாங்க !

பேசாதிருக்கும் ஆட்களை
வாயில் என்ன கொழுக்கட்டையா?
சொல்லால் சொல்லி வையும்
பலகாரம்!

பொல்லால் அடித்து வீங்கியதை
கொழுக்கட்டைபோல வீங்கியதே
சொல்லால் சொல்லிக் காட்டிடுவார்
உவமானம் !


உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2013 12 23

Friday, December 20, 2013

பாழி இறைத்தல்
















பாழி இறைத்தல்

வயலெல்லாம் வாழவைத்த
வாய்க்கால்கள் வறண்டு போய்
வாய் திறந்து கிடக்கும்

வாய்க்கால் ஓரத்து
மருத மரங்கள் மட்டும்
அடியிலே கொஞ்சம் நீரை பிடித்து
சருகாலே மூடி வைக்கும்

அருகாலே போவோர்க்கு
சருகுச்சத்தம் சல சலக்கும்
பாளிக்குள்ளே பாம்பிருக்கும்
கோரப்பல் முதலையும் இருக்கும்

பயத்தாலே பலபேர்கள்
பக்கத்தாலும் போவதில்லை

கூட்டாளி கொஞ்சப்பேர்
கூட்டாகச்சேர்ந்து கொண்டு
வீட்டார்க்கு தெரியாமல்
கட்டடிக்கு செல்வோம் அன்று
கட்டடித்தும் இருப்போம் வகுப்புக்கு!

அத்தாங்கு சின்ன வாழி
குத்துக்கம்பு ,உரப்பைகள்
தூண்டிலும்தான்
ஆயுதமாய் கொண்டுசெல்வோம்

ஆளுக்கொரு வேலை
அலுக்காமல் செய்து
வாய்க்காலுக்கு
கிழக்காலே வரம்பு செய்து

ஓட்டை வாளியாலே
ஒருவன் நீரிறைக்க
மற்றவரில் பயம் குறைந்த ஒருவன்
அறுகு படர்ந்த மடுவோரம்
ஆராய்வான் கையவிட்டு !

அப்படியே பிடித்திடுவான் புல்லோரம்
அண்டியிருந்த செப்பலியை,
இப்படிப்போகும்போது முன்கையை
நண்டிடுக்க திடுக்கிட்டு
கத்திடுவான்!

அத்தாங்கால் அடிநீரை
அள்ளும் நேரம்
சிப்பாய்கள் போல
குட்டி மீசை காட்டி
முன்னலையில் நின்ற
கெளுத்தி மீன் எல்லாம்
அள்ளுப்பட
அகப்படக்கூடாதென்று
அரைவாசி மீன்
தப்பி ஓட
முகம் காட்டி மறையுமொரு பெரியமீனும்

மரவேரை சுற்றிநின்று
சில மீன்கள்
எட்டிப்பார்க்க மறுபடியும்
வருகிறாரா என்று வேவு செய்யும்
சில மீன்கள்

பயத்தாலே சுரிக்குள்ளே
தலையை மட்டும்
நுழைத்துவிடும் சிலமீன்கள்
பிடித்தாலும் அடித்திடுவேன்
வழைத்தாலும் முறித்திடுவேன்
வீரவசனம் பேசும் விரால்கள்

அடிப்பாழிக்குள்ளே
ஆற்று மீன்களின் அவசரக்கூட்டம்
அரக்க பரக்க
ஒருவர் மீது ஒருவர்
ஏறி எட்டிப்பார்க்க
பரபரப்பாய் நடை பெறும்!

அடுத்த கட்டம் என்ன வென்று
அலசி பேசுவார்கள்
விடுப்புப்பார்க்கும் சில சோம்பேறி
மீன்கள்!

முடிந்தவரை போராடு
முள்ளாலே குத்து
சுருப்பள்ளி வீசு
துள்ளிப்பாய்ந்து பாரு
முடியா விட்டால் மாய்ந்து விடு
இது தலைவரின் சேதி!

இத்தனைக்கும் இறைக்கின்ற
பொடியனுகள் பொறுப்பாரோ?
இடைநடுவில் புகுந்து கொண்டு
அத்தாங்ககால் போர்தொடுத்து
அநேகம் கைதிகளை அள்ளி வந்து
மணலிலே கொட்டி விட

சுங்கானை பிடிக்கவந்தான்
ஒருவன்
சுள்ளென்று ஒரு தாக்கல்
சுருக்கென்று ஏறும் வலி
துள்ளி குதித்துக்கொண்டே
குறுக்குமறுக்கும் ஓடிட்டான்!

கெழுத்தி அழுத்திப் பிடிக்கப்பட
எழுந்து கொள்ள முடியவில்லை
உழுவை ஒருமுயற்சியும்
செய்யவில்லை சுத்த சோம்பேறி
ராமன் ஆண்டாலும் ராவணன்
ஆண்டாலும் அதற்கொன்றுமில்லை

அதிகம் கதை பேசி
அங்குமிங்கும் நக்கரித்த
அவல் பனையான்கள்
அவசரமாய் பிடிபட்டு
உரப்பைகளுக்குள்
சிறை சென்றன!

முள்வீரன் செப்பலியும்
சொல்வீரன் பொட்டியானும்
கருக்கு வாழ் வீரன் ஆரல்
சுருக்கென பாயும் குறட்டை
உருவத்தில் சிறிதான ஐரல்
நீள்மீசை ஜாவா மொத்தமாக
உரப்பைக்குள்!

பிடிபடாமல் நழுவிடும் விலாங்கு
தப்பிக்கொண்டு திரியுமங்கு
தடி கொண்டு ஆழத்தே தாக்க
அப்படியே விராலெல்லாம்
துடித்து வரும் யாரென்று பார்க்க !

இறுதியிலே அடிச்சுருப்பும் இறைக்கப்பட
உருத்தெரியாமல்
உறை சுரியில் ஒழித்திருந்த
விராலரசன்
மரவேரில் ஏறி
மறைந்திருந்தா தளபதி
விலாங்குப்பிள்ளை
எல்லாரும் கைதாகி கைப்பைக்குள் !

வட்டைக் கடையடியே
கொட்டுக்கிணற்றில் தண்ணியள்ளி
பட்டிருந்த சுரி கழுவி
வீட்டுக்கு போகுமுன்னே

சமனாகப்பிரித்தெடுத்து
அவசரமாய் வீடு செல்ல
வாசலிலே காத்திருக்கும்
விசாரணைக் குழுவொன்று

பிரம்படிதான் தண்டனை
சுங்கான் சுழன்றடித்த கையில்தான்
பிரம்படிகள்,
அடித்தாலும் கவலையில்லை
மீன்களுக்கும் தண்டனையாம்
எடுத்து எறியப்போறவாம்!

அழுது அடம்பிடிக்க அயல்வீட்டு
அக்காதான் பாவம் ஒருமுறைதான் என்று
புழுகிப்பரிந்துரைக்க
ஒத்துக்கொண்டா மீனை ஏற்றுக்கொள்ள

அடுப்படியே மீனறுத்து
சினைஎல்லாம் சேத்தெடுத்து
வாழை இலைக்குள்ளே வைத்து சுட்டிடுவா,
அனைத்து மீனையுமே ஆக்காமல்
சுண்டவைப்பா உழுவையையும்!

பால்ஆணம் அன்றுண்ண
மிளகாணம் வைத்துண்ண
தோலுரித்த ஜாவா பொரிக்க
சுளுக்கெடுத்த சுங்கான் கருவாடாக்க!

நாம் பிடித்த மீன்
நல்ல சுவை,
நானாகப்புகழ்ந்துண்டேன்
உண்ணும் வேளை

நடுத் துண்டும் தலையும்  
எனக்கென்றே
எடுத்துவைப்பா உம்மா
குடுக்கமாட்டா யாருக்கும்
கேட்டாலும் சும்மா!

2013 Dec 20
இந்த புகைப்படம் அடியேன் 2010ஆம் ஆண்டு உடும்புக்குளம்,காட்டுப்பகுதியில்  மீன்பிடிக்கும்போது எடுத்தது!

Monday, August 5, 2013

வில்லடி













கொய்யாக்
கொப்பு வெட்டி
கிணற்றடியில்
புதைச்சி வச்சி
மூணு நாள் போனபின்பு 
வெளியெடுத்து

Sunday, August 4, 2013

மரங்கொத்தி



உளுத்த மரம்
பட்டை வெடித்தமரம்
தேடிவந்து 
புழுக்களை பிடித்துண்பாய்
உளியின்றி
மரம் துளைத்து
உள்ளாலே
ஒழித்தபுழு
இழுத்தெடுப்பாய்!

Saturday, August 3, 2013

கரை வலை




கண்கசக்கி கண்விழித்து 
கதிர் பரப்ப 
முன்னெழுந்து 

மரத்தினால்
செய்த தோணி
ஆழிக்கடலுள்
இறங்கும் ஏணி
கூட்டாக நின்று தள்ள...

Sunday, July 21, 2013

சுமை


சுமை 

உங்கள் 
அறியாப்பருவத்தில்..............................
நீங்கள் எங்களுக்கு  
சுமையாகத் 
தெரியவில்லை
ஆனால்,.............!
எங்களது 
இயலாப்பருவத்தில் 
ஏன்  
நாங்கள் உங்களுக்கு 
சுமையாகிப் போகின்றோம்?.



வறுமையால் வந்த 
மனச்சுமைக்கு முன் 
மகனே/ளே 
நீ  
ஒரு சுமையா?



 நாளை 
நீ சுமக்கப்போகின்றாய்.
இன்றே கற்றுக்கொள்!

பெற்ற பின்னும் 
இறக்க முடியாத சுமையடா..............!


தற்கொலை



தற்கொலை 




எமனின் பாசக்கயிறு 
எப்படி இவன் கைகளுக்கு 
கிட்டியது?



*****************************


இலை    உதிர்த்த என்னிடம்
யாரும் வராத போது
மனிதா  எதற்காக வந்தாய்?
உனக்கும் எந்நிலையா?




கயிறு பலமா?
அல்லது 
நான் பாரமா 
என்ற போட்டியில்  
கயிறே
வென்றது ........



******************************************************************
மரமே !
நான் உன்னைப்போல
இந்த பூமிக்கு

பாரமாக இருக்க

விரும்பவில்லை !
இப்படிக்கு நான்
************************************************************


"தோல்வி என்னும் 
கோழையை 
நான் 
கொன்று 
கழுவேற்றிவிட்டேன் 
இனி 
தொட்டதெல்லாம் பொன்னாகும்
இது தைரியத்தின் கூற்று..........!

  20 04 2013

Wednesday, March 20, 2013

சீதனம்

காலச்சுழலில் சிக்கிய யாவும் சுழலுடன் அடித்துச்செல்லப்படுவது போல விரும்பியோ விரும்பாமலோ ,ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நமது சமூகத்தில் சீதனம் அப்படியே வேரூன்றி விட்டது.அதற்கு நாம் வாழுகின்ற சமூகத்தின் ஏனைய சகொதரர்களது நடைமுறைகளும் ஒரு முக்கியமான காரணி. இதனை முற்றாக இல்லாமல் செய்ய நம்மிடத்தில் என்ன திட்டம் உள்ளது?இந்த திட்டத்தை அமுல்படுத்த நம்மிடம் என்ன பொறிமுறை உள்ளது?வெறுமனே சீதன ஒளிப்புச்சங்கம் என்று ஒன்றை வைத்திருந்து என்ன பிரயோசனம்?
.பெண் பிள்ளையொன்று பிறந்து விட்டால் அதன் தகப்பன் தன வாழ்க்கையின் தரத்தை தானாகவே குறைத்துக்கொள்கின்றான்,ஏன் ?தனது செலவு கூடினால் செங்கல்லும் சீமெந்தும்,இரும்புக்கம்பியும்,கருங்கல்லும் வாங்க எங்கே காசு குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான்.,.சீதனமாக காசு மட்டும் கொடுத்தா பரவாயில்லை,ஆனால் வீடு ஒன்று கட்டி முடிப்பதற்குள் அந்த மனிசண்ட ஆயுளே முடிஞ்சிடும்,அதற்கிடையில் அடுப்படியிலிருந்து கொண்டு அல்லாஹ்வை கூப்பிட்டதிலும்,பெருமூச்சு விட்டத்திலும் அந்த மனிசியின் பாடும்போயிடும். 5,6 பொம்பிள பிள்ளை பெற்றவனின் நிலை என்ன?ஒரு ஆண் 5 வீடு கட்டத்தேவையில்ல ஒரு வீடு மட்டும் கட்டினால் போதும் .அது அவனது வீடு
இந்த விடயத்தைப்பேச இவருக்கென்ன தகுதியுண்டு?இவரும் சீதனம் வான்கினவர்தானே என்று கூறிக்கூறி ,கருத்துக்களை முன்வைத்தவர்களை எள்ளி நகையாடி,எட்டி உதைத்து அவர்களது கருத்துக்களை புறம் தள்ளி தசாப்தம்களை கடந்து விட்டோம்,.பலனென்ன றிசான நபீக் மட்டுமல்ல அவரது தாயும் இந்தவகையில் உருவானவர்தான்.இவ்வாறான நடவடிக்கைகளால் நம்மால் உரமூட்டி வளர்ந்து வேட்டிஎரியமுடியாத விருச்சமாக நம் முன் நிற்கின்ற இச்சீதனம் ,எதிர்ப்புக்கூடக்கூட பரவி பலம்பெற்றதே தவிர சீதனம் வாங்குவது குறைய வில்லை.ஏனென்றால் எதிர்ப்புக்கள் உதட்டளவில் மட்டுமே பிறந்தன உள்ளத்தால் அவை வரவில்லை. கிழக்கில் சீதனம் வாங்கதவர்களை விரல் விட்டு எண்ண முடியும் ஊர் ஊராக,உலமாக்கள் இதை மேடைகளில் கூறமுடியாது,ஆசிரியர்கள் பாடசாலைகளில் கூற முடியாது,பிராந்திய தலைவர்களும் கூற முடியாது.ஏனென்றால் நாமெல்லோரும் எதோ ஒரு வகையில் சீதனம் வாங்கியிருக்கின்றோம் ஒரு சிலரைத்தவிர(அவர்கள் நமது மரியாதைக்குரியவர்கள்)
எனவே அன்னா வரும் இன்னா வரும் என்று காத்திருக்காது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இந்த பயங்கரத்தினை இல்லாமல் செய்ய உடனடியாக முயற்சி செய்ய வேண்டும்,. எப்படி ?எப்படி
அன்பான தந்தைகளே,வாலிபர்களே?சகோதர சகோதரிகளே ,எதிர்கால இளைஞர்களே உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தைரியமாக வெளியிடுங்கள்

முஸ்லீம் காங்கிரசின் எதிர்காலம்!

தலைவருடைய காலத்திலிருந்தே முஸ்லீம் காங்கிரசினை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ,பேரினவாத கட்சிகளினை சேர்ந்த முஸ்லீம் அரசியல் கூலிகளினது
நெடு நாள் கனவை உணமையாக்கவே நாம் ஒரு தலைவரை வைத்திருக்கின்றோம்,இல்லை அவராகவே ,வலுக்கட்டாயமாக அந்த கதிரையை கட்டிப்பிடுத்துக்கொண்டிருக்கின்றாரா? என்று புரியவில்லை.உரிமைகளை பாதுகாக்க ஆரம்பமான பயணம் இப்பொழுது சலுகைகளுக்காக ஏங்கிக்கிடக்கின்றது கேவலமான விடயம்.எங்களது வாக்குப்பலத்தினால் அமைச்சு அதிகாரம் அனுபவிப்பதுடன் நின்றுவிடாமல் ,வாக்காளர்களது அபிலாசைகளையும்,சமூகத்தின் இருப்புக்கு இடைஞளாக இருக்கின்ற தடைகளையும் அஹற்றுவதிலேயே காரியமாக இருக்கவேண்டும்.சொடடிக்கும் எருது வைக்கல் சாப்பிடுவதை தவிர்க்க முடியாது ஆனால் அடிக்கப்போன சூட்டினையே முற்று முழுவதுமாக சாப் பிடுவது என்பது நியாயமில்லையே?1 989 இற்கு முன்னைய நிலையை முஸ்லீம் சமூகத்திற்கு தயவு செய்து ஏற்படுத்த வேண்டாம் ,தலைவருக்காக கட்சி என்றில்லாமல் கட்சிக்காகவும்,சமூகத்திற்காகவும் தலைவராக இருந்தால் தான் உண்டு இல்லாவிட்டால் புச்சி வெடில்தான் .

neeeeeeeeeeeeeeeeeee


வரமாக உன்னை பெற்றேன் ..............
நீ  தந்த  வரமே எனக்கு ...........................மோட்சம் 
நான்  உனக்கு தந்தது.........................தீராதசோகம் 

எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தால் என்ன நடக்கும்











மத்தள விமான நிலையத்தினால் அதன் அமைவிடத்திற்கு வடகீழ் திசையிலமைந்துள்ள யால விலங்குகள் சரனாலயமும் குமண பறவைகள் சரணாலயமும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுமா? வெளி நாட்டுப் பறவைகளின் வருகை பாதிக்கப்படுமா?

சில பறவைகள் 3500 மீட்டர் உயரம் உயரம் வரை பறக்கவல்லன தாழப்பறக்கும் விமானங்களுடன் அவை மோதுண்டு விபத்துக்குள்ளாக வாய்ப்புண்டு, அத்துடன் ஒலி மூலம் வெளிநாட்டு பறவைகள அதிகம் பாதிக்கபடுவதுடன் உல் நாட்டு விலங்கினங்களும் பாதிக்கபடலாம்.

எந்த பறவைகள் , விலங்குகளை காட்டி வெளிநாட்டவரை கவர நினைத்து இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டதோ அந்த விடயம் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவையே ஏற்ப்படுத்தும்.







எல்லாம்  வல்ல அல்லாஹ் அல்லாஹ்வின்  திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன் !


உமர் அலி பின் முஹம்மது இஸ்மாயில்  எனும் எனது  இந்த பக்கத்திற்கு  வருகை தந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.





நினைவுகளை   அஸ்திவாரமாக இட்டு...........................
கலவையான நினைவுகளை .......தெளியவிட்டு..........
ஒவ்வொன்றின் திணிவிற்கும் ஏற்ப..................................
கட்டப்படும்......................           இல்லம் !.................................