நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, August 5, 2013

வில்லடி













கொய்யாக்
கொப்பு வெட்டி
கிணற்றடியில்
புதைச்சி வச்சி
மூணு நாள் போனபின்பு 
வெளியெடுத்து


சைக்கள் டியூப்பெடுத்து
கவனமாய் கிழிச்சி
கோடியிலே கிடக்கும்
மான்தோலில் துண்டுவெட்டி
ஆசையாய்ச் செய்ததிந்த
சிறுபருவ சிறப்பாயுதம்!

தலப்பலி எடுத்து
அதன் ரெத்தத்த
மான்தோலில் தடவிவச்சா
தப்பாது குறி என்று
சொன்னார்கள் ,இதுதான்
சிறுபராய
முதல் மூட நம்பிக்கை!

காற்சட்டைப் பக்கட்டுகள்
கூளாங்கற்களாலே
கும்மென்று போயிருக்கும்
கூட்டமா நாங்கசெல்வோம்
குருவி தேடி!

குறிபார்த்து அடித்தவனை
குருவாக மதிப்பார்கள்
முடியாத நண்பர்கள்,

உச்சாரக்கொப்பில்
ஒய்யாரமாய் வீற்றிருக்கும்
ஒருவரையும் விடமாட்டோம்!

குறிதவறிப் போனதென்றால்
பட்டது ஆனா
பறவை விழவில்லை என்று
பட்டெனப் பறக்கும்
ஒரு கௌரவப் பொய்!
சே.......பக்கத்தால
போகுது.......
இது ஒரு சுய ஆறுதல்!

அருங்கந்தில் தொங்குகின்ற
ஒற்றை மாங்காய்க்கு
எங்களுக்குள் போட்டி வரும்!
சுருக்கென்று தைத்திடுமே
ஒருவன் பார்த்த குறி!

பொத்தென்று
விழுந்த மாங்காய்
பத்துப்பேர் பகிர்ந்துண்போம்!
அதுவல்லவா சந்தோசம்!

பந்தயத்தில் இலக்கான
தெரு விளக்கு
பட்டென உடைந்துபோக
நாங்கள்
மாயமாய் மறைந்துபோவோம் !

தோட்டா முடிந்து விட்டால்,
பசறிக்காய் பறிப்போம்!
மஞ்சவண்ணா ,
கோலிக்குண்டு எல்லாமே
வேளையிலே உதவ வரும்!

முற்றத்தில்
தோட்டுப்பாயில்
அவித்த நெல் காய்கையில்
இறைக்கவரும் காகங்கள்
சிறகுடைந்து போவார்கள்!

அடிபட்ட ஊரார் கோழி
ஒற்றைக்களில் தத்தியோடி
உரிமைக்காரியை கூட்டிவரும்!

நான் பள்ளிக்கு
சென்ற பின்னே
எங்கள்வீட்டு கிணற்றடியில்
கருவாட்டு தட்டி முன்னால்
தனியாகக் காவல் காப்பான்
கோலியாத்தின் எதிரி

இது தொலைந்துபோன
வாழ்க்கையின் ஒரு மூலை



   - உமர் அலி முகம்மதிஸ்மாயில் 


0 கருத்துக்கள்:

Post a Comment