நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, August 3, 2013

கரை வலை




கண்கசக்கி கண்விழித்து 
கதிர் பரப்ப 
முன்னெழுந்து 

மரத்தினால்
செய்த தோணி
ஆழிக்கடலுள்
இறங்கும் ஏணி
கூட்டாக நின்று தள்ள...


ஏலேலோ சொல்லி
வியாளுக்கு தோள்கொடுத்து
தோளாலே தள்ளி
இடுப்புவரை
அலை நனைக்க
விடியுமுன்பே கொடுகி
நிற்பான்
கரைவலை மீனவனோ !

சள்ளை வலை
மீன்மடியும்
கல்லு மந்தும் சரிபார்த்து
குலையாமல்
கயிற்று வலையேற்றி
மூட்டான் கயிறு சுமந்து
வயிற்றுப் பகுதி தாழ்ந்து
போகுமந்த தோணியங்கே !

துடுப்புக்கள் ஒன்றிணைய
மிடுக்காக தோணியோடும்!
அடுக்கடுக்கு அலைகடந்து
நடுக்கடல் அடைந்திடும் !

மீன்கூட்டம் வரும்வரைக்கும்
காத்திருந்து
மானோட்டம் ஓடி வலையாலே
மீன் மறித்து
வளைவுக்குள் வைத்திருக்க

கரையிலே நின்றுகொண்டு
தொடுத்த வலை இழுப்பார்கள்!
உரையிலே பாட்டெடுத்து
அடுத்தவனை வம்பிழுத்து
பாடுகின்ற பாட்டதனை
'அம்பா 'என்பார்கள்!

சாய்ந்திளுப்பர் ,
வலை சரிந்திழுப்பர்,
ஓடியிழுப்பர் ஒரு நேரம்
ஓய்ந்திழுப்பர்!

"தண்டையல்"
தோணியின் "முகரை"யேறி
கைகளாலே சைகை செய்து
வளைவுக்குள் மீன்காட்டி
விரைவாக
இழுக்கச் சொல்வான்.
வடக்கிற்கும் தெற்கிற்கும்
ஒடுக்கச் சொல்வான்
விரிக்கச் சொல்வான் !


வட்டம் சுருங்குகையில்
மீன்கூட்டம் போராடும்
புகுந்தோடும்
உயிர்பிழைக்க
வலை பாய்ந்தோடும் !

பெரும்பாடு பட்டதென்றால்
மடிதாங்கியும்
குத்துக்கம்பும்
விரைவாக வந்துவிடும்
கூடைகள்
சுறுசுறுப்பாய் மீனள்ள !

கரையேறும் மடிக்குள்ளே
அகப்பட்ட மீனினங்கள்
துடிக்கின்ற துடிப்பினிலே
மண் தெறிக்கும்
கண்ணுக்குள்ளே!

பாரை,சூரை ,தோறா
நெத்தலி பெருந்திருக்கை
வாளை ,கிளவள்ளு
முள்ளுக்காரல்,
சாளை ,சூடை பாரக்குட்டி
எப்படித்துடித்தாலும்
அடங்கிவிடும்
நொடிகளிலே!

கூட்டான உளைப்பில்
களைத்த மீனவனோ
ஈரவலை காயவைப்பான்
மீன்கூறி முடியுமுன்பே !

தோணிவரும் கரைக்கு
துவண்டு இழுப்பார் மீண்டும்
தரைநோக்கி!

2013 08 03


எங்களூர் கரைவலை மீனவர் ஒருபாடு
மீன்பிடி பிடிப்பது இப்படித்தான்.

0 கருத்துக்கள்:

Post a Comment