நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, August 17, 2014

நூலறுந்து போனதென்ன







நூலறுந்து போனதென்ன






பிஞ்சு விரல்பிடித்து எம்மை

கொஞ்சுகின்ற வயசினிலே

தனியாக தவிக்கவிட்டு அம்மை

நீ இறையடிக்கு சென்றாயே ?


இனி எம்மை

சீவி முடிப்பது யார் மாலையிலே

ஓதிக்கொடுப்பதும் யார்

சீனி போட்டெனக்கு பிசைந்து

சாதமும் ஊட்டுவது யார் ?


அடம்பிடித்து அழுகையிலே

பயங்காட்டி அடிப்பாயே

தினம் குளிக்க மறுக்கையிலே

எனைத்தேய்த்துக் குளிப்பாயே!


இடைவெளிகள் நிரப்பச்சொன்னாய்

பாடப்புத்தகத்தில்

விடையில்லா வினாவாகி

இடைவெளியாய் போய்விட்டாய் !


தாயத்தின்னி என்னும் பட்டம்

தந்துவிட்டு சென்றிருக்காய்

காயப்பட்டு என்னுள்ளம்

என்ன பாடு படப்போகுதோ?


வழிகாட்டும் ஒளிவிளக்கே

நீ ஒளிந்து போனதென்ன

கும்மிருட்டில் தள்ளிவிட்டு

நடுக்காட்டில் மறைந்ததென்ன!


உயிரெடுப்போர் இரங்கலையே

எம் முகங்களையும் பார்கலையே

பயிர்வளரும் வேளையிலே

வேரறுத்துப்போனாரே!


என்மீது புன்னகைப்பார்

இனியாரோ

மண்மீது இனி நானும்

ஓர் அநாதைதானோ?


காரியங்கள் கழியும் வரை

கடும் சிரத்தை காட்டுவார்கள் எம் மேலே

மீறிய நாள் செல்லுகையில்

அவர் போவார் அவர் வழியே !



சிறுவயது தந்தைக்கு

உறுதுணையும் வேண்டுமல்லோ

வருகின்ற சித்திக்கு

எங்களை பிடிக்குமன்றோ

யாரறிவர்

மு.இ.உமர் அலி

2014 Aug 18

மிக இளம் வயதில் Aplastic Anemia எனும் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு 16 Aug 2014 அன்று காலமான எனது நண்பனின்சகோதரி யின் குழந்தைகளுக்காக ( Ashar Ali இன் சகோதரி )

அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவருக்கு உயர்ந்த சுவனத்தில் நல்ல ஒரு இடத்த வழங்குவானாக

0 கருத்துக்கள்:

Post a Comment