நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, September 26, 2014

பேன் பார்த்தல்



 
பேன் பார்த்தல்
...............................
பேன்பார்க்கும் மாலையிலே
பல பேச்சும் நடக்கும்
இடைக்கிடை பேன் நசுக்கும்
சத்தமும் கேட்கும்!

வேண்டாத ஒருவரை வையாமல்,
அடியேய் ,அப்படியாம் அறிவாயா
தோண்டுகின்ற பாவனையில்
அடிப்போட்டு வைப்பாள் தலைவி!

பற்றவைத்தை பொய்யிலே
உண்மையும் கருகி விடும்
பின்னர் அச்செய்தி
ஊரெல்லாம் பெருகும்
பின் அந்தாள் பெயரும் நாறும்!

சிக்குப்பிடித்த சிரசை விரல்கள்
சிக்குப்பிரிக்கையில்
நாக்குகள் நாலைந்து ஊராரை
கொத்திப்பிரிக்கும்!

துர்நாற்றம் அவர்களுக்கு
நல்ல சுவை போலும்
சுவைத்துச்சுவைத்து
சுவாசிப்பார்கள்,கிலாகிப்பார்கள்!

யாருக்கு கல்யாணம்
யாருக்கு பெட்டிவந்த
ஊருக்குத்தேரியாம
ஓடினது யாரு
அத ஒருத்தருக்கும் தெரியாம
பிடித்து வந்தது யாரு
எங்கே ஒழிச்சுவச்ச
எப்படிப்பிரித்துவைச்ச
சாட்சி யாரு
எதிரியாரு இப்படிப் பலப்பல !

இரகசியப்போலீஸ்
இவர்களிடம் துப்புப்பிச்சை
எடுக்க வேணும்
அப்படித்தகவல்கள்!

யாருக்கு இசாக்காலம்
யாருக்கு கருக்கலைவு
முழுக்கதையும் முடிந்ததென்றால்
தெருக்கதையும் வந்துவிடும்!

வேலியோரத்தால் போனவனை
வெறிநாய் துரத்தியதும்
வேருண்டோடியவன்
குமர்ப்பென்ணில் மோதியதும்!

நேருக்கு நேர் நின்று
அடிபிடிப்பட்ட கதை வைக்கோல்
போருக்குப்பின்னால
இளஞ்ஜோடி தொட்டுக்கிட்ட கதை !

குடிகாரன் பெண்டில் பிள்ளைகளை
போதையிலே
அடித்துத் துரத்தியதும்
குடிபோதை தெளிந்து
அழுது புரண்ட கதை!

கருவாட்டுத்தட்டிக்குள்ள
தலபோட்டு கடுவன்பூனை
களவெடுத்து திண்ட கதை
கதை கதையாப் பேசுவாங்க!

குதிச்செருப்பு அறுந்த கதை
புதுச்செருப்பு வாங்கியதை
ருசிச்சுப் பேசுவாங்க சிலதை
மெல்ல நசித்தும் சொல்லுவாங்க!

இதேல்லாம் பிடிக்காத சிலர்
சபைக்கு
அடிக்கடி வரமாட்டார்
பிடிச்ச எல்லோரும்
பேன் இல்லாத தலைக்குள்ளே
பேன் பிடிச்சி விட்டு
பின்னர் அதைத்தேடிப்பிடிப்பார்கள்!

தலைபார்க்கும் சபைகள்
பல கடைகளை உயர்த்தி விட்டு
பிடிக்காத கடைகளை
தாழ்த்தியும் விட்டிருக்கின்றன!

இப்பல்லாம் தலைக்குள்ள
பேன் அவ்வளவாக ஊர்வதில்லை
ஆட்கள் பேன் பார்ப்பதுமில்லை
தலைக்குமேல்தான்
விட்டத்தில் பேன்கள் சுழல்கின்றன !

தொடர் நாடகங்கள் ரசிப்பது
பேன்பார்ப்பதை விட நல்ல சுவாராசியம்
அதனால் குனிந்து பேன்பார்த்தவர்களெல்லாம்
இன்று அண்ணாந்து தொலைக்காட்சியைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்!

ஆண்களும் அடிக்கடி
ஆங்காங்கே கடையடிகளில் கூடி
அப்பப்போ பேன்பார்ப்பார்கள்
இப்போதும் சிலர் பேய்க்கும்
பேன்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!

நன்றி

மு.இ.உமர் அலி
2014 sept 26

0 கருத்துக்கள்:

Post a Comment