நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, September 27, 2014

மழையால் கல்லெறிவாய் இறைவா!





















மழையால் கல்லெறிவாய் இறைவா!
......................................................................

பஞ்சசீலம் கூறிக்கொண்டு
மஞ்சட்சீலை கட்டிக்கொண்டு
கொஞ்சம்கூட இரக்கமின்றி
கொன்று குவித்தவன் வருகிறான் !

கௌதமர் கூறியதை
கனவிலும் கடைப்பிடியான்
கௌரவர் படைசேர்த்து
தர்மரைத் தாக்க வர்றான்!

விஜயங்கள் செய்தால் நல்
விசயங்கள் நடக்கணும்
விசங்கொண்ட விலங்கு
விருந்தெங்கனம் வைக்கும்!

கொழுத்த மந்தைக்கூட்டம்
பொருத்தமற்ற மேய்ப்பர்கள்
பிரிந்துகொண்டு நாங்கள் மேய்கின்ற நேரம்
காவியுடையுடன் கசாப்புக்கடைக்காரன்
தைரியமாய் களமிறங்குகின்றான்!

அவனிடம் கூரான கத்தியில்லை
கட்டுவதற்கு கயிறுமில்லை
ஆனால் நன்கு தீட்டப்பட்ட
குள்ளநரிப்புத்தியிருக்கிறது
உரத்துப்பேசுவதற்க்கு
திறந்த மேடையும்
இரத்தவெறிபிடித்த
பார்வையாளர்களும் இருக்கின்றார்கள்!

அவனால் மொத்தப்பேரையும்
இல்லாவிடினும் முக்கியமானவர்களை மட்டும்
மூளைச்சலைவை செய்ய முடியும்!

கௌதமரின் போதனைகளை
புதைத்துவிட்டு
அதர்மத்தின் போதனைகளை
மலிவடையச் செய்வான்!

வன்மம் நிரந்த கண்கள்
இன்னும் முன்னேறாத அவனது
தொன்மம் நிறைந்த எண்ணம்
ஒரு துருப்பிடித்த உள்ளத்துடன்
புதிய ரணங்களுக்கு
பதியமிட பரிவாரங்கள் சூழ
வருகிறான்!

அவன் சீழ் வடியும்
சிரங்குகளைக் நிச்சயம் கிண்டுவான்
அங்குள்ள அருவருப்பான புழுக்களை
பிடித்து தின்னுமாறு மற்றவர்களையும் பழக்குவான்
மியன்மாரில் அவன் ருசித்ததை சப்புக்கொட்டுவான் !

உயிர்கொல்லல் அதர்மம்
என மறந்து
கொல்லலே தர்மமென்று
சொல்லும் "அலுகோசு"
ஆரவாரமாய் வருகிறான்!

அவனது அங்கவஸ்திரம்
அப்பாவிகளின் குருதி கலந்தே
அடிக்கடி சலவை செய்யப்படுகின்றது
அது சாயம் போகும்போது
அவன் மீண்டும் பாவம் செய்கிறான்!

ஒற்றை நித்திரைக்குளிசைக்கு
இங்கு தடை
ஆனால்
ஆயிரம் போதை மாத்திரைகளுக்குச் சமனான
அவன் வார்த்தையும், வருகையும்
இன்னும் தடைசெய்யப்படவில்லை !

நாங்கள் ஜனநாயகத்தின்
தேசத்தின் தேசியக்கொடி
வீழ்ந்துவிடாமல் இன்னும்
தாங்கிக்கொண்டிருக்கிறோம்!

சிலவேளை
எங்கள் படையினர்
மனசாட்சியுடன் நாளை
மௌன யுத்தம் மட்டும் செய்யலாம்
பிறரிடம் கூறினால் செயலிழந்துபோகும்
மந்திரக்கட்டளை அவர்களுக்கு
சிலவேளை வந்திருக்கலாம்!

அவிழ்த்தவாறே
அவர்கள் கட்டப்பட்டிருக்கும்
சிலவேளை உத்தரவிடுபவர்
திடீர் பயணங்கள் போவார்
அல்லது அவரது தொலைபேசிகள்
தொடர்புக்கு அப்பாலான
தூரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்!

எங்களால் அவர்களுக்கு
கல்லெறிய முடியாது
இறைவா
நீரைக் கல்லாக மாற்றி
தொடராக தாக்கவல்லோன்
நீ மட்டும்தான்
எங்களை அவர்கள்
தாக்க நினைத்தால்
ஆலங்கட்டியால் ஏறி
அவர்கள்
ஓலமிட்டுக்கொண்டு ஓடட்டும்!

மு.இ.உமர் அலி
2014 Sept 27

0 கருத்துக்கள்:

Post a Comment