நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, February 20, 2014

துளிர்விடத் துடிக்கிறேன்!





















துளிர்விடத்துடிக்கிறேன்!

அரும்புகின்ற மீசை போல்
எனக்குள் எத்தனையோ
அரும்புகின்ற ஆசைகள்
தினமும் பெருமூச்சால்
மளிக்கப்படுகின்றன !

உங்களுக்கு
அமாவாசை ஒருநாள்தான்
எனக்குள்
எந்நாளும் அமாவாசைதான் !

என்னையே நான்
வெறுக்கின்றேன்
எனை அறியாமல் என்னுடம்பில்
இருந்து தானாக
அவை கழிந்து செல்லும்போது!

நல்லவேளை
என் மண நுகர்சிக்கலங்கள்
நல்ல புலனுடன்
இருக்கின்றன!

இன்று எதுவும்
என் சொற்கேட்பதில்லை
அன்று நான்
அடங்காமல் திரிந்தது போல்!

சிலவை நான்
விரும்பாமலே நடக்கின்றன
இன்னும் சில
விரும்பினாலும்
கிடைப்பதில்லை!

நெடிகள் இன்று
எனக்கு பழகி விட்டன
புதிதாக
என்னுடன் பழகுபவர்கள்
மட்டும் முகம் சுளிக்கிறார்கள்
அதுவும் தற்செயலாக!

முறுக்கிக் கொண்டுபோனேன்
இரண்டு சக்கர வண்டியில்
இன்று சுருண்டு கொண்டு
இருக்கிறேன் மூன்று சக்கர
வண்டியில் !

என் கண்முன்னே
என் கால்கள்
சூம்பி விட்டன !

இருந்து இருந்து
மரத்துப்போய்
மரத்த இடம் கூட அலுத்து
அடிக்கடி புண்ணாகி
புது வடிவம் எடுக்கிறது!

என்விரல் பிடித்து
நடை பழக்கிய அன்னை
நிலை குலைந்து
சிலவேளை நடை மறந்து
தலை விரி கோலமாக!

இப்பொழுதெல்லாம்
நான் அப்பொழுது
கணக்கிலும் எடுக்காத
அநேகமான
சடப்பொருட்கழுடனேயே
நான் அடிக்கடி பேசுகிறேன்!

நண்பர்களையே
நினைத்துக்கொண்டிருந்த
என்னை அவர்கள்
நினைவு வரும்போது
வந்து பார்த்துவிட்டுத்தான்
செல்கிறார்கள்

முன்பெல்லாம் அன்பும் பாசமும்
இன்று பர்தாபம் மட்டும்!

என்வீட்டு முகடு
எனது உற்ற நண்பன்
முன்வீட்டுச் சுவரும்
முற்றமும்தான் எனது
"பௌதீக எல்லை"

கனாக்காணும் காலத்தில்
நான் ஒரு
வினாக்குறியின்
கோலத்தில் !

காதலித்த பெண்ணிடம்
காதலை சொல்லும் முன்பே
நான் இப்படி
பேதலித்துப்போனேன்!

விந்தை இல்லை
வியப்பில்லை
இது கூட கொடை என்றுதான்
கூறவேண்டும்
ஏனெனில் இன்னும் என்
இரு கரங்கள்
ஒன்றுக்கொன்று
நகம் வெ ட்டிக்கொண்டுதான்
இருக்கின்றன!

நேற்று இல்லாத
ஒரு விடயம் இன்று
என்னிடம் அதிகமாக இருக்கின்றது!
ஆம்
அதுதான் நம்பிக்கை!

விழுந்ததுடன்
வீழ்ந்த மனது மட்டும்
இப்போ
எழுந்து நடந்து திரிகிறது!

அடிக்கடி
கோலூன்றிப்
பாய்கிறது!

என்னை நான்
இந்த இருட்டுக்குள்
இருந்து இழுத்துவரப் போகிறேன்!

இடுப்புக்குக் கீழே
இயங்காவிடினும்
என் மனம்
துடுப்புக்கள் இன்றி
வெகு தூரம்
சென்றுதான் வருகிறது!

உடல் அசைவுக்குத்தான்
எனக்கு எல்லை
உளம் எல்லையில்லாத
பயணத்தில்தான் எப்போதும்
இருக்கின்றது
அந்த அசதியில்தான்
நான் உறங்கிப் போகிறேன்!

கரங்களின் உரம்
இப்போது
சற்று அதிகமாக இருக்கின்றது
திடம் கொண்ட
மனது போல !

அசைய மறுக்கின்ற
கால்களுக்கு சவாலிடும்
நான்
ஒரே இடத்தில்
இருந்து கொண்டு
புதிய தொழிலில்
இணையப்போறேன்

என்னால் எழுத முடியும்
உரக்க படிக்க முடியும்
இறுக்கிப்பிடிக்க முடியும்
நடக்காமல் இருந்துகொண்டு
அதே இடத்தில்
என்னால் உழைக்க முடியும்

முயற்சி செய்து
புரட்சி செய்யப்போகிறேன்
கை கொடுங்கள்
உண்மையாக கை கொடுங்கள்
வெறுமனே வாழ்த்தாது
வாய்ப்பு வழங்கி
வாழ்த்துங்கள்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 feb 20th

ஒரு விபத்தில் சிக்கி
இடுப்புக்குக் கீழ் அங்கவீனமுற்ற உயர்தரம்வரை கற்ற நானறிந்த ஒருவருக்காக இதனை அர்ப்பணம் செய்கின்றேன்!

0 கருத்துக்கள்:

Post a Comment