நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, February 24, 2014

புலம்பல்!

புலம்பல்!

ஒன்றல்ல இரண்டல்ல
ஒருடசின் பிள்ளைகள்
ஆணும் பெண்ணும்
அடுக்கடுக்காய் பெற்றெடுத்தேன்!

ஆங்கிலப் பள்ளிகள்
இங்கிலீசுப் பாணியில்
நான்பெற்ற பிள்ளைகள்!

பிள்ளைகள் பெருமைகள்
பேசியதை புத்தகமாய்
எழுதிடலாம்
அத்தனை புகழ்ச்சிகள்
மனம் சொரிந்த மகிழ்சிகள்!

நிஜங்களை விற்று
நான் பொய்களைத்தான்
பெற்றிருக்கின்றேன்
என்பது இப்போதுதான் புரிகிறது!

உழைக்கும் காலத்தில்
துணையை தனியே
தவிக்க விட்டு
அங்கும் இங்கும் அலைந்தததற்கு
கிடைத்த தண்டனையோ?

களைத்துத் தவிக்கும் நேரம்
அவள் என்னை
தனியே விட்டு
நிரந்தரமாய் போய்விட்டாள்!

எத்தனவை தடவை
குழந்தை வயதிலே
என்னை மடிக்குள்
அழுக்குப்படுத்தியிருப்பார்கள்?

ஆனால் நான் இப்பொழுதெல்லாம்
கழிவுகளின் மேல்தான்
அமர்ந்திருக்கிறேன்
மலமே நான்பூசிடும் சந்தணம்
சலமே எனைத் தொடும் பன்னீர்
ஆனால்
அவை உங்களைப் போலில்லை
என் தோலில் ஒட்டி வறண்டு
பிரிந்து செல்ல மறுக்கின்றன!

நான் மரணித்தபின்
நீங்கள் கட்டிப்பிடித்து அழத்தான்
போகிறீர்,
ஏனெனில் ஊர் உங்களைத்
தூற்றும் அழாததற்காய்!

நாற்றமடிக்கும் என்னை
ஏறெடுத்தும் பார்காதது
குற்றமென்று தெரியாதா?

என் வாரிசுகள் வந்து
எட்டி நின்று பேசுகிறீர்
நெடி தாங்காமல்
கிட்ட வர மறுக்கின்றீர்!

உங்களுக்கு மட்டும்தான்
மணநுகர்ச்சி கலங்களோ?
எனக்கு மட்டும் என்ன
அவை மரத்தா
போய்விட்டன?

அட்டவணை வைத்தா
உங்கள்மீது அன்புவைத்தேன்?
நேரசூசிப்படி
கட்டுச்சோறு தின்னவா
பெற்றுவளர்த்தேன்?

என் சுவாசத்தைக் கூட
என்னால்
கட்டுப்படுத்திக்கொள்ள
முடியவில்லை
உங்களைப்போல அது கூட
சொல் கேட்கிதில்லை!

நல்லவேளை என் கண்கள்
இன்னும் பார்க்கின்றன!
மனக்கண் இளமையை
அசைபோட்டுப் பார்க்கிறது!

இந்த ஒற்றைத்தூணும்
ஒலி எழுப்பும் "பேனும்"
எனக்காக துணையிருக்கு!
'
நம்பிக்கை வறண்ட
இந்தக்கிழவனின் கண்கள்
மட்டும் வற்றுதில்லை!

அறிவித்தல் கேட்டு வாருங்கள்
எனது மையித்தை மட்டும்
உங்களுக்கு நேரமில்லை
என்பதால் சுணக்கி விடாதீர்கள்!

விரைந்து சென்று
புதைத்திடுங்கள்
சமாதியிலாவது எனக்கு சாந்தி
கிடைக்கட்டும்!

இறுதியாய்
ஒரே ஒரு ஆசை
ஆம்
எனக்காக இறைவனிடம்
பிரார்த்தியுங்கள்

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
24th feb 2014

0 கருத்துக்கள்:

Post a Comment