நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, February 18, 2014

கடல் நண்டு




காலெட்டுதுணை கொண்டு
இருகாலில் படை கொண்டு
காலாட்டம் போட்டுக்கிட்டு
குறுக்காலே ஓடுது நண்டு
மறுக்கிக்கிட்டு திரியுது ஒண்டு !

கோல்போல விழியிரண்டு
எழும்பி எழும்பி பார்க்குது
கோலாட்டம் ஆடிக்கொண்டு 
இடைக்கிடையே கிடையாக கிடக்குது!

கோலமிட்ட முதுகினிலே
கடினமான ஓடிருக்குது
கால் முடியும் இடத்தினிலே
கூரான நகமிருக்கு!

அடிப்பாகம் வடிவாக
வரி வரைந்தால் போலிருக்கும்
துடிக்கின்ற பாகங்கள்
நுரைதள்ளி கொண்டிருக்கும்!

குழிதோண்டும் அழகு குனிந்து நீ பாரு
அதில் கொள்ளை போகும் உன் மனசு வேறு
குவியலாகும் குழி மணல் வந்து
புகுந்தோடும் அதில் ஒழி நண்டு!

நுரை செய்யும் அலை வந்தால்
தரையோட்டி சுழியோடும்
இரைதேடி அலைந்துகொண்டு
கரையெல்லாம் ஊரும் நண்டு!

குடும்பமாய் ஒன்று சேர்ந்து
குறும்பாக விழையாடும்
நடந்து நீ போய்விட்டால்
சுறுக்காக ஒழித்துவிடும்!

கூட்டாளிமார் சேர்ந்து
கும்பலாக கூடி நின்று
பாட்டாளி போலோடி
தொம்பலாக அலை நனைந்து

பூக்கநெட்டி தூக்கிக்கிட்டு
சாரன் மடிச்சுக்கட்டி
கரை வார்த்த மணல் மேலே
கால்புதைய அவர்கள் ஓடி
கடல் நண்டு பிடிப்பார்கள்

பயந்த நண்டெல்லாம்
குழியோடி ஒழித்தாலும்
பயலெல்லாம் பிடிப்பாங்க
குழிதோண்டி ஒழி நண்டை!

கிள்ளிப்பிடிக்கும் நண்டு
அவன் சின்ன விரல்கண்டு
துள்ளி ஓடுவான்
கை உதறிக்கொண்டு

தினம் எங்கள் கடற்கரையில்
திடீர் திடீர் ஓட்டப்போட்டி
சனம் எலாம் கூடிப் பார்க்கும்
வென்றவர்க்கு பரிசு நண்டு!

umar ali MohamedIsmail
2014 feb 18th

0 கருத்துக்கள்:

Post a Comment