நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, February 15, 2014

மழைக்காளான் !


நேற்று பெய்த மழைக்கு
நாங்கள் முழைத்தோம் எனும்
கூற்று முற்றிலும் பொய்

இது மாற்றமாய் எழுதப்பட்ட
ஒரு உளுத்துப்பொன பொய்
சரித்திரம் புதைந்த குப்பை மேடு !

தோற்றுப் போகாத வாழ்வை
மீண்டும் தொடக்கிவைக்க
விரித்து வைத்த நிழல்
குடை நாங்கள்
சிரித்துக்கொண்டே
இருக்கின்றோம்
நீங்கள் மிதிக்கும் வரை !

வலையாக பின்னி
கவலயற்றுப் பிணைந்து
ஈர வரம் கேட்டு
உறங்கித் தவம் செய்து
தாமாகப் பிறந்தோம் நாம்!

பூவில்லை காயில்லை
ஆனால் சிறு வித்திகளே
நாம் இனம் பரப்பும் உத்தி!

இது வேரில் இருந்து
வந்த சிரிப்பு! வாழ்க்கைப்
போரில் வென்று
வந்த களிப்பு !

பச்சையம் எங்களுக்குள்
நிச்சயமாய் இல்லை
விழிக்கும் காலத்தை விட
தூங்கும் காலங்களே அதிகம்
எனவே நாங்கள்
கும்பகர்ணனின் வரம்பெற்றவர்கள் !

நாங்கள் சூரியனை
வணங்கவில்லை
இருளையே பூஜிக்கிறோம்
குளிரையே நேசிக்கிறோம்!

நிர்வாண அழகிகள் எங்களை
காமுகச் சூரியன் தன்
கதிர்களால் கருக்குகிறான்.
அவனை காதலிக்க மறுத்ததற்காய்!

உங்கள் பூமியை
பாதுகாப்பாய் சிதைப்பவர்
நாங்கள்
அதற்கான கூலியே
எங்கள் வாழ்கை வட்டம் !

எங்களை தேனீக்கள்
மொய்ப்பதில்லை
இலையான்களும்
சில அழுககலுண்ணும்
வண்டுகளுமே மொய்க்கும்!

நாங்கள் வாழ்வதற்காக
சுவாசித்து விடும்
மூச்சு உங்களுக்கு
சில வேளை
துர்வாடையாக கூட இருக்கலாம் !

நச்சுண்டு எம்முள்ளே
எமக்கில்லை அது
எமைத்தீண்ட வருவோர்க்கே!

நல மருந்துண்டு
எமக்கில்லை
எமை விரும்பி உண்போர்க்கே!

நகம் வெட்டி புதைத்த
இடத்தில் பிறந்தோமாம்
சிரிப்பு வருகிறது !

என்ன மூடர்கள் நீங்கள்
சவக்குழிக் குழந்தைகளா
நாங்கள் ?இல்லை இல்லை
சுதந்திர புருஷர்கள் !

விரும்பி எழுகிறோம்
விரும்பாமல் மடிகிறோம்!
இருட்டு வாழ்க்கை
திருட்டுச் சோறு
இது எம் தலை விதி பாரு!

நாங்கள் உங்கள்
பாதங்களில் முள்ளாய்
தைப்பதில்லை
அதனால் தானே எங்களை
இலகுவாய் மிதிக்கிறீர்
அழிக்கிறீர்!

பிறந்தார் யாரெனும்
இறந்தே யாவார்
இறப்பினை வென்றவர்
யாருமே இல்லர்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2104 Feb 15th

0 கருத்துக்கள்:

Post a Comment