நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, February 14, 2014

குறுக்குப்போடு!







குறுக்குப்போடு!!

ஒரு "வைப்பு" முட்டையை
தொடராக விட்ட கொண்டைப் போடு
கரு இருப்பு கைஇருப்பில் தீர்ந்ததோடு
விடுப்பெடுத்து சடுதியாக தற்காலிக
கருத்தடை செய்து கொண்ட சேதி
யாருக்கும் தெரியாது !

நாளைக்கு இடும் முட்டையில்
தருகிறேன் என்று
வேலிக்கு மேலால் பக்கத்துவீட்டில்
இரவல் வாங்கியது
கோழிக்கு எப்படித் தெரியும்?

வீட்டுக்காரிக்கு சிலநாளில் இந்த
ஒற்றை முட்டையை வைத்து
எப்படி குடும்பத்தைச்
சமாளிப்பது என்பதும் புரியாது!

ஒழுங்கைக் கடைக்கு
ஓரத்தால் போய் ஒதுங்கி நின்று
ஆளுகள் எல்லாம் போன பின்பு
மடிப்பிடவைக்குள்
ஒழித்து வைத்த ஒற்றை முட்டை
கடைக்காறாள் "கல்லா"க்கு
கைமாறி
"களத்தண்ணி " காய்ச்சவல்ல
கறிபுளியை விலைபேசும்
கல்லையை நனைய வைக்கும் !

கேரிக் கேரி
குறுக்கும் மறுக்கும் நடந்து
தாவித் தாவி
பரண் மேலே பறந்து!

உள்ளதும் ஒன்று
கண்ணான கண்ணு
கல்லுப் பீங்கான
காலால தள்ளி உடைத்து!

பிடிச்சி அடைக்க
துரத்துகையில்
சிறகடிச்சி
சிலசாமான் சிதறடித்து!

ஒற்றை முட்டைக்கு
இவள் செய்யும் ஆரவாரம்
சற்றுப் பொறுமையை
சோதித்துச் செல்லும்!

"ஹறவாப்"போனது
கண்கெட்ட கோழி ,சனியன்
என்று கண்டபடி
ஏச்சுக்கள் வாங்கி!

ஊத்தைக் கூடைக்குள்
முட்டையிடப் போன கோழி
சத்தம் போடாம முழுநாளும்
படுக்குதடா சாப்பாடும் தின்னாம!

ஒன்றல்ல இரண்டல்ல
வாரங்கள் போகுது
குஞ்சுக்கு வைப்பதுக்கு
முட்டைக்கு எங்கு போவது ?

தூக்கி எறிந்தாலும்
திரும்ப வந்து புகுந்துடுது
கொக் கொக் என்று சொல்லி
குறுக்கு மொழி பேசிடுது !

பொறுமை இழந்த வீட்டுக்காரி
குறுக்குத் தெளிய வேண்டும் என்று
வாலில் ஓலைக் கூந்தல் கட்டிடுவா
குளிரும் நீருக்குள் தாழ அமுக்கிடுவா!

கோழியின் சுதந்திரத்தை
வீட்டுக்க்காறியின் தரித்திரியம்
சுயநலத்தோடு துரத்தும்!

தறிகெட்டு ஓடும்கோழி
அங்குமிங்கும் முட்டி மோதி
திரிந்திடும் முன்னைய இடம் தேடி
மிதித்திடும் கொண்டைச் சேவல்
துரத்திவந்தோடி கொண்டையை கொத்தி !

மகப்பேற்று விடுமுறை
மனிதருக்கு மட்டும்தான்
அப்பிராணிக் கோழிக்கு
அது எங்க கிடைக்குமிங்கு!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்!
2014 Feb 14th

0 கருத்துக்கள்:

Post a Comment