நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, February 28, 2014

பர பரக்க பறப்பு!



விரிந்த சிறகை 
திரும்ப மடிக்க 
மறந்த பறவை!

பிரிந்தவர்களையும் 
கூடப்போகின்றவர்களையும் 
கூட்டிக்கொண்டு போகும் 
கூட்டாளி!

பாரமற்ற பஞ்சுகள் 
கிழித்து 
பாரமான நெஞ்சுகள் 
சுமந்து செல்லும்!

அச்சத்தை ஆடைகட்டி
உச்சத்தில் 
ஏற்றிச் செல்லும்!

நெஞ்சுக்கூட்டுக்குள் 
ஒருமுறை தண்ணீர் வற்றும்!
உந்தன்கரம் பிடியை
இறுகப் பற்றும்!

நிமிடங்ககளின் பெறுமதி 
பலமுறை 
நிறுக்கப்படும்!

பிரபஞ்சக் கடலின் 
புரியாத ஆழம் 
நரிவாலை போல
நம் விமானப் பயணம்!

இரவிலே எதுவும் 
தெரியாது
பகலிலே எல்லையே
புரியாது!

கனத்த இதயங்கள்
கனவுகளுடன் மிதக்கும்!

கவிஞனுக்கு 
மனதில் பூப்பூக்கும்
கவிதை 
மழை பொழியும்!

விழியாலே நீ காணும் 
காட்சி
இது அழியாத இறைவனின்
அத்தாட்சி !

அங்கே அசதியால் கனத்த உடல்
அசந்து தூங்கும்!

முழங்கால் மூடாத 
கன்னிகள் எடுக்கும் 
சம்பளத்திற்காய்
உன்மேல் உதிர்ப்பார் செயற்கைப் 
புன்னகை!

பிரிந்து செல்கையில்
ஊர்ச் சாமான்களோடு
உறவுகளின் சுருக்கமுடியாத அன்பு
சிறிய பொட்டலங்களுக்குள்
சுருங்கிக் கொண்டு!

திரும்பிப் போகையில் 
களிப்பிலே குளிக்கின்ற மனது
இனி இனிப்புக்கள் வாங்கி 
களிப்புக் கொள்ளும் !

பொண்டாட்டிக்கு 
பெட்டிநிறைய பண்டங்கள்!
பிள்ளைக்கு 
அள்ளிக்கொஞ்சும் 
விழையாட்டுச் சாமான்கள்!

மகளுக்கு பொம்மை
மகனுக்கு கடிகாரம்

அம்மாக்கு ஆசைபட்டது 
அக்கா கேட்டுவைத்தது
அப்பாக்குச் சட்டை
தம்பிக்கும் இருக்கு 
நல்ல வேட்டை!

கர்ப்பிணித் தங்கைக்கு 
குங்குமப்பூ
இப்படிச் சில இத்யாதி!

உருளுகின்ற உலகத்தின் மேலே 
உலோகம் பறக்கிறது 
புரளுகின்ற மனங்களை 
தன்னகத்தே கொள்கின்றது!

ஊர்ந்திடா இவ்வூர்த்தி 
வானில் விரைந்திடும் புகையால்
பெயர் எழுதி ! 

உறுமலே மந்திரம் 
உன் உள்ளிருக்கு
உருக்கு  எந்திரம்!

மறுபடி எப்பொழுது
பறப்பது என்றெண்ணி
மனக்கண்ணில் 
மாதங்கள் கணிக்கின்றேன்

கனவுகளின் கால்களுக்கு
புதுச்சலங்கை கட்டுகிறேன்!

0 கருத்துக்கள்:

Post a Comment