நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, February 19, 2014

ஆரங்கிளியே

ஆரங்கிளியே எந்தன் நெஞ்சு
சோரம் போகுதடி
ஓரக்கண்ணாலே நீ செஞ்ச
குறும்பால மனப்
பாரமும் கூடுதடி!

ஓரம் சாஞ்ச தலை உன்னதடி
கதவு நிலயோரம் நீ சாஞ்சபடி
நீளக் கண்ணசைச்சி
நீ பார்த்தபோது
மூச்சு வாங்குதடி உள்ளம்
உன்னினைவில் நிற்காமல்
அஞ்சலோட்டம் ஓடுதடி!

நீ திரும்பும் திசையெல்லாம்
என் விழி திரும்ப
உன் பாதம் பட்ட இடம்
என் கண் தொட்டுச்செல்லுதடி!

மாடியில் நீ நின்று
மஞ்சள் வெயில் காய
தெருக்கோடியில் நின்ற என்
மனசு அலைபாய

உண்மையாய் சிரித்தாயா
இல்லை பல்வலியால் இழித்தாயா?

மெய் பொய் தெரியாம
உன் வீட்டைச்சுற்றுகிறேன்
கழுத்துச் சுழுக்கும் மட்டும்
உன்பக்கம் நோக்குகின்றேன்!

பொய்க்கு கதைசொல்லி உன்
கடைக்கு வருகின்றேன்
கதவடியில் கண்டவுடன்
வாய்க்கு வந்த சொல்லை மென்று
விழுங்குகின்றேன்!

குனிஞ்சி நடக்கின்ற உன்னழகை
தெளிஞ்சி ஓடுகிற
ஓடத்தண்ணிபோல கண்ணால
அள்ளிப்பருகுகிறேன்!

திரும்பிப்பார்ப்பாயா என்று
மனசாலே ஏங்குகிறேன்
அரும்பும் ஆசைகளை தினம்
கவியாய் வடிக்கின்றேன்

0 கருத்துக்கள்:

Post a Comment