நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, February 16, 2014

ஒட்டுண்ணிக் குருவிச்சை!





குருவிச்சை












முதலீடு செய்யாமல்
முதுகிலே குத்தி
முதலாளியாகும் சாதி
இது
உடலோடு சேர்ந்து வளர்த்தவனை
நோயாளியாக்கும் நியதி!

வேரின்றி வாழ்ந்தாலும்
நீரின்றி வாழலாமோ?
அதுதான்
போரின்றி நான்
புது முகம் கொண்டேன்
புது மரம் கண்டேன்
கோலூன்றி அங்கே கொடி
நாட்டிக் கொண்டேன்!

நாடோடி வந்த என்னை
நடுவீட்டில் இருப்பாட்டி
நல்வாழ்வு தந்தவனை
நடுக்காட்டில் விட்டிடுவேன்!

சிரிச்சி சிரிச்சி வரவேற்று
சீராட்டி வளர்த்தவனை
உறுஞ்சி வெறுமையாக்கி
வேரோடு வீழ்த்திடுவேன்!

கூட இருந்தே
குழி பறிப்பேன்
ஓட விட்டு
வழி மறிப்பேன்!

செவ்விதழ் மலர்த்தி நான்
குருவிகள் வரவேற்பேன்
எவ்வித செலவுமின்றி
வேறிடம் ஒட்டிச் செல்வேன்!

அலகிலே ஒட்டிக்கொண்டு
அகன்றிட மறுக்குமென்னை
உலகமே அறியாதொரு
அப்பாவி மரமொன்று கெட்டியாய்
பற்றிக்கொள்ளும்!

ஓசித்தண்ணி உறுஞ்சி
உறிஞ்சியே நான் ஊதிப் பருப்பேன்!
பூசி மேழுகியே நான்
என்னை மறைப்பேன்!

வாடகைக்கு வந்தனான்
மொத்த மரத்தையும்
உத்தரவின்றியே
குத்தகைக்கு எடுப்பேன்!

இதுவரை நான் ஆக்கிரமித்த
எந்த மரச் சாம்ராச்சியமும்
செளித்ததாக சரித்திரமே இல்லை
எல்லாம் சரிந்தே போயிடும்!

ஓட்டியுறவாடி அடியுடன்
வீழ்ந்து மடியும்வரை
கட்டிப்பிணைந்து நம்பியே
வாழ்ந்த நல்ல மரம்

அதன் நினைவில்தான்
நான் அது வாழ்ந்த
இடத்தில் மரம்போல அலங்காரக்
கோயில் கட்டி அழகாக பூப்பூத்து
வண்ண விளக்கேற்றி
வடிவாக வாழ்கின்றேன்!

மனிதர்களில் இரத்தப்புற்று
மரங்களுக்கு என்னால் புற்று
கண்டவுடன் என்னை அகற்று
இன்றேல் நீ போயிருவாய் செத்து!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 Feb 16

0 கருத்துக்கள்:

Post a Comment