நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, February 22, 2014

I LOVE MY WIFE





உனக்காக
உன் தாயுடனேயே
பொறாமை கொள்ளும்
பேராசைக்காரி!

உருகி உருகி
உனக்காக ஒளிவிடும்
என்றும் அழியாத
விடிவெள்ளி!

உன்மனதை
அள்ளிச்செல்லும்
உள்ளத்துக் கள்ளி!

கெஞ்சல்
சலங்கை கட்டி
அடம் என்னும்
ஆடைகட்டி
நடனமாடும்
நாட்டியக்காரி

சிலவேளை நான்
அவள் குழந்தை
எப்போதுமே அவள்
என் குழந்தை!

விழிகளால்
வழியனுப்பி
திரும்பும்வரை
துடிப்புகளோடு
தவித்து தவம் இருப்பாள்!

நுளம்புகூட
உன்னை கடிப்பதை
பொறுக்காது
நுளம்பு கொல்லத் துணிந்த
அழகிய கொலைகாரி!

ஏமாற்றத்தால்
கண்ணீர்ப்பூக்களை
சொரிகின்ற
ஏகாந்தக் கொடி!

குமுறல்களை
பெருமூச்சால் மட்டும்
வெளிக்காட்டும்
வெடிக்காத எரிமலை!

நீ மாலைசூடிய
அவளே ஒரு அழகிய
பூமாலை!

முகம் பார்த்து
அதில் உன்
அகம் காணும்
அதிசய உளவாளி

இளிப்போரை பார்த்து
கண்ணுருட்டி பயமுறுத்தும்
பத்ரகாளி!

அன்பு
அத்தனையும்
தனக்கே உரியது
என நினைக்கும்
நியாயமான பேராசைக்காரி!

உனைப்படித்து முடித்து
உள்ளத்தில் முடிந்து கொண்டு
உலகில்
நடமாடும் நூலகம்!

நீ இன்னும் படித்து
முடிக்காத
முடிவிலிப் புத்தகம்!

நீ சிரிப்பதை
உனக்குத்தெரியாமல் ரசிக்கும்
உனது
இன்னொரு தாய்!

அடிக்கடி நீ
குறைகாண
அதில் மனம் துடிப்பாள்!
உனக்குப் பிடிக்கவே
எல்லாம் புரிவாள்!

உனது கடிதல்களை
தாங்காமல்
விம்மி வெடிக்கும்
மெல்லிய இழை!

அடிக்கடி
உன் பிழைகளை
பிடிக்காவிடினும்
மனமுவந்து மன்னிக்கும்
மனிதப் புனிதை!

0 கருத்துக்கள்:

Post a Comment