நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, March 4, 2014

என்றும் காதல் !












புருவங்கள் சுருங்கினாலும்
வருடங்கள் உருண்டாலும்
பருவத்தில் வந்த காதல்
உருமாறிப் போவதுண்டோ?

பூங்கொத்து தேவையில்லை
புன்னகைப்பூ ஒன்று போதும்!

பூங்காற்று தேவையில்லை
உன் சுவாசம் ஒன்று போதும் !

மண்டு,மனை தேவையில்லை
ரெண்டு கண்ணின் பார்வை போதும்!

காசு பணம் தேவையில்லை
பேசுகின்ற விழிகள் போதும்!

காணி நிலம் தேவையில்லை
ஒன்றிணைந்த உள்ளம் போதும்!

ஒடுங்கிய கரங்களுக்குள்
அடங்கிப்போக தேவையில்லை
நடுங்கிய கரங்களின்
ஸ்பரிசம் போதும்!

துடித்திடும் விழிகள் தேவையில்லை
புரிந்திடும் உன் உள்ளம் போதும்!

தூங்குகின்ற உணர்வுகளை
தட்டியெழுப்ப தேவையில்லை
தாங்குகின்ற உள்ளம் போதும்!

நினைவுகளை மீட்டு
நனைந்திருப்போம் வா!
கதைகள் பேசி
மகிழ்ந்திருப்போம் வா!

முதல் சந்திப்பை மீண்டும்
மனதிலே மறுபதிப்புச் செய்வோம்
அச்சிடாத புத்தகமாய்
அசைபோடலாம் வா!

இன்னும் அந்த நாணம்
எனக்குத்தெரிகிறது

ஒதுங்க இடம் தேவையில்லை
ஒதுங்கித்தானே இருக்கின்றோம்!

குடைகளும் தேவையில்லை
போர்வையும் தேவையில்லை
ஒருவரை ஒருவர் அன்பால்
போர்த்துக்கொள்வோம்
ஆதரவுடன் ஆளுக்காள்
பார்த்துக்கொள்வோம்!

உனக்கு நானூட்ட
எனக்கு நீ ஊட்ட
குழந்தையாய்
மாறுவோம் கிழவராய்
ஆனாலும்!

நாம் செல்வோம்
சுற்றுலா
என்னுடனே நீ
வா நிலா!

0 கருத்துக்கள்:

Post a Comment