நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, March 5, 2014

சுன்னத்துக் கல்யாணம்!








சுன்னத்துக் கலியாணம்!











உம்மாவும் வாப்பாவும்
தங்களுக்குள் பேசிக்கொண்டார்
வெள்ளாமை வெட்டினா
சின்னவனுக்கு சுன்னத்தாம்!

வீட்டுக்கு கூரை
புதுக்கிடுகாலே
ரோட்டு வேலியும்
புதுப்பொலிவோடே!

நீத்துச்சுவரு
ஊத்தையை மறைச்சி
சுண்ணாம்பு வெள்ளை
சிரித்திடும் முறைச்சி!

கால்நடையாய் போய்
உம்மாவும் சொல்வா
ஆள் இடையில் கண்டால்
வாப்பாவும் சொல்வார்.!

அசருக்கு கல்யாணம்
பகலைக்கு விருந்து
"அயத்துப்போகாம "
எல்லாரும் வாங்க!

அல்லயல் காரர்கள்
அழையாமல் வருவாங்க
பிள்ளைகள் எல்லாம்
விளையாடி மகிழ்வாங்க!

வாழைக்குலைகள் புகையிலே
பழுக்கும்
வரும் ஆட்களுக்கு வெற்றிலை
படிக்கம்!

தென்னை மரத்திலே
கட்டிய பீக்கர் மறைவிலே இருக்கும்!
ஆனால் பாட்டின் சத்தம் நல்ல
தூரத்திற்கு கேட்கும்!

தூக்கிலே "சருபத்து"
தட்டத்தில் தீன் பண்டம்!
வாய்க்குள்ளே வெற்றிலை
சட்டையில் வடியும்
வெற்றிலைச்சாறு!

வேலைகள் பிரித்து
பொண்டுகள் செய்வார் வெண்
சேலைகள் பிரித்து
வெள்ளையும் கட்டுவார்!

பந்தற்காலிலே கையினைப்போட்டு
பையன்களெல்லாம் சுற்றி சுழல்வார்
சொந்தக்காரர்கள் சுற்றமும்
நேர காலமாய் வந்து சேர்வார்!

குருத்து மணல்
பரப்பிருக்கும்
வாசல்
பளபளன்னு மெருகேற்கும்!

குருத்தோலை கிழித்தெடுத்து
வருவோரை வரவேற்கும் தோரணம்
கருத்தோடு வரவேற்று
இருப்பாட்டி கதைபேசும் உறவினம்!

சாப்பிட்ட பின் குளிக்காதே
சத்தமிடும் வாப்பா அன்று மட்டும்
சம்பிரதாயத்துக்காய் சாப்பிட்ட பின்னர்
கிணற்றடியில் குளிக்கவைப்பார்!

புதுச்சட்டை பனியனோடு
சாரமும் மாப்பிள்ளைக்கு
உடுப்பாட்டி மகிழ்வார்கள்
கோலத்தைப் பார்த்து
பூரித்துப் போவார்கள்!

ஊரெல்லாம் சுற்றிய
மாப்பிள இறுதியில்
பள்ளி உண்டியலில் போடுவார்
காணிக்க!

அண்ணாவி தலைமையில்
பொல்லடி நடக்கும்
தந்தந தானா என்று
சொல்லடி கேட்கும் !

மல்லிகை மாலை
நல்ல டொபியாலே மாலை
தலையிலே தொப்பி
காலுக்குச்செருப்பு!

மச்சிமார் மதினிமார்
மருதோன்றி போடுவார்
அச்சின்ன சின்னத்து
மாப்பிளைக்கு!

பூவுடன் பொரி சேர்த்து
தலையிலே சொரிவார்
நாவுடன் உதடு சேர்த்து
குரவையும் இடுவார்!

"பகல்வெத்தி"எரியும்
பிள்ளை பயப்படுவதும் புரியும்
படிக்கம் அடிக்கலம்
அணைந்த பகல்வெத்திக்கு!

செப்புக்கு வைத்தவர்கள்
திரும்பச் செய்வார்கள் புதியவர்
பெயரை கொப்பியில் குறித்து
பத்திரமாய் பதிவார்கள்!

முன்னுரிமை தரவில்லையாம்
மூத்த மாமி மூலையிலே
தன்னுரிமை விடமாட்டேன்
சின்னம்மா பிடிவாதம்!

சின்னத்து மாப்பிள்ளைக்கு,
கல்யாணம் அவர்களுக்கு!

நேரம் நெருங்க நெருங்க
பிள்ளையின் முகம் வாடும்
எண்ணத்தில் பயம் ஓடும்
தூரமாய் ஓடி ஒளிஞ்சி
கொள்வான் சின்னத்து மாப்பிள்ளை!

விசயம்தெரியாத தம்பியும்
தங்கையும் காட்டிக்கொடுத்து
மாப்பிள்ளையிடம்
துரோகிப்பட்டம் பெறுவார்கள் !

அதிகாரி தளபதியாம்
ஒய்த்தா"அரசனாம்
மாமா வாயில் காவலன்
வாப்பாக்கு கிறுகிறுப்பாம்

காட்டாயப் பாட்டாபிசேகம்
களைகட்டி நடக்குது
பலநாள் பரபரப்பு
நொடிக்குள்ளே முத்தாய்ப்பு.

உரல் அரியாசனம்
மைக்கத்தியே சாமரம்
வீரக்கொள்ளி சாம்பலே
தூவுகின்ற பூவு!

உரலுக்கு மேலே வெள்ளைச்சீலை
அதுக்கு மேலே குருத்து மணல்!
அரக்கனைப்போல் கிடுக்குப்பிடி
அதுக்கிடையில் துண்டுவிழும்!

பெரிசா நோவு இல்லை
பெரிய குருதியில்லை
இரவாக நோவு வரும்
சிறிது சிறிதாக கூடிவிடும்!

விட்டத்தில் நூல்தொங்கும்
நூலிலே துணி தொங்கும்!
கிட்டத்தில் இருந்துகொண்டு
காலிலே கால்போட்டு கால்
ஒட்டாம பார்ப்பாக மாமாவும் மச்சானும்!

தூங்கினா புரளுவானாம்
மாப்பிள்ளை
தூங்காம விழித்திருந்து காப்பாங்க
சில ஆம்பிள்ளைங்க!

கூட்டாளிமாரெல்லாம்
கிட்டவரப்பயந்துகொண்டு
எட்டிப்பார்ப்பார்கள்
வாசல் படியில் நின்றுகொண்டு !

தண்ணிக்கு கட்டுப்பாடு
காலையில் சாப்பிடப் புட்டு
நல்லெண்ணெய் நாட்டுமுட்டை
வேளைக்கு ஊட்டுவார்கள்!

தண்ணிக்கு பதிலாக
பிளேன் சோடா
மத்தியானம் சோறோடு
வெள்ளைப்பூண்டு முளகாணம்!

தற்செயலாய் புண் பழுத்தால்
தானாக பழி விழும் அவன்மேலே
தண்ணீர் சுரம் என்று
பெயர் வரும் தன்னாலே!

பனங்கொசு படையெடுக்கும்
பட்டாளமாக
சினங்கொண்டு விசிறியால்
விசிறுவாங்க விரட்டியடித்து !

சீலை கழற்றும்போது
சீவனும் போய்வரும்
காலைப்பிடிப்பவருக்கு
காலால் உதை விழும்!

சீலை களற்றியபின்
காலை அகட்டிக்கிட்டு
சாரன் பட்டிடாம
தூக்கிக்கிட்டு நடப்பாரு
சின்னத்து மாப்பிள்ளை!

"அசறு"விழுந்தவுடன்
ஏழாம் நாளன்று
தலையிலே நீரூற்றி
தண்ணி வார்ப்பாங்க!

முதன்முதலாய் போனவுடன்
பள்ளி நண்பரெல்லாம்
சுற்றிநின்று அனுபவத்தை கேட்டு
ஆளுக்காள் பகிர்வாங்க

சிலநாளைக்கு
எல்லாரும் ரவுசருடன்
இவர்மட்டும் சாரனுடன்
மாப்பிள்ளை கோலத்தில்!

கிழக்கிலங்கையில் எமது பிரதேசத்தில் சாதாரணமான குடிமக்கள்  தமது ஆண்பிள்ளைகளுக்கு செய்யும் கத்னா என்றழைக்கப்படும் விருத்தசேதனம். எண்பதுகளிலும் அதற்கு முன்னரும் இப்படித்தான் நடைபெற்றது.இது  ஒரு பெருவிலாவாகவே எடுக்கப்பட்டது.சுன்னத்து/சின்னத்து என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும்.எதிர்கால சந்ததியினர் அறிந்து வைத்திருக்க இந்த ஆக்கம் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அல்லையல்-அக்கம்பக்கத்தார்
அசறு-மதியத்துக்கு பிந்திய நேரம்,புண்ணின் காய்ந்த தோல் .
அயத்துப்போகாம-மறந்திடாமல்
பகல்வெத்தி-மத்தாப்பு.
செப்பு-சீர்
 —

0 கருத்துக்கள்:

Post a Comment