நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, January 14, 2014

விழிகள்!


என்புக்கோளம் அதன்
உள்ளாலே கொழுப்புப்
பஞ்சுமெத்தை
அதனுள்ளே
உருண்டு புரளுது
சுருங்கி விரியுது
ஓர் உருண்டை !

கட்டிப்போட்டுக்
கட்டுப்படுத்த
ஆறு தசைக்கயிறு
யாருடைய கையில்
அது இருக்கு?

வெட்டிப்பார்க்க ஒன்று
விட்டுக்கொடுக்கும்
வலம் திரும்ப வலம் தளரும்
இடம் நீண்டு இடம் கொடுக்கும்!

மேல் மூடி கீழ்மூடி
ஒருமித்து மூடிவிடும்
எதிரிகள் எதிர்பாரா
தாக்குதலை சமாளிக்க!

ஒளி தாக்கி விழிநோகா
காத்திடும் இமைக்காவல்
ஒழிந்திருந்து , வரண்டிடாமல்
தொடர்ந்திடும் கண்ணீர்த் தூவல்!

வெள்ளையனும்
கருப்பனும் இங்கு கூட்டாளி
இதை நீதான்
நின்று சற்று கவனி !

ஆண்டவன் கற்பனையின்
அந்தக்கால படக்கருவி
இன்றுவரை மாறாத
அதே உருவில்!

உட்புகுந்த ஒளிக்கதிர்கள்
விழித்திரையில் குவியவைத்து
தலைகீழ் விம்பத்தை மூளையில்
நேராக சிறைபிடிக்கும்
விசித்திரக் கருவியது !

இருப்பவர் எவருமே
உயிரோடு கொடுப்பதில்லை
இறந்தவர் எவர்க்கும்
இது என்றும் தேவையில்லை

தசையொன்று தளர்ந்ததால்
வாக்குக் கண்ணு
தூசொன்று விழுந்தால்
சிவக்கும் கண்ணு!

வயது போனால்
சிலருக்கு மங்கும் கண்ணு
வயது போகாமலே
சிலருக்கு போகும் கண்ணு!

பிறப்பிலே குறைபாடு
நிறமெல்லாம் சிலருக்கு
மாறித்தெரியும்

ஊட்டத்தில் குறைபாடு
இரவினில் சிலுருக்கு
உருவமும் தடுமாறும்!

மூடிக்கிட்டு கொஞ்ச நேரம்
நடந்து பாரு
விழி இல்லா அந்தகனின்
பாட்டைப் பாரு!

ஊனக்கண் திறப்பதற்கு
உலகத்து ஒளிவேணும்
மனக்கண் திறப்பதற்கு
உள்ளத்தில் ஒளிவேணும்!

கேளாமல் கிடைத்த கொடை
கிடைக்காட்டி எத்தனை தடை?
தடைதாண்டி நடப்பாயா
உனை நீதான் பார்ப்பாயா?

பேரோளியைப் பாராதே
கொதிநீரால் கழுவாதே
சுண்ணாம்பு தெறித்துவிட்டால்
சுட்டுவிடும் கண்மணியை !

விழி தந்த வல்லவனை
உளம் நினைத்து வணங்கிவிடு
விழி பெற்ற பேற்றிற்கு
நன்றி நீ கூறி விடு!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 Jan 14
 — with Keerthana KeetsPesum KavithaikalMohideenbawa Mohamed Kaleel and 41 others.
Like ·  · Stop Notifications · Share · Edit

0 கருத்துக்கள்:

Post a Comment