நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, January 13, 2014

குடை
















பனையோலை பாட்டனார்
"தளப்பத்து" பூட்டனார்
சுளகுச் சகோதரி
இது எங்கள் குலவழி !

நான்காய்ந்து
நிழலாவேன்
நான் நனைந்து
உனைகாப்பேன்

நுனியால்
குத்திடுவேன்
பகிடிக்கு
பிடியால் பிடித்திளுப்பேன்!

விரியாத சிறகுகள்
நான் தூங்கும் இரவுகள்
காலின்றி நடப்பேன்
ஒருகாலில் நிற்பேன்

வளைந்த காம்பு
முனைந்த மூக்கு
ஒற்றைக்கால்
வட்டச் சிறகு !

நேராக நிற்பதற்கு
இறக்கும் வரை
தவமிருக்கிறேன்
கொக்கல்ல நான் "குடை"

எனது பிரமாண்டப்
பிறப்பு விமானங்கள் பறக்கும்
வானம்!
எங்கள் நிலைகண்டு
அழுவுதே அது தினமும்!


மூலைகள் எனது இல்லம்
சோலைகள் எனக்கு
வேலை இல்லாத சுவர்க்கம் !

ஆடையின் நிறத்திற்கு
அணங்குகள் கைப்பிடியில்
ஆட்களின் தரத்திற்கு
இணங்கிய விலை மதிப்பில்!

எதிர்காற்றில் எனைப்பிடித்து
என்னுடம்பு அழிகிறது
எலும்பெல்லாம் உடைகிறது
எட்டுக்கண் சேர்ந்து
கண்ணீரும் விடுகுது!

எலி கடித்த ஓட்டைகளும்
கறள் பிடித்த கம்பிகளும்
உடைந்து ஒட்டப்பட்ட கைபிடியும்
கொண்ட எனது சகாக்கள் சிலர்

கிடுகு இறப்புக்குள்ளே
செருகி சிறை இருக்கிறார்கள்
அந்த வீட்டுக்காரர்களை
வறுமை அடிமையாக்கியதால்!

என் பெயரை அடைகொண்டு
எனைப்போல விரிந்திருக்கும்
மர நிழலில் ,இளைப்பாறிச்
செல்கின்றார்
மழைக்கும் ஒதுங்குகின்றார்!
பெயருக்கே இத்தனை பெறுமதியா?


    - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment