நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, January 25, 2014

மரண ஒத்திகை




இரவு தனைமறந்து
கண்ணயரும் நேரம்
குளிருக்கும் குளிரடிக்கும்
வளி ஒடுங்கி
பனி பிறக்கும் !

காற்றுப்பாதை
அகலாமாக்கும் மாத்திரைகள்
சுவாசத்தோடு சண்டையிட்டு
மண்டியிடும் சோகம்!

சீரான சுவாசம்
சீரழியத்தொடங்கும்
போய்வந்த
வளிப்பாதை முடங்கும்!

சுவாசப்பாதை
அரைக்கதவை அடைத்துக்கொள்ள
உள்ளே போன வளி
வெளியே வர மறுத்து
கடையடைப்பு செய்யும் !

நெஞ்சுக்கூட்டு தசைகளெல்லாம்
கூட்டுச் சேர்ந்து கொண்டு
துரத்தினாலும்
ஓடுதில்லே மூச்சு
விலா எலும்பு ஓடியும்வரை
சுருங்கினாலும் மூச்செடுக்க
முடியுதில்லெ!

விழிபிதுங்கி
தோல்கறுக்க
காற்று கடுமையாய்
பசிக்க
மூச்சுத்தட்டி
உடலும் உயிரும்
கட்டிப்பிடித்து
மல்லுக்கட்டும்!

அரக்கப்பரக்க
அங்கும் இங்கும் பார்த்து
அக்கம் பக்கத்தாரை
அசைந்த கண்ணால்
அருகே அழைத்து
மரணத்தின் ஒத்திகை
அரங்கேறும்!

சரிந்திருந்தால் சற்று
சந்தோசம்
சாய்ந்திருந்தால் சற்று
வித்யாசம்!

தட்டுத்தடுமாறி
கூட்டுக்குளிசையை
உறிஞ்சும்போது
கொஞ்சம் குறையும்
நேரஞ் செல்லச்செல்ல
குளிசையின்
பலனும் குறையும்!

ஒன்றுக்கும் கேட்கல
ஆட்டோவைக்கூப்பிடு
அவசரமாய் அனுமதி
ஆசுப்பத்திரியில்!

ஆறேழு பேர்நின்று
ஏதேதோ பண்ணுவார்
மூக்கிலும் வாயிலும் ஏதேதோ
செருகுவார் !

கையாலே ஊசியும்
வாயாலே மூச்சியும்
விரைவாகச் செய்து
எமனோடு சண்டை
எளிதாகச்செய்வார் !

புரியாத போது
புத்தகம் விரிப்பார்
முடியாத பொது
கைகளை விரிப்பார்!

அதுகண்ட உற்றார்
அண்ணாந்து பார்த்து
இருகரம் ஏந்தி
இறைவனை விழிப்பார்!

ஈளை என்று சொல்லுவாங்க
இழுப்பென்றும் அழைப்பாங்க
காளை ,கன்று பாராது
யாவரையும் தொய்வு வந்து
தாக்குமுங்க !

ஓவ்வாத உணவுவகை
ஒட்டாத கடுங்குளிரு
வீட்டுப் பிராணிகளும்
பூக்களின் மகரந்தம்

மணமூட்டி வகைகளும்
புகையுடன் ஒன்று சேர
மனம் அழுந்தி வெடிக்கும்போது
முட்டி நிற்கும் உன் மூச்சு!

பரம்பரைப் பரிசு இது
வரும்வரை தெரியாது
வந்த பின்னால்
தாங்கவே முடியாது!

மருந்து நீ பாவி
விருந்திலே நீ யோசி
ஆழமாய் நீ சுவாசி
ஆகாதவை தள்ளிவைத்து
ஆனந்தமாய் நீ வசி!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2013 jan 25

0 கருத்துக்கள்:

Post a Comment