நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, January 12, 2014

கிண்ணம்பழம்












சேற்று நீரை சோறாக்கி
காற்றோடு வெளிச்சத்தை
நீராக்கி

ஆடுசுரியில் அசையாமல் 
வாழுகின்ற அந்த மரம்
அதன் பேரு கிண்ண மரம்!

களப்புப் பக்கம் கலகலப்பாய்
அவை வாழும்
வெளிச்சம் பட்டு
பளபளப்பாய் காற்றிலே
இலையாடும்!

மூச்சி விடுவதற்கு
முட்டிக்கொண்டு எழுந்துவரும்
மூக்கு முளைத்த
சுவாச வேர்கள்!

நிலத்தைப்பார்த்தது எப்போதும்
சிரிக்கின்ற அழகுப்பூக்கள்
விடுடா விளப்போறேன் என
விழத்துடிக்கும் கிண்ணங்காய்கள்!

அரசனின் கிரீடத்தை
நினைவூட்டும்
அல்லி வட்டம்
காயடியை சுற்றியொரு
சிவப்புவட்டம்
உரசினாலும் உடைந்திடாத
நல்ல திடம்!
காம்பிலே தெரியும் நல்ல
தெம்பு!
அடியிலே தெரியும்
நீளமான ஒரு
புல்லுப்போல வாலு!

அட்டை ஓட்டினாலும்
அடிக்கட்டை குத்தினாலும்
பழம் பறித்து முடியும் வரை
எதுவுமே புரியாது!

அடிமரத்தை பிடித்தேறி
அருங்கந்து தான் தாவி
மடிநிறைய பழம் ஆய்ந்து
மரத்திலும் பழம் தின்று !

பழவேட்டை முடிந்த பின்னே
கடலிலே குளிகையிலே
பல அட்டை கடித்த இடம்
கடல் நீரில் குளிக்கையிலே
பற்றி எரியுமடா
நெற்றியும் சுருங்குமடா!

யாருக்கும் தெரியாமல்
கொல்லையாலே உள் நுழைந்து
உப்புப்பானைக்குள்
ஒழித்து வைத்த கிண்ணம்பழம்
பழமாகும் வேளையிலே
மணத்தாலே சொல்லிடுமே
தானொழிந்து இருப்பதனை!

அடுப்படியில் அடிப்பானைக்குள்
இருந்தாலும் திண்ணையில்
இருப்பவருக்கு தன்னைக்
காட்டிக்கொடுக்கும் கிண்ணம்பழம்

பழஞ்சோறு ஊறவைத்து
தேங்காய்ப் பால் பிழிந்து
சீனியுடன் உப்பும் சேர்த்து
நொறுங்கப் பிசைந்து தின்றால்

பகல் வரை
தாங்கிடுமே
அதன் சுவை
வேண்டி நாவும்
ஏங்கிடுமே!

இப்ப அதிகம்
கிண்ணை கிடையாது
கிண்ணம் பழந்தானும்
கிடைக்காது!
நாலைந்து மரம் மட்டும்
மிஞ்சிருக்கு
நடுச்சுருப்புள்
நாரை மட்டும்தான்
இப்ப அங்கு போகும்
நாமெல்லாம் போகேலா !

                 -உமர் அலி முகம்மதிஸ்மாயில்!


0 கருத்துக்கள்:

Post a Comment