நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, January 14, 2014

அணில் கடிச்ச மாங்கா!





சாம்பல் பூத்து
பாரத்தால் துவண்டு
சவண்டு தொங்கிறது
முத்தின ஒத்த
மாங்கா!

"தொரட்டி"க்கும் எட்டாத
உச்சாரக் கொப்பில
நீண்ட தண்டிலே
ஆடித்தவம் செய்கிறது!

காற்றடித்து
அசைந்த பக்கத்து
கிளையின் இலை
சிலநேரம்
தொட்டுச்செல்லும்!

கன்னத்தில்
ஏறு வெயில் பூசி
பொழு பொழுன்னு
பளபளக்கும்
பச்சைமாங்கா!

ஆருக்கும் போகேலா
அந்தக்கந்து
அணில்பிள்ளை மட்டும்
தொட்டுச்செல்வார்
அந்தக்கந்து!

யார்சொல்லி அனுப்பினாரே
இல்லை மாங்காதான்
காற்றிலே தூது சொல்லியதோ
யார்கண்டார்?

மாப்புடைத்து மஞ்சள் நிறம்
கொண்ட அரைப்பழம் தேடி
கிளை தாவி ,துள்ளி
அணில்பிள்ளை வரும் ஓடி !

தலைகீழாய் தொங்கிக்கொண்டு
தலைப்பக்கம் தழுவிக்கொண்டு
அரிசிப்பல்லாலே அரிந்துன்னும்
கலையைப்பாரு!

சாகசம் செய்துதான்
அணில்கூட சாப்பிடுது
சற்றும் தவறாமல்
பற்றிக்கொண்டு கொறிக்கிறது!

இளைப்பாறி இளைப்பாறி
ஆராலும் வருகிறாரா என
அக்கம் பக்கம் அடிக்கடி
பார்த்துக்கொண்டு
உண்ணும் அழகைப் பாரு!

இனிப்பெல்லாம் முடிந்து போக
இனிப்பல்லால் மெல்ல முடியாது
என நினைத்து அலுத்துப்போய்
அங்குமிங்கும் பார்க்கையிலே!

நானும்தான் காத்திருந்தேன்
நீ முந்தி தின்கிறாயே
மிச்சம் கிச்சம் வையப்பா
அடுத்த கிளைக்
காக்கை வாய்விட்டு
கெஞ்சி அழுகிறது !

காக்கையின் அழுகை கண்டு
அனுதாபப்பட்டு அவசரமாய்
கொத்தித் தின்னு என்று சொல்லி
தத்தித் தாவுகிறதே
முக்கோட்டு அணில்பிள்ளை
முக்காடு போடாத
முத்தின மாங்காய் தேடி!

அப்போதான் வீட்டுக்காரன்
அண்ணாந்து பார்கிறான்
அதுவரை காணாத
அருங்ககந்து மாங்காயை!

காகத்தை வைகின்றான்
கல்லெடுத்து எறிகின்றான்
வைதவனை வைதுகொண்டு
வெளியேறிச் செல்கிறது
அண்டங்காக்கை!


உமர் அலி முகம்மதிஸ்மாயில்!
2014 Jan 14th
 — with Pesum KavithaikalJaferalimk KaniAshraff Khan and 40 others.
Like ·  · Stop Notifications · Share · Edit

0 கருத்துக்கள்:

Post a Comment