நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, January 2, 2014

முடக்கு நாகை

                          முடக்கு நாக மரம்

வெள்ளை தோல்
வழுக்குகின்ற வழுவழுப்பு!
படருகின்ற இலைகளிலே
மினுங்குகின்ற பளபளப்பு!

பூக்கின்ற காலத்தில்
நல்லதொரு மணம் மணக்கும்!
பழுக்காத முடிச்சுகளால்
இடைக்கிடையே கிளை கனக்கும்!

பழுக்கின்ற காலத்தில்
ஊரில் ஒரே புழுக்கம்!
இடை மழை விழுந்ததென்றால்
நன்றாக காய் பருக்கும்!

நிறத்திற்கு பெயர்கொடுத்த
வள்ளல் மரம்
பலன்கொடுக்கும் பலருக்கு பலவாறு!

பகலிலே
பலபறவை,குருவிகளும்
இரவிலே வவ்வால்கள்
அழைப்பிதல் இன்றியே
வரவழைக்கும்!

அருங்கந்தில் அணில்தாவும்
பெருங்கந்தில் நாம் தாவி பழமாய்வோம் !

அது
காக்கை குருவிகளின்
நக எச்சம்
பட்ட பழங்களையும்
பொறுக்கித்தின்னும் பருவம்!

சுடாத பழங்களையும்
ஊதி ஆறவைக்கும்
வியூகம்!

காக்கை வௌவால்சப்பித்துப்பிய
சக்கைகள் அதிகாலையில்
அருவருக்கும் கோலம்!

பழக் கொள்ளையர்களை
விரட்ட
உலுக்கிவிடும் சகடை
இடைக்கிடை
எழுப்புமே அவல ஓசை!

இது கேட்டு
அவை திடுக்கிட்டு
ஓடினாலும்
இடைவெளியில்
மீண்டுவரும்
பழம் தின்ன ஆசை!

எட்டாக்கிளைகளை
எட்டிப்பிடிக்கப் போய்
பட்டென்று கிளைமுறிய
தடாலென்று விழுந்தபின்னர்
முழங்காலில்
உரசலுடன்
முன்னங்கை
முறிந்தவர்கள் பலருண்டு
மூட்டெலும்பு
தெறித்தவரும் சிலருண்டு !

பள்ளிக் கால்சட்டையில்
பதுக்கியது நசுங்குண்டு
சலவை நாட்களில்
அடிவாங்கித் தந்ததுண்டு!

பல்லில் கறைபடிய
சொல்லும் தடுமாறும்
நாக்கும் நிறம் மாறும்
பழம் தின்னும் போது!

கொடி நாவல்
கொட்டை நாவல்
சீனி நாவல்,,வெண்ணாவல்
எலி நாவல் வகைகளுண்டு
ஒவ்வொன்றும் தனித்தனியே
சுவைகொண்டு!

வளவுகள் வகுக்கப்பட
எல்லையாக வந்த வேலிகள்
எமனாக வந்தன
வேலியால்
வளைந்து செல்ல முடியாதாம்
வளைந்த நாகை
கொள்ளிக்கு உதவும் என்று
கூடி நின்று பேசினார்கள்
அடியோடு அறுத்தார்கள்!

அறுத்த அடிமரத்தில் உரலோன்று செய்து
அருங்காட்சிக்கு வைத்தார்கள்
நவீன சமையல் கூடத்தில்!
எப்பொழுதோ இறந்த நாவல் மரம்
இன்று
இருக்கிறது பள்ளிப் பாடத்தில்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 jan 2nd
Like ·  · Stop Notifications · Share · Edit

0 கருத்துக்கள்:

Post a Comment