நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, June 10, 2014

வண்டுருண்டை



வட்டை ஒட்டு விழும்வரை
பசுமாட்டுப் பட்டியெல்லாம்
பாழ்வளவு பயிர்செய்யும்
மேட்டு நிலத்திலதான் கால போட்டு
கட்டுவார்கள்!

கன்றுக்கு சிறுகாலை
வரிஞ்சி கட்டியிருக்கும்
ஒன்றும் வெளியால கன்று வந்து
களவில பால் குடிக்காம!

கணுக்களில் கறவைகள் கட்டுவாங்க
இல்லாட்டி கம்பிக்
காலைக்குள் பசுக்களெல்லாம்
அடைப்பாங்க

மகரிபுக்கு வாங்கு சொல்லி
மாலை மறைவதுக்குள்
சாணிப்புகையோட சரிசமமாக்
கலந்துகொண்டு அசைபோடும்
மாடெல்லாம் !

பகலெல்லாம் முன்னால
மேய்தவற்றை
இரவானா பின்னால
வெளித்தள்ளும் பசுமாடு
அது பயனான ஒரு எரு!

மாடுவந்து சேரும்வரை
காலைக்குள் யாருமில்லை
மாடும் வந்து மாலையும் வந்தால்
ஆளுக்கொருபக்கம் இருந்து
ஆமிக்காரன் வாறாப்போல
தீடுதிப்பாய் வந்து சேரும்
பீ உருட்டும் வண்டெல்லாம்!

பறந்து வரும் நடந்துவரும்
மண்ணுள் இருந்து எழுந்தும் வரும்
ஆறுகால்களும் இரு சோடி சிறகுகளும்
மட்டும்தான் வண்டுக்கு மூலதனம்
முயற்சியே அடித்தளம்!

கிட்டப்போய் உற்றுப்பார்த்தா
பட்டன்று விரியும் சிறகுக்குள்ளிருந்து
பதினாறு சோடி பூச்சிகள்
பனங்கொசுப்போல பட்டென பறந்து
உன் முகத்திலே முட்டும்
பயந்த நீயும் படாரெனப்பறப்பாய்
பார்த்த கலையை திடீரென மறப்பாய்!

மட்டப்பலகையுமில்லை
மண்வெட்டி தூக்குக்குண்டுமில்லை
புட்டுப்போல மாடுகள்
பின்னால விட்டதை
கச்சிதமாய் வெட்டும் பின்னர்
காலால் முன்னும் பின்னும்
உருட்டும் !

உருண்டது பிரிந்திடாமல்
ஊத்தை மணலும் ஓட்டும்
பலதிசையில் உருண்டை உருண்டாலும்
அதன் பயணமோ ஒரு திசையில்தான்!

வண்டின் உணவு மட்டுமில்லை
இனம்பெருக்கும் ஊடகமும் தான்
வண்டியிலே செல்லவில்லை
யாரும் கொண்டுவந்தும்
கொடுப்பதில்லை
ரெண்டு வண்டு சேர்ந்து கொண்டு

நாட்டாம்பி வேலை செய்யும்
நம் நாட்டு பீ வண்டு
அதைக்கண்டு தானேனும்
நீ உழைத்து நீ உண்ணு!

வண்டு புதைத்த குண்டினால்
வளமாகும் மணல் மண்
மாடு உண்டு கழித்த எருவினை
உண்டு பெருகும் வண்டினம்

வண்டெல்லாம் நிலவொளியில்
சஞ்சரித்தது வியர்க்காமல்
வேலை செய்யும் அழகாக
நண்டினம்போல் காலிடுக்கும்
தலையிலே வாள்போல ஒன்றும்
கொண்டிருக்கும்!

திருடித் தின்பவனே
உருட்டுகின்ற வண்டைப்பார்
பல மடங்கு பாரத்தை
முயன்று சுமக்குது பார்

வளைவு சுழிவெல்லாம் கடந்து
அந்த வண்டு பொந்துக்குள் வடிவாக
வந்து சேரும் கதை வரிகளால்
மேலே சொன்னேன்

வண்டுகளைக் கண்டநாள்
மீண்டும் வந்திடுமா
வண்டுருண்டை காயவைத்து
நண்பனை எறிந்ததும்
மறந்திடுமா?

மு.இ.உமர் அலி
2014 JUNE 10
 — with Rijan MuhammadhRatha Mariyaratnamதடாகம் கலை இலக்கிய வட்டம்and 42 others.
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment