நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, June 27, 2014

காட்டின் கதறல்

காட்டின் கதறல் காவியம்

அப்போ அது ஒரு அடர்ந்த காடு
இப்போ இது ஒரு புதர் மேடு
போரடித்த பாலை மரம் 
பொருக்குப்பிடித்து தெரிந்தது

கொதிக்கும் வெயிலில் தவிப்புடன் சென்ற நான்
இளைப்பாறலாம் என்றெண்ணி
பொதியோடு சென்று அமர்ந்தேன்
அந்த கிழட்டுப்பாலையின் அடியிலே

சலசலவென்று ஒரு சங்கீதப் பேச்சு
காற்றாக என் செவியினை உரசிச்சென்றது
பல செய்திகளும் சொல்லிப்போனது.

என்றோ நான் கற்றுக்கொண்ட
மரங்களின் பாசை மறக்காமல் இருந்ததால்
இப்போது அது உதவியாயிற்று.
எனது செவி நீளத்துவங்கியது
மரங்களின் சம்பாசானையை நோக்கி!

ஆம்
இன்று இங்கு மரங்களின் மாநாடாம்
இவன் எங்கு வந்தான் இங்கே
இன்னும் என்ன இருக்கிறது இங்கே மீதியாய் எடுத்துச்செல்ல
பல மரங்கள் கோபாவேசம் கொண்டு என்மேல்
பழுத்த இலைகளை கோபத்தால்
கழற்றிவிட்டன
சில நேற்றைய பூக்களை என்மீது
கோபத்தில் எறிந்தன
குனிந்து கல்லெடுக்க முடியாததால்!
தூரத்து மரங்கள் தூவென்று துப்பின
நல்லவேளை அவை என்னில் பட்டுவிடவில்லை!
நான் குறுகினேன் ,குமுறினேன் !

நில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் ஒரு இளங்கந்து அதன் தாய்மரத்திடம் "அம்மா நான் முறிந்து அவன் தலைமேலே விழுந்து தற்கொலைத் தாக்குதல் நடாத்தவா " என்று கேட்டது
என்னைத்திடுக்கிடவும் வைத்தது.

இப்படியிருக்கும்போது
பலத்த சத்தத்துடன் இலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி
கர கோசம் செய்ய ஆலமரத்தின் தலைமையுரை,அதில்
காட்டின் சரித்திரம் ,தற்கால் தரித்திரம் உருக்கமாக ஒலித்தது,

குடியிருந்த கூடுகளை இழந்து குடிபெயர்ந்த பறவைகள்
குரவையிட்டு, கீச்சிட்டு தமது குறைகளைக் கூறின
குரங்குகள் அங்குமிங்கும் தாவி அழுது எதோ கூறிற்று
அவையெல்லாம் எனக்குப்புரியாதே!

தொடர்ந்து இந்தப் பாலைமரம் அழுகையுடனே
ஆரம்பித்து எவ்வளவோ கதை சொன்னது
முடக்காகவும் மூளியாகவும் இருந்ததால்தான்
இன்று உங்களின் முன்பு உயிரோடு நிற்கிறேன்
நேராகவும் அழகாகவும் செழித்துக் கொழுத்திருந்த
எனது சகோதரிகள் எல்லோரும் அதோ அங்கு தெரிகிறதே
அந்த இடத்தில்தான் என் கண் முன்னே படுகொலை செய்தார்கள்

மரங்களின் அழகி ,இக்காட்டின் இளவரசி "முதிரை" இப்போது எங்கே கயவர்களால் கடத்தப்பட்ட அவள்
கட்டிலாகவும் கதிரையாகவும் இன்று கைகட்டி சேவகம் செய்கிறாள்.

இளஞ்சந்ததியினருக்கு மயிலும்
மானும் என்னவென்றே தெரியாது
பழங்களும் இல்லை கிளி மொழிகளும் கிடையாது

பழம் பழுக்கும் காலங்களில் நடக்கும் பறவைகள் மாநாடு
இப்போது நடப்பதேயில்லை தேன்கூடுகளும் எங்கும் தென்படுவதேயில்லை.
வண்ணத்துப்பூச்சிகளும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

எனது இந்தப்புயத்தில்தான் காட்டின் கடைசி மானை
கட்டித்தூக்கி தோலுரித்தார்கள்
எனது நடக்கமுடியாத காலடியில்தான் ஒரு "தபுதார"
மரையை அறுத்துப் பிரித்தார்கள்!

அதோ அந்த மேடைப்புற்கள் செழித்துச் சிரிப்பது
அறுக்கப்பட்டவைகளின் புதைக்கப்பட்ட கழிவுகள் மேலேதான்!

வீரை மரம் வீராவேசத்தோடு விம்மி அழுதது
எனது இனத்தின்கிளைகளையும் விடுகிறாரில்லை
வெட்டி அடுக்கி அட்டியாக்கி விறகாக்கி விடுகிறார்கள்
எரித்துச்சமைக்கவாம்
தறிக்க வந்தவர் பேசியதை ஓட்டுக்கேட்டேன் என்று சொன்னது.

அழுத மரத்தை தணியவைக்க
அனைத்து மரங்களும் அசைந்தன காற்றடித்தது
அதில் அழுத மரம் அயர்ந்ததோ நானறியேன்
ஆனால் நான் கண்ணயர்ந்தேன் அப்படியே!

திடீரென் மனிதக்குரல் கேட்டு விழிப்பு வந்தது
விழி திறக்காமல் செவி கொடுத்தேன்
ஒருவன் சொன்னான்"
முடக்குத்திறுக்கும் நடுவில போரும் இல்லாட்டி
நல்ல சரக்கு விழும் ,முத்தின றாட்டுடா மச்சான் "

சே...... தப்பிப்போகுதே அவனது ஏமாற்றக் குரல்
எனை எழுப்பி என்ன உலுப்பியே விட்டது?
காட்டின் கவலையென்ன இவர்கள் ஆசையென்ன
கண்கெட்ட மாந்தர்கள் !

நான் படுத்திருந்த புல்லுக்கூட மிஞ்சுமா நாளை?
தூக்கம் கலந்த நான் துயரமடைந்தேன்
தூசிதட்டி எழுந்தேன்
அந்தக்காடு என்னை அச்சத்தில் பார்த்தது
சிநேகம் தெரியவில்லை
என்னை வெறுத்தது
பருவக்காற்றுடேன் இணைந்து கொண்டு
தெற்கே முகத்தை திருப்பிக்கொண்டது

மு.இ..உமர் அலி
2014 June 27
 — with ரோஷான் ஏ.ஜிப்ரி,றாபியின் கிறுக்கல்கள்.Jalaldeen Mahakavi and43 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Mohamed Ismail Umar Ali

0 கருத்துக்கள்:

Post a Comment