நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, June 9, 2014

விபத்துக்குள்ளானது விதி!



விபத்துக்குள்ளானது விதி!

நடுவீதி நன்றாகவே தெரிந்தது
ஒரு கையில் கைபேசி
அலை வரிசையில்
கவனம் வைத்தவன்
வீதிய விட்டு
ஊர்தி விலகிச்சென்றதை
கண்டுகொண்டானில்லை போலும்

அவனது பவனி
இன்னொருவனுக்கு அமரர் ஊர்திக்கு
அவசர அழைப்பிதல்
அனுப்பிவிட்டது!

வீதியை
கடக்கப்போனவனை
விதி கண்காணாத உலகுக்கு
கடத்திச்சென்றது

ஒருகையில் இருந்த பையில்
சிதறிய மிட்டாய்கள் அவற்றை
ஊரில் உள்ள
அவனது மழலைகளுக்காக
ஆசையுடன்
வாங்கியிருக்க வேண்டும்

அவனது பாதணிகள்
வீசப்பட்டிருக்க
அவன்வாங்கிய சைனா பொம்மை
விடாமல் விசும்பி அழுகின்றது

சிதறிக்கிடந்த சில
பணநோட்டுக்களில்
அவனது ஈரக்குருதியுடன்
காய்ந்த வியர்வையும் தெரிந்தது!

நிச்சயமாக அவன்
பசியும்
பஞ்சமும் துரத்தியதால்தான்
தாய்நாட்டை விட்டு
இங்கு
தஞ்சமடைந்திருக்க வேண்டும்

எத்தனை பிள்ளையோ
என்னென்ன தொல்லைகளோ
யாருக்குத்தெரியும்

அவஸ்தையினூடே
அவன் பேசிய மொழி
முழுவதும் புரிய வில்லை
இருந்தாலும்
பெற்றவளையும்
மற்றவளையும் ஈனக்குரலில்
முனகிக்கொண்டு
கூப்பிடுவதாகவே அதை என் மனம்
பரிபாசித்தது !

அவனுக்கு சிலவேளை
புரிந்திருக்கலாம்
அது இறுதி
அனுகல் என்று
அவனது அட்டவணையின் சுட்டெண்
எட்டை விடக்குரைவாகவே இருந்தது
இருப்பினும் பிழைப்பான் என நினைத்தோம்
பிழைக்கவேண்டும் என பிரார்த்தித்தோம்
முயற்சித்தோம்

அவனது விழிகள்
பல புரியாத மொழிகளை
அவசர அவசரமாக பேசின
அவற்றைப்புரிந்து கொள்ள
எங்களுக்கு அவகாசமில்லை
எமனை கிட்ட வர முடியாமல்
எட்டி உதைத்துகொண்டிருந்தோம்!

உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும்போதே
அவனது விழிகள் செருகத்துவங்கின

அவசர அவசரமாக கடைக்கண்ணால்
பார்த்துக்கொண்டபோது
அநேகம்
முற்றுப்புள்ளி வைக்கப்படாத வசனங்கள்
வாழ்வில் தொக்கி நிப்பதாக மட்டும் புரிந்தது
பாவம் என்று நினைக்கக்கூட
கணநேரமும் தாமதிக்க முடியாது

பொம்மைகளாக நூலில்
ஆட்டுகின்றவன் எங்களைப்பார்த்து
கொடுப்புக்குள்ளாலே
சிரித்துக்கொண்டு
கொடுத்த உயிரை எடுத்துக்கொண்டான்
ஏனென்று கேட்க முடியாது என்பதால்

சொந்த ஊரிலென்றால்
சுற்றி நின்று சுற்றத்தார்
சொல்லிச்சொல்லி அழுதிருப்பார்
மனைவி பிள்ளைகள்
அழுது புரண்டு
பிதற்றியிருப்பர்,
தலையிலடித்திருப்பர்,
தரையில் புரண்டிருப்பர்!

ஆரென்று
அடையாளம் கான்பதே கடினமாயிற்று
செய்தி சென்றடைய
எத்தனை காலமாகுமோ
யாரறிவார் ?

சமாதியாகுமுன்னே
அந்த வியர்வை வீரனுக்காக
சில துளிகளை உதிர்க்கவும்
பிரார்த்திக்கவும் மட்டுமே முடிந்தது!

கனத்த இதயம்
கலைய மறுக்கும் காட்சிகள்
இதுதான் விதி நம்மை கடக்கும்போது
ஏற்படும் விபத்து
அது வீடாய் இருக்கலாம்
அல்லது வீதியாவும் இருக்கலாம்!

மு.இ.உமர் அலி
2014 june 9th
 — with கவிஞர் நாகூர் காதர் ஒலி,தடாகம் கலை இலக்கிய வட்டம்ரோஷான் ஏ.ஜிப்ரி and 40 others.
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment