நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, May 18, 2014

வடுவின் வடு!












அவலக்குரல்களால்
அசுத்தமடைந்தது வளி
அப்பாவிகளின் குருதியினால்
நிரம்பி வழிந்தது
அந்தப்பெருவெளி!

வானில் வட்டமிட்டன
கழுகுப் பறவைகள்
மண்ணில் திட்டமிட்டன
மனிதக் கழுகுகள்!


கும்மிருட்டில் இடைவிடா
கந்தக வெளிச்சம்
வழிகாட்டுவதற்கல்ல
அழித்தொழிப்பதற்கே!

உருப்படிகளை
உருக்குலைத்தவை
குறிதவறி விழவில்லை
குறி வைத்தே வந்தன!

தலை தெறித்து ஓடினோம்
நிலை குலைந்து ஆடினோம்!

கிரிகைகள் இல்லாமலே
சடலங்கள் சிதையேறின
அங்கே காக்கைகளுக்கு கூட
கடும் பஞ்சமாகிற்று!

பசித்தது
புசிக்க ஏதுமில்லை
நல்லவேளை
கடவுள் காட்டில்
எல்லா மரங்களையும்
நஞ்சாக நடாமல்
நல்ல மரங்களையும்
நட்டிருந்தார்!

யானைகள் கடந்து சென்ற
பாதங்கள் தற்காலிக
கிணறுகளாக
சேற்றைக் குடித்தோம்
சோற்றைக் கண்ணாலும்
காணவில்லை!

வலிகளால்
மரத்திருந்த பாதங்கள்
தெறிவினைகளை
மறந்திருந்ததன!

பொழுது விடிந்து
பறவைகள் பாடித்திரிந்தன
அழுது வடித்து நாங்கள்
அங்குமிங்கு ஓடித்திருந்தோம்!

அவர்கள் உள்ளங்கள்
வறண்டு போனதால்
எங்கள் தாய்மாரின் மார்புகளும்
சுரக்க மறந்தன!

நாட்டுக்கட்டைகளில்
இடறி விழுந்தவர்களும்
ஓட்டுக்காட்டுக்குள்
நடந்து திரிந்தவர்களும்
ஓரிடத்தில் குவிந்தது
இரக்கமற்றவர்களின் குறிகள்
இங்கே குவியமாகிற்று!

அவர்களின் கண்களின்
சிவப்புப்பசியை
அந்தக்குருதி வெள்ளம்
குளிரச்செய்திருக்கலாம்!

விழுந்து தளர்ந்த
உடல்களின் தசைகள் கூட
அவர்களை கவர்ந்திருக்கலாம்!

எங்கள் அழுகைகளை
அவர்கள் ரசித்திருப்பார்களோ?
அதனால்தான் நாங்கள்
சரிந்து விழும்போது
சிரித்து மகிழ்ந்தார்களோ?

புகைப்படக்கருவிகள்
கண் திறக்கும்போது மட்டும்
அவர்கள் புன்னகைத்தார்கள்
நிமிடங்களுக்கு மட்டும்
கொடை வள்ளலானார்கள்
உலகுக்கு ஊமைப்படம் காட்ட!

அலைகள் ஓய்ந்தன
கழனிகள் காய்ந்தன
விடியலே இல்லாத
முடியாத இரவுகளாய் இன்னும்
எங்கள் வாழ்க்கை!

இறுதிப்போரில் இக்கட்டுக்களை சந்தித்து ,உயிர்பிழைத்த PTSD நிலைக்குள்ளான துணைநாடி
ஒருவருக்கு உளவளத்துணை செய்ய வாய்ப்புக்கிடைத்தது.
அந்த அமர்வுகளிநூடு அவர் தனது வடுக்களை எனக்கு விரிவாக கூறியிருந்தார்(.Post Traumatic Stress Disorder) ,அவற்றினடிப்படையில் இந்த வரிகளை வடித்துள்ளேன்.
அப்பாவி ஆத்மாக்களுக்கு இது சமர்ப்பணமகட்டும்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment