நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, May 15, 2014

மருந்துப் பிச்சையும் அருக்குக் காட்டலும்











உடல் நிலை சரியில்ல
பையிலே பணமுமில்லை
ஊர் மருத்துவனையை
ஒருமாதிரி சென்றடைந்தேன்!

அங்கே
என்னைப்போல் பலர்
முக்கலும் முனகலும்
முடங்கி அடங்கி
வலிகளின் வர்ணங்களை
முகத்தசைகளால் ஜனனித்து
கிலிகளின் மர்மங்களை

முடிச்சவிழ்க முட்டிமோதி
பிதுங்குகின்ற வரிசைகளில்
நசிந்து கொண்டு நின்றார்கள்!

ஏற்கனவே
எரிந்து கொண்டிருக்கின்றது தேகம்
சில ஊழியர் மேலும் தணல்களை
வார்த்தைகளால் வாரி இறைத்து
மனத்தை ரணமாக்கி
வாழ்த்துப்பாடுகிறார்கள் !

பலனில்லாத ஒரு
தகவல் பெற
பல இடங்களுக்கு அலைச்சல்
வலிகள்தான் பரிசு!

அன்பு தகித்தது
புன்னகை நீர் கொஞ்சமாவது
கிடைக்குமா என்று
அந்த வரண்டுபோன
பாலை முகங்களில் தேடி தேடி
வாஞ்சையோடு அலைந்தேன்
வாடியதுதான் மிச்சம்!

வாங்குகள் நிரம்பி வழிகின்றன
தரையில் இலையான்களின்
இடைவிடாத மாநாடு !

குமட்டலுடன் வாந்தி வந்தது
எடுக்க முனைந்து
ஒருபக்கமாய் ஒதுங்கினேன்
வந்த வாந்தியே
வாந்தி எடுத்தது
அவ்வளவு தூய்மை அங்கு !

உறுக்கல்கள்,அதட்டல்கள்
விடைகள் தெரிந்து கொண்டே
மீண்டும் தொடுக்கப்படும்
அனாவசிய வினாக்கணைகள்!

இலவசமாகக் கொஞ்சம் மருந்துக்கும்
குளிசைக்கும்
கொஞ்ச நேரம் கொத்தடிமைகளாகி
நாங்கள் கொடுக்கும்
விலை மிகவும் அதிகம்!

கொஞ்சமும் ஈரமில்லா நெஞ்சங்கள்
இறுகிய தசைகளால்
மறைத்துக்கட்டப்பட்ட முக வேலிகள்
உண்மையில் கூனிக்குறுகவேண்டியவர்கள்
நிமிர்ந்து நடக்கிறார்கள் !

ஏதோ இரவல் கேட்டு வந்தது
போலல்லவா
இழிவாக பார்க்கிறார்கள்

வலிகளை அவர்கள்
புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை
ஏனெனில் வலிப்பது எமக்கல்லவா?

வரிசையில் நின்று
தளர்ந்து போன எங்கள்
கால்கள் பற்றி அவர்களுக்கெங்கே புரியும்
அவர்கள் சுழல்கின்ற இருக்கைகளில்
இருந்து எழும்ப மறந்து விட்டு
வார்த்தைகளால் அல்லவா
சேவகம் செய்கிறார்கள்!

நாங்கள் உரிமையை
எடுத்துக்கொள்ளாததால்
அவர்கள் கொடுக்க மறுக்கின்றார்கள்
காலம் தலைகீழாக மாறிவிட்டது

அந்நிய அரசுக்கெதிராக
ஆர்ப்பாட்டம் செய்கிறோம் ஆனால்
மண்ணிலே இன்னும் நாம்
அகதி மந்தைகளாக
மேய்க்கப்படுகிறோம்!


உமர் அலி முகம்மதிஸ்மாயில்


0 கருத்துக்கள்:

Post a Comment