நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, May 11, 2014

மிளகாயோ நீ? (பாடல்)



இளவோலை குருத்தாட்டம்
இலங்குகின்ற இளம்பெண்ணே!

மிளகாயோ உன் நாக்கு
சொல்லெல்லாம் உறைக்குதடி
இளகாயோ கல் மனது
கொஞ்சம் நீ எனை நோக்கு!

புடலங்காய் கழுத்தழகி
உடல் கிடந்தது வேகுதடி
சடலந்தான் ஆகுமுன்னே
ஊடல் மாறி போகாதா?

கத்தரிக்காய் கன்னமடி
சுட்டெரிக்காய் கண்களாலே
கத்தரிக்காய் நம்முறவை
காரணந்தான் நானறியேன்!

மாதுளங்காய் போன்றவளே
உன்னுளம்தான் கனியாதோ
தூதிழந்து நான் வாடும்
துன்பமும்தான் புரியாதோ?

கிழிச்சொண்டன் மாங்காயோ
உன் முகத்தின் அடிப்பாகம்
பழிச்சொற்கள் தாங்கேனே
புன்னகைதான் பூக்காதோ?

வெண்டைக்காய் விரலழகி
வெடுக்கின்று வெட்டாதே
கெண்டையோடு முகவழகி
சண்டைக்காய் முட்டாதே!
!

-உமர் அலி முகம்மதிஸ்மாயில்



0 கருத்துக்கள்:

Post a Comment