நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, May 26, 2014

சகராத்

சகராத்


வயது வாழ்க்கையுடன்
போராடிப்போராடி தேய்ந்திருந்தது
செயல்கள்
செய்வதறியாது ஓய்ந்திருந்தன!

வரண்டு சிதிலமாகியிருந்த
தோல் இயற்கையிடம்
மனிதன் எப்படியும்
தோற்றுவிடுவான் என்பதனை
துல்லியமாக புகைப்படம்
பிடித்திருக்கின்றது !

எட்டுவைத்து நடந்து திரிந்த
அவனது கால்களை
தொட்டுப்பார்க்கக்கூட அவரது
சொந்தக்கைகளால் முடியவில்லை!

அறுசுவை உண்டி உட்பட
அனைத்துமே தின்று களித்த அவனுக்கு
ஒருசுவையும் இன்றில்லை!

சொற்கள் சரத்திலிருந்து
உதிர்ந்த ஒற்றை மலர்களாக
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறுகின்றன!

ஓடவில்லை உழைக்கவில்லை
ஓய்வாக படுத்திருக்கும் இவனுக்கு
என் இப்படி வேகமாக மூச்சுவாங்குகிறது
மீதமிருப்பவற்றை விரைவாக
முடிக்கின்றாரோ?

வாழ்க்கை முழுவதும்
சந்தோசமாக இருந்த இவர்
விழியோரங்கள் என் கோடிடுகின்றன
இன்னும் வாழவேண்டும் என்றா
இல்லை பிள்ளை குட்டியை நினைத்தா
எதுவுமே புரியவில்லை!

வலுவிழந்து போனது
உடல் மட்டுமா
இல்லை இல்லை
வண்ண வண்ண எண்ணங்களுடன்
வட்டமிட்டுவந்த உளமும்தான்!

பெற்ற பிள்ளைகள்
அலாஹ்வுக்குப் பயந்து
திருமறை ஓதி ஊதுகின்றார்
பேரப்பிள்ளைகள்
அப்பாவுக்குப் பயந்து
ஏனோதானோ என்று
திருமறையை ஓதுகின்றார்கள்!

குடித்து கொப்பளித்து
மடக்குகளை மிடர் மிடராய்
விழுங்கிய தொண்டை
கரண்டிகளால் பருக்கப்பட்ட
சொட்டுத் தண்ணீரைக்கூட
விழுங்க முடியாமல்
கடைவாய் வழியே
வழியவிடுகிறது!

மக்கத்து தண்ணீரும்
சத்துள்ள பால்களும்
துளிகளாவே கொடுக்கின்றார்கள்
பிறந்ததுமுதல்
உண்டுகொண்டும்
குடித்துக்கொண்டும்தான் இருக்கின்றான்
இதனை முடித்துக்கொள்ள
அவன் விரும்பினாலும்
அவர்கள் விட்டபாடில்லை!

சின்னக் காரணங்களால்
தூரப்போன உறவுக்காரர்கள்
கிட்ட வந்து தலைமாட்டில்
இதுநாளும் சொல்லாத
உறவு முறைகளைக்கூறி
நெற்றியைத்தொட்டும்
கரங்களைப் பற்றியும்
அழைக்கிறார்கள்
பதில்கூறமுடியாமல்
நீட்டி நிமிர்ந்து
சர்வமும் அடங்கி
படுத்திருக்கிறான் அவன்!

என்னைத் தெரிகிறதா
என்று அவர்கள் கேட்கும்
குருட்டுக் கேள்விக்கு
அவர் எங்கனம் பதிலளிப்பார்

அவரோ உயிர்வாங்குபவரின்
உருவத்தையல்லவா
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்!

அழுது அழுது
உறவினர் அனைவரும் ஓய்ந்திருக்க
கடையில் வாங்கிவந்த ஊதுபத்தி மட்டும்
தான் எரிய முடியாதை எண்ணி
தொடர்ந்து புகைந்துகொண்டிருந்தது!

வெள்ளைச் சீலைகள்
கொடிக்கம்புகள்
நீளப்பலகைகள் எல்லாம்
கோடியில் கும்மாளமிட்டுக்கொண்டிருக்கின்றன
அவனுடன்செர்ந்து தாமும்
புதைக்கப்படப்போவது தெரியாமல்!

குறிப்பு:
சகராத்- மரணத்தின் முன்னான வாழ்வின் இறுதிக்கட்டம்
மக்கத்து தண்ணீர்-சம்சம் என்று மக்காவில் ஒரு வற்றாத கிணறு உண்டு,அந்த கிணற்றுநீரை ஹஜ் பயணம் செல்பவர்கள் கொண்டு வருவார்கள்.

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
26 may 2014

0 கருத்துக்கள்:

Post a Comment