நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, May 13, 2014

ஓதப்பள்ளியும் ஒஸ்தாதும்!












ஓதப்பள்ளியும் ஒஸ்தாதும்!
தைக்கா பள்ளி எல்லைக்குள்ளே
சோக்கா ஒரு ஓரத்திலே
கட்டிருக்கும் ஒலையால
ஒரு ஓதப்பள்ளி

ஓடியாடித்திரியும் வயது
பிள்ளை ஒழுங்கா
பேச தெரிந்த பிறகு



நல்ல நாள் பார்த்து
வெள்ளச் சாரனோட
குல்லா தொப்பி போட்டு
வாப்பா கூட்டிச்செல்வார்

ஆள நல்லா கவனியுங்க
அடங்காட்டி கண்ணை
மட்டும் விட்டு விட்டு
நல்லா அடிச்சி திருத்துங்க
தோல உரிச்சி உப்புவைங்க

வீட்டிலேயே தொட்டிடாத
வாப்பா ஆலிமிடம்
அமானிதம் கொடுப்பாரு!

சம வயதுப்பிள்ளைகள்
பொதுவேலி நண்பர்கள்
எல்லாரும் இருந்து கொண்டு
இரைந்தே ஓதுவார்கள்
இடைக்கிடை குசுகுசுப்பு
கள்ளமாய் சிரித்து கிளுகிளுப்பு !

பாதி விரித்த பன்பாயில்
ஓதி முடித்த "ஆலிமு"
பவிசாய் இருந்து பாடங்கேட்பார்
கண்ணும் காதும் கூர்மையாக!

பக்கத்தில்
பிரம்பில் ஒருகை பட்டிருக்க
எதிரே "குர்ஆனில்"
மறுகை தொட்டிருக்கும்!

பிழையாய் மொழிய
ஒரிளுவை தொடையில்
சுளீரெங்கும்
எழுந்து ஓட முடியாது
திருத்தி ஒதும்வரை வரை
முடிவில்லை!

பாடங்கொடுத்து முடிந்தவுடன்
பழைய இடத்தில் போயிருப்போம்
பழைய இடம் பறிபோனால்
படையெடுத்து போர்நடக்கும் !

கட்டிப்புரளும் வேளையிலே
நீட்டப்பிரம்பு தொட்டுவிடும்
தோப்புக்கரணம் போடவைத்து
முட்டுக்காலில் நிர்கவைப்பார்

சங்கிலித் தொங்கல்
சரியா தண்டனை
தொங்கலை விட்டால்
பிரம்படி தொடுமுனை !

தண்டனை முடிந்து திரும்புகையில்
சாடை சொன்னவன் யாரென்று
அண்டை அயலவ நண்பர்
கண்சாடையால் குறி சொல்ல

தலையை ஆட்டிக்கறுவிக்கொண்டு
போகும் வழியில் தருகிறேன்
பல்லைக்கடித்து பழிதீர்க்க
விரலால் கவனம் காட்டிடுவான்!

கலிமா ,சட்டம் மனனத்தில்
ஒப்புவிக்க ஒருநாள் தனியா
தொழுகை விளக்கம்
செப்புவிக்க ஞாயிறும் சனியும்

வியாழனும் வெள்ளியும்
பள்ளிக்கு விடுமுறை
சனியும் ஞாயிறும்
இரு நேரப்பள்ளி !

ஓதலுடன் ஒழுக்கமும் மார்க்க
நடைமுறை விளக்கமும்
அடிப்படையாக எடுத்து சொல்வார்
எங்கள் ஆலிமு!

நாக்குத்திருந்தாத நண்பனிடம் ஆலிமு
வசம்பு வாங்கி மெல்லச்சொல்வார்
திக்கு வாய் நண்பனிடம்
திரும்ப திரும்ப ஓதச்சொல்வார்!

புற்கள் பிடுங்கி மணல்
கூட்டிப் பெருக்கி சுற்றுப்புறமும்
சுத்தமாக்க தனியாக
ஒதுக்கப்பட்ட ஒருநாள்
அன்று மூன்றாம் பெருநாள்!

ஆலிமு வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
எங்களுக்கு யுக கால
சந்தோசம் சத்தமாய் கும்மாளம்!

கதைக்கிறாள் பிடிப்பவன்
கடதாசியில் எழுதிய
பெயர்களை கடைசியாய்
அவரிடம் கொடுக்கும் போது

எண்ணி எண்ணி கொடுப்பார்
பிரம்படியாக ஏற்கனவே
சொன்னால் போல
சின்னவருக்கு சலுகை
பெரியவர்க்கு பூசை!

"றைகாப்பலகை" வைத்துத்தான்
குர் ஆன் விரித்து ஓதிடுவோம்
மடியில் வைத்து ஓதுவது
நல்லதில்லை புனிதப் பொருள்
பாவம் கிடைக்கும் என்று சொல்வார்கள்!

கிழிந்த குர் ஆன் துண்டுகளை
செத்தை வேலியில் சொருகிடுவோம்
நலிந்த குரான் மட்டைகளை
அண்டை போட்டு ஓட்டிடுவோம் !

மாதம் முடிய "மாத்தய காசு "
ஓதி முடிந்தால் ஒருதொகை பரிசு
மௌலூது ஓத மகிரிக்கு போகணும்
முன் வரிசையில் சுபகும் தொழுகனும்!

இடை வேளை கிடையாது
இடையிலே வரும் வழியில்
கடையிலே வாங்கி வந்த
புளியம் பழமும் உப்பும்

கற்கண்டு சர்க்கரை ,எள்ளுருண்டை
இறுங்குப்பொரி ,புளுட்டோ டொபி
வீரப்பழமும் கூளாம் பழமும்
கறுவாப்பட்டை, வீட்டில் இருந்து
சுட்டுக்கொண்டு போன
சின்னப் பலகாரம் வெம்பினமாங்கா
இதுபோல
இன்னும்பலவே எங்களது சிற்றுண்டி !

கிள்ளிக்கிள்ளி பகிர்ந்துண்போம்
துள்ளித்துள்ளி மகிழ்ந்திருந்தோம்!

ஓதப்பள்ளியை எண்ணி
நினைக்கையில் இன்று !
துள்ளிக்குதிக்கும் மனது மீண்டும்
அள்ளிப்பருகுது அதன் நினைவை!
................................................................

குறிப்பு:

  • ஓதப்பள்ளி - அல்குரான் ஆரம்பத்தில் கற்பிக்கும் ஆரம்ப கல்விக்கூடம்.
  • ஆலிமு - ஓதிக்கொடுப்பவர் /ஒஸ்தாது.
  • றைகாப்பலகை - குரானை விரித்துவைக்க மரத்தினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட stand.
  • வசம்பு - ஒரு மூலிகை நாக்குத் திருந்துவதற்காக முன்னர் பயன்படுத்துவார்கள்,விருவிருக்கும் தன்மையுடையது.
  • அமானிதம் - பொறுப்பு.
  • கலிமா - இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை கூறும் வாசகங்கள்.


உமர் அலி முகம்மதிஸ்மாயில்


0 கருத்துக்கள்:

Post a Comment