நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, May 12, 2014

சருவதேச தாதியர் தினம்-12 05 2014














Today International Nurses Day. May 12th
I'm Dedicating My Words To All Nurses Who Caring The Sicked Persons All Over The World.

வலியோடு வந்தோரை
வலிய வந்து
வரவேற்று இன் மொழியாலே
பாதி வலி பறக்க வைப்பார்!

ரணத்தோடு வருவோரை
நற்குணத்தாலே அரவணைப்பார்
பிணத்தோடு போராடி
நடமாடும் நிலை செய்வார்!



தன்பசி பாராது நோயாளி
யின்பசி போக்கிடுவார்
மனதுக்குள் பூகம்பம் வெடித்தாலும்
முகத்திலே புன்னகைதான் பூத்திருக்கும்!

குழந்தையோடிணைந்து
குழந்தையாய் பிணைந்து
கொஞ்சிக்குலவுவார்
கெஞ்சிக் கெஞ்சியே மருந்தும் புகட்டுவார்

சீழ் குருதி அளைந்து
நாள் சிரங்கை களைவார்
ஆளையும்தான் மீள் நிலைக்கு
மெதுவாக மாற்றுவார்

முகஞ்சுளித்து பார்ப்பதில்லை
புன்னகைதான் பூத்திருக்கும்
அகம் சோர்ந்து போகையிலே
தானாக கண்ணிழுக்கும்

ஆராய்வார் மக்களிடம்
அழியாத பேராய்வார்
அறியாத விடயங்கள்
புரியவைத்து சந்தேகம்
சிக்கல்கள் தெளியவைப்பார்!

தொல்லை என்று தரும் சிலரை
சொல்லாலே மசிய வைப்பார்
இல்லையென்று சொல்லாது
இனிதாக புரிய வைப்பார்

துணைநாடி வந்தோரின்
பிணியோடி போய்விடவே
உபகாரம் பலசெய்து
உள்ளத்தில் இடம்பிடிப்பார்!

உறவுகளை வரவேற்று
உண்மை நிலை உரைத்திடுவார்
இது துறவு நிலை தொழிலென்று
முன்னோர்கள் சொல்லி வைத்தார்!

ஊழியம் அளவுக்கு அவர்
ஊதியம் போதாது
உண்டியல் போலிருக்கும் தாதி
உள்ளத்தில் உவகைதான்
மீதமாய் குடியிருக்கும்!

வாதிடுவார் குழுவுடனே
வம்பல்ல வீம்புமல்ல
ஓதிடுவார் சத்தியத்தை
அன்புப் போரிடுவார் பிழைக்கெதிராய்
அறவழியில் அனைவரும்
புரியும் வகையில் !

உத்தரவு இடுவோருக்கு
இடுக்கண்கள் தெரிவதில்லை
தாதிக்கு ஆதரவு சொல்லாலும்
கொடுப்பதில்லை!

சந்திரனும் சூரியனும்
வந்து வந்து போவதுபோல்
வந்திடுவார் பணி முடிந்து
தங்குமிடம் போய்விடுவார்!

உண்மைத் தாதியம் உயர்வான
ஊழியம்
நன்மை செய்திட இறை
கொடுத்த சந்தர்ப்பம்!


இன்றைய தாதிய தினத்தில் எனது சக தாதிகளுக்கும், உலகில் உள்ள தாதியர்களுக்கும் எனது வரிகள் சமர்ப்பணமாகட்டும்


உமர் அலி முகம்மதிஸ்மாயில்


1 கருத்துக்கள்:

  1. அருமை.. மிக மிக அருமை

    ReplyDelete