நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, May 3, 2014

எழுத்தாணிப்பூண்டு




எழுத்தாணிப்பூண்டு-Launaea sarmentosa


சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்த இது இலங்கையின் கிழக்கு கரையோரங்களில் கடற்கரையை அண்டி படர்கின்ற ஒரு படரி,இணைக்கவர் முறையில் முனைகளை விட்டு படரும். முனை முடிச்சுக்கள் நிலத்தில் வேரூன்றி ,நிலத்தின் கீழாக கிடையாக நீண்ட மெல்லிய உருளை வடிவமான வேர்களை விட்டு வளரும்.இந்த தாவரத்தின் பூக்கள் பிரகாசமான மஞ்சள் நிறமானவை.
நிந்தவூர் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியின்போது,வலை இழுத்த அங்கத்தவர்களுக்கும் ,கறிக்காக வலை இழுப்பவர்களுக்கும் கறிக்கு போதுமான அளவு சிறிய மீன்களை தோணி வலை உரிமையாளர்கள் கைகளால் அள்ளி பகிர்ந்தளிப்பார்கள்,
பொலிதீன்/சொப்பிங் பைகள் (polythene shopping bags) அறிமுகமாகி அதீத பாவனைக்கு வருவதற்கு முற்பட்ட காலத்தில் இந்த தாவரத்தின் நீண்ட வேர்ப்பகுதியை நிலத்தில் இருந்து தோண்டி எடுத்து அதில் மீன்களை செவுளிநூடாக கோர்த்து கோர்வையாக்கி கையில் தூக்கிக்கொண்டு செல்வார்கள்,சிலர் துவிச்சக்கர வண்டியின் கைபிடியில் தொங்க விட்டுச்செல்வார்கள்,இவ்வாறு மீன் கோர்வையாக்க பயன்படுத்தப்படும்பொது இந்த வேர் "கொடி"என்று அழைக்கப்படும்.
கடற்கரையில் அதிக மீன்பிடி நடைபெறும் காலங்களில் ஊரெங்கும் இந்த மீன் கோர்வை தென்படும்.வலை இழுக்கச்செல்லும் சில சிறுவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் பல கோர்வைக்கொடிகளை வளையமாக சுருட்டி தமது காரற்சட்டைப்பக்கட்டுகளில் வைத்திருப்பார்கள்.
மீன் பகிரப்படும்போது கொடி இல்லாதவர்களுக்கும்,கொடியில் மீன் கோருக்கத் தெரியாதவர்களுக்கும் கொடியை கொடுத்துவிட்டு/மீனை கொடியில் கோருத்துக்கொடுத்துவிட்டு பகரமாக ஒன்று அல்லது இரண்டு மீன்களை பெற்றுக்கொள்வார்கள்,(மீனை அதன் சொண்டுக்கு கீழே உள்ள ஒரு சிறிய இடைவெளியினூடாக அழகாக கோர்ப்பார்கள்) இவ்வாறு கோர்க்கப்பட்ட மீன் கோர்வை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இளம் பனை ஓலைகளின் முற்றாத ஈர்க்குகளும் கொடியாக பயன்படுத்தப்படுவதுண்டு.
தற்போது அருகிவிட்ட இப்பூண்டு இப்போதெல்லாம் அதிகம் எமதூர் கடற்கரையில் தென்படுவதில்லை!மீன்கள் சொப்பின்க் பைகளிலேயே கொண்டு செல்லப்படுகின்றன.

0 கருத்துக்கள்:

Post a Comment