நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, May 4, 2014

காவல் பரண்!




காட்டோர வட்டைக்குள்ள 
தனி முறுகம் வந்து முதிர் கொடல
கருதெல்லாம் முட்டி 
முறிக்குதாம் சேதமிளைக்குதாம்!

சிட்டுக்குருவியும்
பச்சைக்கிளியும் பல
பாட்டம் பாட்டமா
பறந்து வந்து
பதறு இல்லா விளைகதிர்
பார்த்து
கொறித்து தள்ளுவதை
தடுத்தி நிறுத்தி
துரத்த வேணும்

ஒத்தயானை வந்து
காப்புக்கட்டு கடந்தேறி
ஓரத்துப் பயிரெல்லாம்
சப்பித்துப்பிடாம

இராப்பகலா கண்விழித்து
வெடில் வெடித்து
கூக்குரலால் குருவி விரட்டி
பந்தம் கொளுத்தி பயிர் காக்க

காட்டுக்கம்பு வெட்டி
பனமட்டத்தட்டி கட்டி
வீட்டுக்கிடுகு வேய்ந்து
வெயில் பார்த்து
வரப்பு மூலையிலே
வடிவாக கட்டுவானே
காவல் பரண்!

காற்று ஊடறுக்கும்
குளிரும் துன்புறுத்தும்
இருட்டு துணையிருக்கும்
மின்மினி பளபளக்கும் !

உரிமட்டை புகைவைத்து
உரிக்கின்ற நுளம்புகளை
தூரவைத்து கரிக்கின்ற
கண்களோடு காத்திருப்பான்

தட்டத்தனியே இருந்து
தன்னாசி போல நிண்டு
தனக்குள்ளே பேசிக்கிட்டு
தன்விதிய நொந்துக்கிட்டு

பட்டைச் சொறேடுத்து
பசியாறிக்கொள்வான்
பூவலில் நீர் மொண்டு
ருசியோடு குடிப்பான்
காட்டோர வயல்காரன் !

ராக்காவல் கடுங்காவல்
டோச்சிருக்கும் ஒரு கையில்
ஓய்ச்சல் ஒழிவின்றி
விழித்திருப்பான் தனிமையில் !

மூணாஞ்சாமம் விடிவெள்ளி
முளைக்கும் முன்னே
ஓணான் தலையாட்டுவத போல்
விழுந்து விழுந்து நிறுப்பான்
இடையில்
மருண்டு மருண்டு விழிப்பான் !

சரசரன்னு சத்தம் கேட்க
இருட்டை ஒளியால்
இரண்டாய்ப்பிளந்து
இரண்டடி வைத்து
சத்தம் வந்த பக்கம்
வரம்பில் நடப்பான்

குறைக்கொள்ளிக்கட்டையில்
வெடி கொளுத்தி
அதில் ஒரு பீடியும் மூட்டி
முறுகமோ யானையோ
சரியாக அறியாது
முணுமுணுப்போடு
முன்னேறிப்போவான்!

புலுபுலுண்ணு விடிய
பயிர்ப்பக்கம் போவான்
புலனாகும் சேதம் கண்டு
மனதுபுண்ணாகி சாவான் !

தூசணம் தெரியாத
பாசையும் புரியாத
தூரத்தே இருக்கும்
மிருகத்தை
ஏசி முடிப்பான்
வார்த்தையால்
வசை பாடி முடிப்பான்!

கண் வெந்து
மனம் நொந்து
வரும் வழியில்
வாய்க்கால் வரப்பு
வள்ளலாக வளர்த்திருக்கும்
வட்டைப் பொன்னான்காணி
நுனி கொய்து மடிக்குள்ளே
நிரப்பி வரும்போது

வடிச்சல் வாய்க்காலில்
புதிசா சின
வெடிச்ச குறட்ட பனையான்
குட்டி குடும்பத்தோட
குறுக்குமறுக்குமோடும்

பரண் முகட்டில் சொருகிய
ஓட்டை அத்தாங்கால்
ஒரு கைபிடித்துக்கொண்டு
கறியோடு வீடடைவான்
வயல்காரன்!

ஓதாம படிக்காம
ஓடித்திரியும்
ஒத்த மகனைப்பார்த்து
படிடா மகனே படிடா
வாப்பா போல நீ
காவலுக்கு போகணுமா
கண்விழித்து சாகணுமா?

வினாவாலே
உழுதிடுவான் கல்விப்பயிர்செய்ய
பிள்ளையின்
மூளைக்குள்ளே
காலையிலே முளை விதைப்பான்!

காப்புக்கட்டு- வயல்பக்கம் வாய்க்கால் வரம்பு,சாதாரண வரம்பை விட தடிப்பமானது,இலகுவில் உடையாத வண்ணம் உறுதியாக அமைக்கப்பட்டிருக்கும்.
முறுகம்-காட்டுப்பன்றி
தன்னாசி-சன்னியாசி
பூவல்-வயலில் இருக்கும் ஒரு சிறு மடு,நீர் அள்ளி பயன்படுத்துவார்கள்.
குறட்டை பனையான்- சிறு மீனினம்
பொன்னான்காணி-ஒரு கீரை வகை-இரும்புச்சத்துள்ளது.

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 May 4th

0 கருத்துக்கள்:

Post a Comment