நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, May 2, 2014

நெகிழிகள்





1-நெகிழிகள்

----------------
பன் பைகள் மலையேற
மண் குடங்கள் மடிந்ததடா !

மர தளபாடமெல்லாம்
மூலைக்குள் முடங்க
பளபளக்கும் புது பொருளெல்லாம்
உலகினில் குவிந்ததடா!

உலோகத்து சாமான்கள்
ஊரு விட்டு வெளியேற
உருகுகின்ற சாமான்கள்
ஊருக்குள் குடியேறியதடா!

தினமும் உருவாகும் புதுக்குப்பை
உனக்கும் தேவையாகும் புதுப்புதுப்பை!

கடலோரம் அலைக்காட்சி இல்லை
அலைகளுக்குப் பதிலாய் அலைகின்ற
கடல் குதித்த நெகிழிகள் தொல்லை!

கழிப்பதற்கு இலகு அது
அழிப்பதுதான் சுலபமில்லை!

பிறக்கும்போது
சாகா வரம்பெற்ற சாத்தான்
உலகின் புற அழகை
சாகவைக்கும் கூத்தான்!

நந்தவனம் மாறியது
நாறிடும் பிணக்காடாய்!
இந்த மனம் பதறியது
அலறிடும் நலக்கேட்டால் !

2-நெகிழிகள்!
........................

சிலுக்கு சிலுக்கு சிங்காரி
சிணுங்கி சிணுங்கிக் கொல்லும்
கொலைகாரி!

நெளிஞ்சி கெளிஞ்சி
நடக்கிறா
வழிஞ்சி வழிஞ்சி
சிரிக்கிறா

பாரமில்லா பாதகி
தூரமாக்கி வையி நீ!

ஓரங்கட்ட தவறினா உன்ன
பாடை கட்டி போடுவா !

ஆறு குளம் கடலெலாம்
ஆட்சி பிடிக்க பார்க்கிறா
ஆடு மாடு கோழியும்
ஆட்டித்தான் படைக்கிறா!

வாழ இலை வெருட்டிட்டா
சோற்றுப்பட்டை துரத்திட்டா!

பேரு இல்லா நோய்களும்
பெயரறியா ஆவியும்
ஊரெல்லாம் கொடுக்கிறா
உயர் உபத்திரவம் செய்கிறா!

ஊருக்குழாய் மறிக்கிறா
நீரடைப்பைக் கூட்டுறா
ஊர்நாறிப் போகையில்
மிதந்துவந்து பார்க்கிறா

மீனெல்லாம் கொல்லுறா
அலைந்து வந்து
நானல்ல என்கிறா!

தட்டிப்பணிய வையடா தம்பி
எட்டியவளை நீ உதையடா எம்பி!

polythene-நெகிழிகள் என்ற தலைப்பில் கவிதைச்சங்கமத்தின் போட்டிக்காக நான் முன்னர் எழுதிய இரு வேறு கவிதைகள்

உமர் அலி முகம்மதிஸ்மாயில் .
2014 may 2nd

0 கருத்துக்கள்:

Post a Comment