நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 30, 2014

சருகின் காவியம்!





சருகின் காவியம்!




மானம் மறந்து
மரம் ஆடை களைந்து
உறுஞ்சி எடுத்த
கடனை சருகாக திரும்ப
கொடுக்கிறது மண்ணிற்கு !

நாணமற்ற நாமோ
மதியிழந்து நிற்கிறோம்!

மரமுதிர் சருகு எரிகிறது
கருகி புகைகிறது
வளியும் கெடுகிறது நச்சு
வாய்வும் வந்து சேர்கிறது!

வாலைக்குமரியாம்
நீலவானம்
கோலம் குறைந்து
ஓலம் இடும் ஒலி என்
ஊனச்செவிகளை ஊடறுக்கிறது!

சருகு மண் புதைய
மெல்ல
உருக்குலையும்
நிலமும் அதனால்
நல்ல வளமடையும் !

நீர் பற்றிக்கொள்ளும் மண்
உன் ஊர் போற்றிக்காக்கும்!

சேதமான மண் திருத்தும்
சிறப்பான சிற்பியடா குப்பை
சில காலம் அது எடுத்து
செதுக்குமடா மண்ணை !

புதைந்தவை மண்ணில் மறைந்தாலும்
சிதைந்து கண்ணில் தெரியா
கனியமாகி நீ உண்ண இனிய கனிதரும்
கண் முன்னே அருங்காட்சி ஓடும் !

மனிதன் மேலால் வலிந்து
மண்ணுளுவான்
சிதைசருகு தரையை தானாய்
நெளிந்து தன்னால் உழுமே
மண்ணுழுவான்!

தன்னாலே தருகின்ற தரு பெருகி
தரையோடு உறவாடும்
பசுவுண்ண பசும்புல் வளரும்
புல்லுண் பசுமடியில் பாலோங்கும் !

ஆதலால் நீ
சருகினை எரிக்காதே
மருங்குகளில் எறியாதே!

குழி தோண்டிப்புதை
வளியோடும் மண்செய்
இழையோட்டம் நன்செய்
இயற்கையை நீ பேணு
இறைவனை அதில் காணு!

இன்று நீ காணும்
காட்சி மிச்சம் வை
நாளை உன்சந்ததி
காண எச்சம் வை

Umar ali mohmed ismail
2014 04 30

0 கருத்துக்கள்:

Post a Comment