நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, April 13, 2014

பிரசவப்பிரளயம்!
















அலைபோல
வந்து வந்து போன நோவு
விட்டு விட்டு வந்தது
இப்போ இடைவிடாமல்
வலிக்குது
தொடை எலும்பையும்
முறிக்குது

சிறுகச்சிறுக வந்தது
பெருகிக்கொண்டே போகுது
சிறு நீரு போகணும்
போனா ஒரு நீரும் போகல!

இடுப்புத்தெறிக்குது
எலும்பும் நொறுங்கி முறியுது!
படுக்க முடியல
எழும்பி நடக்கவும் தோணல

என்னன்று சொல்வது
எப்படிச்சொல்வது
இடுப்பை முறுக்கி
உடுப்பை புளிவதுபோல்
இரும்பைக் காய்ச்சி
உருக்கி வளைப்பதுபோல்

தன்னை அறியா ஓலம்
என்னை மீறி என்வாய் போடும்
பந்தயக் குதிரை போல
எந்தன் இதயமும் ஓடும் !

வியர்வை முத்துக்கள்
என்மேல் இரண்டாம்
மாலையாய் சேரும்
அயர்வின் மடியில்
என் உடல் சோரும்!

முக்கி முக்கி நான்
சொக்கியே போனேன்
ஆழமாய் மூச்செடுத்தால் மட்டும்
கொஞ்சம் சுகமாக
இருக்குதுங்க!

பக்கத்தில் நிண்று கொன்டு
பரபரப்பாய் பார்ப்பவர்கள்
முக்கு முக்கு என்று
முடியாததை சொல்வார்கள்
அந்தகனை விழித்து
விந்தை செய்யச்
சொல்லுவது போல் !

பிளந்தெடுங்கள்
பிய்த்தெடுங்கள்
பிதற்றல் வார்த்தைகள்
பேற்றின் முன்னே
என் வாயில் பிறக்கும்!

தசைக்கும் வலிக்கும்
தர்மப்போர்
விசைக்கும் சிசு தலைக்கும்
மர்மப்போர் !

பனிக்குடம் பணி முடித்து
பவ்வியமாய் வெளியே வர
இனியெப்படி இங்கிருப்பேன்
தலை நீட்டிப்பார்க்க
எத்தனிக்கும் என்குழந்தை

தசைத்தலையணையில்
தானாக வழுக்கிக்கொண்டு
விசைப்படகாய் வரத்துடிக்கும்
சிசுவின் தலை

புகுந்து வர தெரியாதே
தவழ்ந்தும் வராதே அது
உடையாமல் இடை பெருத்தன்றோ
இடம்தர வேண்டும்!

பிரசவக் கட்டில்
என் பிடிதாங்க
பின் வாங்கும்
உரத்துப் பிடிக்கையில்
எனக்கு உறுதுணை
போலிருக்கும்!

முக்கிப்பெறும்வரை
மூச்செடுக்கா என்பிள்ளை
வழுக்கி வந்ததுமே
அழுகை முனகலுடன்
சுதந்திரமாய் சுவாசிக்கும்!

அவனழுகை
தாலாட்டாய் அசதியிலே
எனக்கது கேட்குது
ஒருபாட்டாய்!

மரணத்தின் வாசலுக்கு
கால்நடையாய் சென்று
நக்கரித்து திரும்பி வந்தவள்
நான்
கொக்கரிக்க கோழியல்ல!

இதுவரை பொய்சொல்லா
நான் எனக்குள் ஒரு
சபதம் செய்தேன் ...ஆம்
இனியோர் பிள்ளை நான்
கருவுற மாட்டேன்
எனக்கினி தாங்கவும்
ஏலாதென்றே!

உயிருள்ள குழந்தை
உருப்படியாய்
ஊருவர உம்மா படுகின்ற
உருக்கமான கதையிதுவே
சுருக்கமாய் சொல்லி விட்டேன்
தாயல்ல நான்
தனயன் என்பதாலே
தவறிரிருந்தால் மன்னியுங்க
தாய்மாரே சகோதரியே !

உமர் அலி முஹம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment