நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, April 1, 2014

அழையாத விருந்தாளி

 

அழையாத விருந்தாளி






வீட்டு முகட்டிலே
கூட்டிலிருப்பார்
கூப்பிட்டிடாமலே
உள்ளே நுழைவார்!

அடுக்களை இடுக்கிலே
ஒழித்துக்கிடப்பர்
படுக்கையில் ஆட்கள்
விழுந்திட்ட பின்ன்னால்
சாளரம் வழியே
களவிலே வருவார்!

மூக்கினால் முட்டி
உலைமூடி திறப்பார்
கறி ஆக்கிய சட்டியுள்
தலை ஒட்டி சுவைப்பார்!

உப்பையும் தின்பார்
அப்பமும் உண்பார்
எப்பவும் போல
பூனையக்கண்டால்
தப்பியோடுவார்
கீச்சிட்டு கத்துவார்

இடுக்கு முடுக்கின்
இடையாலே புகுந்து
தட்டு முட்டிலே
முட்டி மோதுவார்!

சோடியாய் வந்து
விளயாடித்திரிவார்
கோடிப்பக்கமும்
ஓடிப்போய் பார்ப்பார்!

மீசையிருக்கும் ஆனால்
தாடிதான் இல்லை
ஓசை செய்யா இவர்
நுழையாத வீடேதும் இல்லே!

பல்லைக்கூராக்க
எல்லாமே கடிப்பார்
நெல்லுச்சாக்கையும்
கொறித்து முடிப்பார்!

சீலையை மென்று
நூலைப்போல் செய்வார்
ஓலையைக் கொண்டு
ஒரு மஞ்சமும் செய்வார் !

சுட்ட கருவாடு
கூப்பிட்டெடுக்கும்
மாட்டிப்பிடிக்கும்
ஆப்பிலிறுக்கும்!

சுவையான நஞ்சை
தெரியாமல் உண்டு
விருந்தினால் மடியும்
எலியாரும் உண்டு!

கூட்டுக்குள் புகுந்து
மாட்டிக்கொள்வதும்
ஓட்டை தேடி உள்ளே
வட்டமடிப்பதும்
நடப்பதும் உண்டு!

உமர் அலி முகம்மதிஸ் மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment