நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, April 8, 2014

முறிந்த கதிரை





முறிந்த கதிரை!










என் வயோதிக காலத்தில்
மூட்டைப்பூச்சிகளுக்கு
நான் முதுகிலே
அடைக்கலம் கொடுப்பேன்
இன்றோ
முறிந்த காலுடன் நான்
ஒதுங்கியே
மூலையில் கிடப்பேன்!

பெருநாள் தினங்களில்
என் உரிமையாளர் குளிப்பார்
முதல் நாட்களில்
நாங்களும் குளிப்போம்!

வீட்டுச்சிறுவர்கள்
விளையாட்டாய் ஊத்தை தேய்க்க
குப்பிஓடுகள் அலங்கோலமாய்
என் முகத்தைக் கிழிக்கும் !

அதிகநேரம் குளிப்பதால்
எனக்கொன்றும்
தடிமல் வரப்போவதில்லை!

சின்னத்தம்பியின்
கிறுக்கு வேலைகள்
அப்பப்போ தலையை
கிறுகிறுக்க வைக்கும்!

கத்தி கொண்டு கீறுவான் என்மேல்
தீயைப்பற்றவத்து போடுவான்!
மெழுகை உருக்கி ஊற்றுவான்
என் அழுகை கண்டு ஓடுவான்!

மூத்த மொதலாளி
என்னிடம் அதிகம் பிரியம்
என்னிடமே அவர் அதிகம்
வந்து கூட நேரம் இருப்பார் !

ஒரு நாள் இந்த ஊரு எம்பி
இங்கு வந்தார்
என்னைத்தான் தூக்கிபோட்டு
அவரை இருத்தினார்கள்!
எனது கைகளை
அவர் தடவிப்பார்த்தார்
பற்றிப்பிடித்தார்
அன்று என் முதலாளி மட்டுமல்ல
நானும் மகிழ்ந்திருந்தேன்!

எங்க வீட்டு விசேசத்தில்
என் உறவினர்கள் பலர்
அயல் வீடுகளில் இருந்து
சிறுவர்களின் தலையிலே
தலைகீழாய் சவாரி செய்து
வந்திறங்குவார்கள்
அருகே செல்லாமலேயே
நான் கண்களால்
குசலம் விசாரித்துக்கொள்வேன்!

ஆரம்பத்தில் எங்கள் தோல்
பிரம்பாலானது
பிறகு சீனாக்காரனின்
இளையாலானது

சிலர் எங்களைக் காக்க
பூப்போட்ட சட்டையும் சூடுவார்கள்
சிலர் எங்களின் மேல்
பஞ்சு மெத்தையையும் போடுவார்கள்!

வேலைக்காரியிடம்
முதலாளியம்மா என்னை
பராமரிக்கும்படி தினமும்
நச்சரித்துக்கொண்டே இருப்பார்
சோம்பல் கொண்ட அவளோ
எரிச்சல் கொண்ட
தூசி மட்டுமே விடுவாள்
கீழாலே சிலந்திகள் வீடுகட்டி
ஒட்டறையால் ஒரு கோட்டையே
கட்டிவிடும்!
என்னாலே
அவள் வேலையும் போய்விட்டது!

ஐயாவுக்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட
தகராறில் ஒருநாள் என்னை
ஐயா என்னை அம்மாவின் மேல்
தூக்கி எறிந்தார்
அம்மணி அந்தப்பக்கம் விலக
நான் அப்புறம் இருந்த
செங்கல் சுவரில் விழுந்தேன்
எனது இடது கை உடைந்தது
கடவாய்ப்பல்லும் விழுந்தது.

எனக்கு முறிவு வைத்தியம்
எங்கள் வீட்டு மூத்தம்பியாலே
செய்யப்பட்டது!
ஆனால்
பல் விழுந்த இடம்
படுகுளியாகவே தெரிந்தது.

எங்கள் வீட்டு இளவரசி
நிலவு நாட்களில்
மல்லிகைப்பந்தலின் கீழே
என்னைக்கிடத்தி
என்னிலே கிடந்தது
நிலவுடன்
மௌன மொழியில்
எதையதையோ பேசுவாள்!

கதைத்த அலுப்பிலே
என்னை அப்படியே விட்டுப்போக
பனியிலே நான் கிடந்தது
நனைவேன்
காலையில்
கண்விழித்துப்பார்ப்பேன்
இரவு தனது சோகத்தைச்சொல்லி
என்னிடம் அழுத கண்ணீர்
இன்னும் காயாமல் என்மேலே
படிந்திருக்கும்!!

தந்தை வாங்கிக்கொடுத்த
பரிசினால் மகிழ்ந்த சின்னத்தம்பி
சந்தோசத்தால்
என் முதுகிலே துள்ளிக்குதிக்க
இத்துப்போய்
இன்றோ நாளையோ என்றிருந்த
எனது வயோதிப முதுகுத் தோல்கள்
வலுவிழந்து தொடர்பறுந்தன
அவனது ஒற்றைக்கால்
எனது வயிற்றைக்கிழித்துச்
சென்றது.

மூலையில் கிடந்த என்னை
இளயாம்பி இரக்கமின்றி இழுத்து வந்து
ஓசியிலே கிடைத்த
புதுக்கலண்டரை சுவரில் மாட்ட
என் கைகளின் மேல் ஏறி நின்று
சுவரிலே ஆணியை அறைந்தான்
அவன் தடுமாறி கீழே விழ
அவன்மேலே நான் கவிழ
மயங்கி விட்டேன்
கண் விழித்துப்பார்த்தேன்

கை இரண்டும் உடைந்திருந்தது
கோடியில் கிடந்தேன் அருகிலே
எனது அம்மாவும் சித்தியும்
எனைப்பார்த்து புன்னகைத்தார்கள்
பழைய பொருட்கள் அநேகம்
கிடந்தன சட்டிகள்,முட்டிகள்
தட்டுமுட்டுச்சாமான்கள்
இந்த ஊரில் "போகி"தான் இல்லையே!


உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 April 8th

0 கருத்துக்கள்:

Post a Comment