நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, April 24, 2014

விழித்துக்கொண்டே உறங்குகிறோம்!




விழித்துக்கொண்டே உறங்குகிறோம்!

விடியல்களுக்காக
விழித்திருந்து
தொண்டை கிழியக்கூவிய
கொண்டைச்சேவல்கள்
பொழுது புலருமுன்னரே
கண்ணயர்ந்து போனதா?

தேடல்கள் முற்றுப்பெற்று
முத்தெடுத்து முடியுமுன்
யாவும் அடங்கி
ஒடுங்கிபோனதா?

கோசங்களை
வித்துக்களாக விதைத்து
முளைத்ததெல்லாம்
அறுவடை ஆரம்பிக்குமுன்னே
வெறும் பதறுகளாகிவிட்டதா?

விடிவெள்ளிகளைப்பார்த்து
சந்தை நாய்கள்
குரைத்து கூப்போடுகின்றன!

முடக்குதிரைகள்
பந்தயத்துக்கு அழைக்கின்றன
மூட மரங்கொத்திகள்
தாமாகவே வாழைகளில்
மாட்டிக்கொண்டு விட்டன!

முண்டாசுகளெல்லாம்
இருந்த இடத்தில் இருந்து
இறங்கி வந்து
தோள்களிலே
சால்வையாக தொற்றிக்கொண்டதா?

உத்தரியங்கள்
அவிழ்ந்து உருத்தெரியாமல்
அழிந்தே போயினவா?

கொள்கைகளை
கொழுத்தவை விழுங்கி விட்டனவா?
தெழிவு தேவை
உங்களுக்கும் எங்களுக்கும்!

மழிக்கப்பட்ட சிரங்கள்
நம்மை மட்டந்தட்டும்போது
மழுங்கிப்போய்விட்டோமா?

மறைந்து நின்று
மல்லுக்கட்டும்
இவர்கள் மறவரல்லர்
புறமுதுகு காட்டியோடும்
சிறுவர்களே!

அப்பப்போ உச்சாக பானம்
அருந்திக்கொண்டதுபோல
அடித்தொண்டை கிழிய
புலம்புவதெல்லாம்
புதிராகவே புலப்படுகின்றது.

மந்திரப்பேச்சுக்கள்
புரியுதில்லை
அந்தரப்படவும்
தேவையில்லை

புரிய வைக்க
நீங்கள் முனையாதவரை
நீங்கள் போட்டிருக்கும்
முடிச்சுக்களை
வெடிவைத்துத்தகர்க்காமல்
புஷ்பங்களால் போர்செய்யவும்
எங்களால் முடியும்!

விடிவு விடிவு என்று
இருட்டுக்குள் எத்தனை காலம்
உழன்று கொண்டிருப்பது

அடிபணிந்தது போதும்
அடித்துகேளு
பிடித்து இழு
உன் கையில்
இருக்கவேண்டிய கனி
ஊரார்கையில் இருக்கிறது
உரிமைக்காரன் நீ
உமிழ் நீர் ஒழுக
பெருமூச்சு விடுகிறாய்.

நீ பறிக்காதவரை
அவர் கொடுக்கமாட்டார்
கேளாமல் கொடுத்தகாலம்
முடிந்து விட்டதை
நீ மறந்து விட்டாயா?

இது உனது தருணம்
குரலை உயர்த்து
அவர்கள் கூச்சலிடுவது
உன்மேலுள்ள அச்சத்தினால்
முந்னேற முன்னேற
அவர்கள் பின்னோக்கி போவார்கள்
இது நிச்சயம்!


உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 April 24

0 கருத்துக்கள்:

Post a Comment