நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, April 6, 2014

புரிந்தும் புரியாமல்.........





ஏழு வருடங்களாக சவூதி அரேபியாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் நசீருக்கு நாப்பத்தெட்டு வயது நான்கு பிள்ளைகளின் தந்தை மூத்தது இரண்டும் பெண் பிள்ளைகள் ,இரண்டும் குமராகி கல்யாணமாக காத்துக்கிடக்குதுகள். வசதி இருந்தா இரண்டுக்கும் ஒரே இரவில் கல்யாணம் செய்து வைக்கலாம். படிப்பு ஒண்டும் பெரிசாக அதுகளுக்கு ஏறல்ல அதனால வீட்டிலேயே இருக்குதுகள் வேலை வெட்டி இல்லாம.. மூணாவது மகன் ரியாஸ் பதினைந்து வயது சாதாரண தரத்தில் படிக்கிறான் நாலாவது பொம்பிளப்பிள்ள பெரியபிள்ளையாகி ஒரு வருசந்தான் முடிஞ்சிருக்கி.

ஒண்டும் இல்லாத பொண் எடுத்து தான் நசீர் உம்மா குடுத்த வளவுக்குள்ள ஒரு சைசான வீட்டைக்கட்டி வாழ்ந்து வந்தான்,கடற்கரைக்குப்போய் வலை இழுக்கிற, வயல் வேலைகளுக்கு போய் நாள் சம்பளத்துக்கு வேலை செய்யிற,இப்படித்தான் அன்றைக்கன்றைக்கு கையக்கசைக்கி ஏதோ கடன் கிடன் இல்லாம வாழ்க்கையை ஒருவாறு ஓட்டிக்கிட்டு இருந்தான்.ராகில கொஞ்சம் புத்திசாலி தினமும் பத்து இருபது என்று புரிசனுக்குத்தெரியாமபதுக்கி வச்சி ஆந்திர ஆபத்து வரும்போத அதை வெளியில எடுத்து அவளின் கைவரிசையைக்காட்டுவாள்.

மனைவி ராகிலா வின் ஆலோசனைக்கிணங்க வளவு உறுதிய புதுப்பணக்காரன்கிட்ட அடகு வைச்சி ஒண்ணரை லட்சம் காசை வாங்கிட்டு எஜென்சிக்காரனுக்கு குடுத்து மாதம் எண்ணூறு ரியால் சம்பளத்துக்கு சவூதி வந்தான்.கம்பனிச்சாப்பாடும் தங்குமிடமும் . வருவதற்கு முன் ஒவெடையிம் இருக்கி எண்டுதான் சொன்னானுகள் ஆனா இங்க வந்தப்பிறகுதான் புரிந்தது இங்க ஒவேடையுமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல என்று.

வந்து ரெண்டு வருசமாக உழைச்ச காசை மிச்சப்பிடித்து ஒருமாதிரி உறுதிய மூண்டாச்சி,அதுக்குப்பிறகு எடுத்த சம்பளம்தான் நிம்மதியான சம்பளம்.மாசத்துக்கொருமுறை கடிதம் எழுதி போட்டு சம்பளச் செக்கையும் வைச்சி அனுப்பிக்கிட்டு இருந்த சலீம் இப்பெல்லாம் வேங்கிலிருந்து வேங்கிக்கே காசை அனுப்பிடுவான்,அடிக்கடி போணும் பேசுறான்.

குடும்ப சுமையை எப்படியாவது குறைக்கணும் என்று சலீம் அகப்படும் வேலைகள் எல்லாம் செய்வான்,சவூதிகளின் கார் கழுவுவார், பிரத்தியேகமாக லீவுநாளில் யாரும் வேலைக்கு கூப்பிட்டாலும் போய் நாலு காசு சம்பாதிப்பார்,அது தவிர தினமும் வேலை முடிஞ்ச பிறகு சலீம் தான் இருக்கிற குடியிருப்பை சுற்றியிருக்கின்ற குப்பைத்தொட்டிகளில் கிடக்கின்ற பெப்சி டப்பாக்களை தெரிந்தெடுத்து சேகரித்து விற்றுவருவார்,அறுபது எழுபது டப்பா பொறுக்கினா ஒரு கிலோ தேறும்,ஒரு கிலோக்கு இலங்கைக்காசுப்படி ஒரு நூறு ரூபா. ஒருநாளைக்கி மூணு நாலு கிலோ பொறுக்குவான். இப்படியெல்லாம் உழைக்கிறது ஊரில இருக்கிற ஆக்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

”ஊர்விட்டு வந்தால் யார்வீட்டு நாயோ” என்ற கொள்கையினை தனது வறுமையை ஒழிக்க பின்பற்றுகிறான்.அனாவசியமான செலவுகள் எதுவும் இல்லை. சிகரெட்டு பிடிப்பதை விட.ஊரில வீடி குடித்தவனுக்கு இங்கே பீடி கிடைக்காததால் சிகரெட்டு குடிக்கிறான்.

அன்று வியாழக்கிழமை அப்படித்தான் டப்பாக்களை சேகரிக்கும் போது பக்கத்து கொம்பனியில் வேலை செய்யும் அடிக்கடி வீதியிலே சந்திக்கும் அயலூர் நண்பன் சாதிக்கை சந்திக்கிறான். "அசலாமு அலைக்கும்,என்ன மச்சான் சுகமா இருக்கியா? என்று சலீம் கேட்க நண்பனோ "வலைகுமுசலாம்,நல்ல சுகம் மச்சான் ,என்ன விசேஷங்கள்" என்று மறுகேள்வி கேட்கிறான்.தோழில் கிடந்த பெப்சி டப்பா சேகரிக்கும் பேக்கை கீழே இறக்கியவாறு சலீம் பக்கத்தில் இருந்த படிக்கட்டில் இருந்து கொண்டு நெற்றியில் வடிந்த வியர்வையை இடது கையால் வடித்து சுண்டு விரலால் தெறித்து விடுகின்றான்.."இப்படி இரு மச்சான் " என்று தனது வலது பக்கத்தில் இருந்த கட்டைக்காட்டுகின்றான்.

தூரத்தே தெரியும் உயர்ந்த கட்டிடங்களை வெறித்தவனாக பெருமூச்செறியும் சலீமைப்பார்த்து நண்பன் 'என்ன மச்சான் பெருமூச்சு விடுறாய் முகமெல்லாம் வாடிக்கெடக்கு,கம்பெனில பெரச்சினையா.... இல்ல வேறேதாச்சுமா? "நண்பனின் முகத்தை பார்த்தவண்ணம் கேட்கிறான். கம்பனிலே பிரச்சின ஒண்டும் இல்ல மச்சான். இது நசீர், அப்ப என்னடாப்பா... நடந்த ஒருநாளும் நீ இப்பிடி இருக்க மாட்டியே? என்று நண்பன் கேட்டதுக்கு.... உனக்குட்ட எப்படி இதச்செல்லுற என்று எனக்கி வெளங்கல மச்சான். நாம இஞ்ச படுற கஷ்டம் நமக்கும் நம்ம படைச்ச ஆண்டவனுக்கும்தான் தெரியும், பொண்டாட்டி புள்ளைகள் அதை வெளங்குதுகள் இல்லையே! ”தனது மனதில் உள்ள ஆதங்கத்தை ஒருவாறு தட்டுத்தடுமாறி ஒரே மூச்சில் வெளிப்படுத்தினார் நசீர்....

என்ன நடந்த எண்டு வெலாவாரியா சென்னத்தானே மச்சான் எனக்கும் வெளங்கும் நண்பன் அலுத்துக்கொள்கிறான், நீண்ட தொரு பேரு மூச்சை மீண்டும் வெளியாலே பிரசவித்து விட்டு நசீர் சொல்லுகிறான். போனமாதம் தான் மூத்த மகள் முன்னுக்கு கமெரா இருக்கிற மொபைல் போன் கேட்டா அப்படி இப்படி அஜெஸ் பண்ணி வாங்கிக்கொடுத்தேன் மச்சான்... ஒருமாதச் சம்பளமும் அதுக்குக்கூட ஐநூறு ரியாலும் கைமாத்துக்கு வாங்கி போட்டு வாங்கி அனுப்பினேன் மச்சான். என்ன செய்யிற பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்குதுகள் எண்டு தான் வாங்கிக் கொடுத்தேன்.... வெறுப்புடன் வார்த்தைகளை நிறுத்திய நசீரைப்பார்த்து நண்பன் "அதுக்கென்ன மச்சான் இப்ப, பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்துட்டாய் தானே, அதுகளுக்கும் தேவைதானே......? என்று கேட்கிறான்.

அது கொடுத்தாச்சி கையில செலவுக்கு காசிம் இல்ல இண்டைக்கி ஒரு நம்பர்ல இருந்து தொடந்து ஏழெட்டு மிஸ் கோல்,கஷ்டம் பொறுக்க ஏலாம ஏலாம யாரெண்டு பாப்போம் எண்டு நான் திரும்ப எடுத்தேன். ஏன்ட மகன் தான் கூட்டாளிர போன்ல இருந்து மிஸ் கோல் அடிச்சிருக்கான். நான் கதைக்கையும் "வாப்பாவா கதைக்கிற நான் தான் வாப்பா ரியாசி கதக்கன், இது ஏன்டா கூட்டாளி ரவீக்கிட போன், வாப்பா ஏன்ட வகுப்பில கொம்பியுட்டர் பாடம் படிக்கிற எல்லா புள்ளைகளும் லேப்டாப் வச்சிரிக்கானுகள் எனக்கிட்ட மட்டுந்தான் இல்ல, படிக்கிறதுக்கு அது கட்டாயம் வேணும் வாப்பா, எனக்கி லேப்டாப் வேணும் வாங்கி அனுப்புங்க வாப்பா. "மூச்சி[பிடிச்சி கதைச்சிப்போட்டு போனை வச்சிட்டான், வாப்பா எப்படி இருக்காய்?சாப்பிட்டாயா? எண்டு ஒரு வார்த்த கூட கேட்கல மச்சான்.....இளந்தாரிப்புள்ள அவன்தானே எனக்கிப்பொறகு இந்த குடும்பத்த பார்க்கணும் அத நெனச்சாத்தான் மனசில எங்கேயோ ஒரு மூலையில நோகுது மச்சான். நசீரின் கண்கள் இதைச்சொல்லும்போது கசிந்து விடுகின்றன.

நண்பன் கலங்குவதைக்கண்டு நண்பனது தோளைத்தொட்டு ,”யோசிக்காத மச்சான் எல்லாம் சரி வரும்,அவன் சின்னப்புள்ளதானே அவனுக்கு இதெல்லாம் தெரியாது வர வர பழகிடுவான் " என முறைக்காக ஆறுதல் கூறினாலும் ,அவனது நியாயமான கவலை இவனுக்கும் கவலையளிக்கின்றது.

இருவரும் சற்று அமைதியாக இருந்துவிட்டு நசீரே முதலில் மௌனத்தைக்கலைத்து ,"சரி மச்சான் பிறகு சந்திப்போம் "என மூக்கை உறுஞ்சி கண்ணீரை ருசிபார்தவனாக அப்பாலே நடக்கிறான்.
அங்கெ ஊரிலே ரியாசும் நண்பர்களும் கிழங்குக்கடையிலே சூப்புக்குடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். என்னடா ரியாஸ் லேப்டாப் அனுப்புவாரா ஓங்கு வாப்பா. ஒரு நண்பன் கேட்கிறான். அதற்கு ரியாஸ் சொல்கிறான் "என்ன மச்சான் நீ கேட்கிற நான் கேட்டா எங்கு வாப்பா கட்டாயம் அனுப்புவாரு, நான் உள்ளதும் ஒரு புள்ளதானே, என்னோடு எங்கு வாப்பாக்கு செரியான எரக்கம் தெரியுமா? "

அப்பென்ன மச்சான் இனி நாம புதுசா வார படம் எல்லாம் உடேன ஒடனே பார்க்கலாம், பேஸ்புக், இன்டெர்நெட் எல்லாம் பாக்கலாம். கெதியா அனுப்பச்சொல்லுடா. எங்கு வாப்பா வெளிநாட்டில இருந்தாரன் நான் இந்நேரம் லேப்டாப் ஓடத்தான் இருந்திருப்பேன். இன்னுமொரு நண்பன் கூறினான். வீடுசென்ற ரியாஸ் மிகவும் சந்தோசமாக காணப்பட்டான் வீட்டுக்குள்ள கேட்ட உம்மாவின் குரல் அவனை ஒருகணம் சிந்திக்க வைத்தது.,உம்மா அடுப்படியே இருந்து கொண்டு, ஏ புள்ள எத்தின தரம் ஒன்ன கூப்பிர்ற,இஞ்ச வாவன்,இந்த தேங்காயப்புளிஞ்சி தா கறி கூட்டப்போறேன். எதையோ செய்து கொண்டு அடித்தொண்ட கிழிய போனிலே கேம் விளையாடிக்கொண்டிருக்கும் மகளை பார்த்து சத்தம்போடுகிரா.

அவருக்கு எத்தின தரம் சென்னன் தேவல்லாத சாமானெல்லாம் வாங்கி அனுப்பாதீங்க எண்டு இந்த போன் மண்ணாங்கட்டி வாங்கின காசிக்கி மூவாயிரம் செங்கல்லு வாங்கிரிக்கலாம்.குமரு குட்டிக்கார நமக்கு தேவல்லாத சாமான் எல்லாம் என்னத்துக்கு,? டீயேய் வாரியா நான் வந்து அத இப்ப ஒரலுக்க போட்டு இடிக்கயா? கடைசி வசனம் கேட்ட உடனே போனில் விளையாடிக்கொண்டிருந்த மகள் உடனே சர்ரென்று எழுந்து வருகிறாள், போன் உம்மாவால் உடைக்கப்பட்டு விடும் என்ற பயத்தினால். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரியாசின் மனசுக்குள் தனது லேப்டாப் கிடைக்குமா கிடைக்காதா என்ற வினா தோன்றித தோன்றி மறையலாயிற்று அதனால் நித்திரையும் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் லேப்டாப் கனவிலே! அங்கே சவூதியில் நசீருக்கோ நித்திரை வராமல் குமருகளை எப்படி நிறைவேற்றுவது என்ற வினா மீண்டும் மீண்டும் உள்ளப்பறையில் உரக்க உரக்க எதிரொலிக்கிறது, இருட்டினை வெறித்துக்கொண்டே தூக்கத்தை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கிறார், ஏனெனில் நாளைக்காலை நாலரை மணிக்கெல்லாம் எழும்பினால்தான் வரிசையில் நின்று காலைக்கடன்களை முடித்து அஞ்சரை மணிக்கு வேலைக்கு போகலாம்.


(யாவும் கற்பனை)
உமர் அலி முகாமதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment