நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, April 5, 2014

தெரவு வெட்டல்




தெரவு வெட்டல்!










ஆடிக் கோடையிலே
நிலத்து
அடிநீரு ஆழமாய்
அடியிறங்கி போகையிலே !

புதுவளவு வாங்கி
பொம்பளப் புள்ளக்கி
புது வீடு கட்டமுன்னர்
முதன் முதலாய்
கிணறுதான் கட்டுவாங்க
கோடையில!

தம்பி ,மருமகன் மகரிக்கி
தெரவு வெட்டுற
கட்டாயம் வந்திடுங்க
வரும்போது
மறந்திடாம மண்வெட்டியும்
கொண்டாங்க!

மச்சான் வளவுக்க
ராவைக்கி திரவு வெட்டனும்
எல்லாரும் வந்திரனும்
நண்பர்களுக்கு அன்பான
வாயழைப்பு!

குடும்பத்து ஆட்களோட
அக்கம் பக்கத்தார்
மடு வெட்ட அழைப்பார்
பொம்பள
பிள்ளைகளை பெற்றவரு!

இருட்டுக்க சண்டியனாய்
சிரிச்சிக்கிட்டு பூவரசங்கிளையிலே
வெளிச்சப்பூவோடு இரைந்தபடி
இருக்கும் இரவலுக்கு வாங்கிய
"பெட்ரோமாக்ஸ்"

பிடிகளின் உச்சியில
சுண்ணாவால் புள்ளடி
தடுமாறிப்போகாமல்
அடையாளம் காண்பதற்கு!

அந்தியிலே "ஆலிமு"
நிலமெடுத்து அளந்து கட்டிய
கலம்பக்கயிறு
"கூனி"யிலே கூனாமல்
நிமிர்ந்திருக்கும்!

சருகு கூட்டி ,புல்புடிங்கி
பெருக்கி வைத்த நிலம் பிரளயம்
நடக்கப்போவது தெரியாமல்
அப்பாவியாய் சிரிச்சிக்கொண்டு
மண்வெட்டி வீரர்களை வரவேற்கும்!

அடுப்படியில் அரிசிமா இடியப்பம்
ஆவியில் அவியும்
இழந்தேங்காய் பால் சொதியும்
அடுப்பிலே கொதிக்கும்!

அரிந்தரிந்து வருவார்கள்
அறிவித்தல் கிடைத்தவர்கள்
தெரிந்தவர்கள் முன்வந்து
அடிப்போட்டு தொடர்வார்கள்!

ஊத்த மண்படையை
வெட்டி ஒத்த மூச்சிலே
கட்டி கலையாமல்
ஓரமாய் எறிவார்கள்!

சுற்றி நின்று கொண்டு
ஒருகூட்டம்
வெட்டிப்போட்ட மண்ணை
அகட்டி வழிப்பார்கள்!

காற்றுக்குறைந்த காஸ் லைட்டு
கண்ணயர ஆரம்பித்தால்
விழிப்பான
யாரோ ஒருவர் குரல் கொடுப்பார்
காற்றடிக்க வேண்டி நிற்பார்!

களைப்பிலே இளைப்பவர்க்கு
கோப்பையிலே தண்ணிவரும்
குவளையிலே தேநீர் வரும்
அப்பப்போ பகிடிகளும் உலா வரும்!

ஆள்மாறி ஆள் இறங்கி
மடு ஆழத்தில் வெட்டுவார்கள்
தோள் மறையும் குழிக்குள்ளே
பின் ஆள் மறையும் முழுதாக!

பத்துப்பதினைந்து அடிகளில்
மடுவின் விட்டம்
அதன் இரு மடங்கில்
குழியின் ஆழம்!

கவனக்குறைவாலே
சந்தம் சிந்தி விட்டால்
மண்வெட்டிகள் அந்தரத்தில் சந்தித்து
அரிதாய்
முத்தங்கள் கொடுத்துக்கொள்ளும்
அதில் சத்தங்களும் உருவாகும்
சந்தித்த சேதி சொல்லும்!!

மண்படைகள் பலவண்ணம்
அதுகண்டு மனம் எண்ணும்
இறைவனின் கை வண்ணம்!

பத்தடி போனாலும்
குழிக்குள்ளே நீர்வராது
ஆனால் நெஞ்சுக்குழியினிலே
வியர்வை நீர் வழிந்தோடும் !

மூச்சி வாங்கும்
பேச்சும் நீங்கும்!
ஓய்ச்சல் ஒளிவின்றி
வேலை நடந்தேறும்!

வெட்டுபவர்
நெற்றித்தண்ணி நிலத்திலே
வீழ்ந்து
ஊற்றுத் தண்ணியை
தேடிச்செல்லும்!

வியர்வையால்
வலை "பொடி"யும்
மடிச்சிக்கட்டிய சாரனும்
நனைந்து தொப்பலாகும்!

தட்டிலே பீடிக்கட்டுக்கள்
வட்டாவில் வெற்றிலைகள்
நேரத்துக்கு நேரம்
ஒவ்வொரு இடத்திலும்!
ஒற்றைக்காலில் நின்று
ஆட்களை தொட்டுச் செல்லும்!

வீட்டுக்காரச்சிறுவன்
எடுபிடி வேலைகள்
புதுக்கிணற்றடிக்கும்
அடுப்படிக்கும் அடிக்கடி
பாலமாய் இருப்பான்!

மலக்கல்லு வந்ததால
மறுகுளியும் தோண்டினதாம்
பழங்கத சொல்வாங்க
வயசிலே பெரியவங்க !

மடுவிடிஞ்சி போனதால
மறுபடியும் வெட்டினயாம்
நடுச்சாமம் முடிந்தபின்னும்!

களைத்தவர் பெயர்கூறி
கிண்டலும் செய்வாங்க
அடுத்தவர் பேர்சொல்லி
கைமாறச் சொல்வாங்க!

வெள்ளை மணல் பின்னால்
உள்ளிருந்து சிப்பி சேர்
மணலும் வரும்
உள்ளங்கால் பெருமணலை
தொடுகையிலே
உள்ளமெல்லாம் பூரிக்கும்!

பெருமணல் படையகற்ற
நனையுது மண்வெட்டி
சுருக்கென பாய்ந்த ஊற்று
நனைகுத்து மனதை தொட்டு !

இரண்டரை மூன்று மணி
தொடராக குழிவெட்டி
ஊற்றைக் கண்டவர்கள்
உடம்பிலே வியர்வை நீர்
குழிக்குள்ளே ஊற்று நீர்!

சரியாமல் வாயகட்டி
வாய்மண்ணை தூரகற்றி
சரியாக செய்வாங்க!

குழியடியை சமப்படுத்தி
படி வழியே ஏறிடுவார்
கடைசிக் கூட்டாளி!

கால்கழுவி கைகழுவி
எல்லோரும் வாசலில்
பன்பாயில் வரிசையாகி
இடியப்பம் சொதியுடன்
இராப்போசனம் அருந்திவிட்டு
இனிமையாக பிரிவார்கள்!

மேசனார் காலையில
நேரகாலமாய் வந்திடுங்க
கொட்டுக் கட்டிடுவோம்
வீட்டுக்காரரின் விண்ணப்பம்!

தம்பி அலாவுதீன்
கொட்டிறக்க நீதான்
வந்திடனும் வீட்டுக்காரரின்
அன்புக்கோரிக்கை!

நிம்மதியாய் ஒருகண்ணுக்கு
நித்திரை கொள்ளுவாறு
நம்மட சரிவுக்காக்கா!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 april 5th

குறிப்பு:
"ஆலிமு" -மார்க்க அறிஞர்
"கூனி"- அளவுக்கயிறை கட்டி நிறுத்தும் தடியினாலான கோல்
சொதி- தேங்காய்ப்பாலில் கருவாடு,தக்காளி சேர்த்து காய்ச்சப்படும் ஒரு சுவையான வெள்ளைக் கறி இடியப்பத்துக்கு மிகவும் பொருத்தமானது.
பொடி-பனியன்
கொட்டு-கிணறு ஆறடி உயரமான துண்டுகளால் வட்ட வடிவமாக கட்டப்படும்,ஒவ்வொரு துண்டும் கொட்டு எனப்படும்.

இலங்கை கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் கிணறு கட்டுவதற்காக குழிதோண்டுவார்கள் ,இக்குழி "துரவு" எனப்படும்.தனி ஒருவராய் அல்லாமல் ,பலர் சேர்ந்தே இந்த பெரிய வேலையை இலகுவாகவும் விரைவாகவும் செய்வார்கள்.கிராமிய வாழ்க்கையில் ஒருவரது நல்லது கெட்டதில் அவரது குடும்பத்தார்,அயலவர்,நண்பர்கள்,உறவினர் அனைவரும் பங்கு கொண்டு அந்நிகழ்வை சந்தோசமாக ஆரம்பித்து முடித்து வைப்பார்கள், பல மனிதவலு தேவையான வேலைகள் அப்போதிருந்த நெருக்கமான அன்னியோன்ய உறவு முறை மூலம் இலகுவாக குறைந்த செலவில் நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்டன.
இப்போது அயல் வீட்டுக்காரரின் முகங்கூட சிலருக்கு தெரியாது.

0 கருத்துக்கள்:

Post a Comment